

புதுடெல்லி: இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அமைப்பான ‘யுபிஐ’ விரைவில் அமெரிக்காவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் அங்கு வசிக்கும் இந்தியர்கள் தங்கள் உறவினர்களுக்குப் பணம் அனுப்புவது இன்னும் எளிதாகும். அமெரிக்காவின் பாங்க் ஆஃப் அமெரிக்கா, தனது பணப்பரிவர்த்தனை செயலியான ‘ஜெல்’ அமைப்பை இந்தியாவின் ‘யுபிஐ’ உடன் இணைப்பதற்கான முதற்கட்ட சோதனையில் ஈடுபட்டு வருகிறது.
இது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் செப்டம்பர் 9-ம் தேதி வெளியிட்ட பதிவில், “இரு நாடுகளுக்கும் இடையிலான பணப்பரிவர்த்தனையை எளிதாக்க பாங்க் ஆஃப் அமெரிக்காவின் ஜெல் மற்றும் யுபிஐ இடையிலான இணைப்பை ஏற்படுத்த முயற்சி நடைபெற்று வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது. 2026 இறுதிக்குள் இந்த சேவை பயன்பாட்டுக்கு வரும் என்று ஜெல் நெட்வொர்க்கை இயக்கும் ‘ஏர்லி வார்னிங் சர்வீசஸ்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.