

சென்னை: வாரத்துக்கு 5 நாட்கள் வேலைமுறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் வெள்ளிக்கிழமை (செப்.11) நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதனால், வங்கி சேவைகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, சென்னையில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளரும், வங்கி ஊழியர்கள் சங்கங்களின் ஐக்கிய மன்றத்தின் ஒருங்கிணைப்பாளருமான சி.எச்.வெங்கடாச்சலம் கூறியது: “வாரத்துக்கு 5 நாட்கள் வேலைமுறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இப்போது, மாதத்தில் இரண்டு சனிக்கிழமை விடுமுறை, இரண்டு சனிக்கிழமை வேலை என இருக்கிறது. அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும்.
கடந்த 2024-ம் ஆண்டு மார்ச்சில் கையெழுத்தான இருதரப்பு ஒப்பந்தத்தில், வாரத்தின் அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறையாக அறிவிக்க இந்திய வங்கிகள் சங்கம் ஒப்புக்கொண்டது.
இதற்கு பதிலாக, திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி வேலை நேரத்தை 40 நிமிடங்கள் வாடிக்கையார்கள் சேவை அதிகரிக்க ஊழியர்களும் ஒப்புக்கொண்டனர். இந்த ஒப்பந்தம் மத்திய நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு இரண்டரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் நிலுவையில் உள்ளது.
மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ரிசர்வ் வங்கி, எல்.ஐ.சி மற்றும் பங்குச் சந்தைகளுக்கு 5 நாட்கள் வேலைமுறை இருக்கும்போது, வங்கி ஊழியர்களுக்கு மட்டும் மறுக்கப்படுகிறது.
கூடுதல் வேலை நேரம் ஒதுக்கப்படுவதால் வாடிக்கையாளர் சேவை பாதிக்கப்படாது. தற்போதைய கடுமையான மன அழுத்தத்தைக் குறைக்க வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை அவசியம். எனவே, ஒப்புக்கொண்டப்படி, அனைத்து சனிக்கிழமையும் விடுமுறை அளிக்க வேண்டும்.
இதுதவிர, புதியதாக பணிக்கு சேர்ந்த ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கான மருத்துவக் காப்பீட்டு பிரீமியம் தொகையை வங்கிகளே முழுமையாக ஏற்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு தழுவிய வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் உள்பட 7 சங்கங்கள் பங்கேற்க உள்ளன. நாடு முழுவதும் 8 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்பார்கள்.
தமிழகத்தில் 60 ஆயிரம் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பங்கேற்பார்கள்” என்று அவர் கூறினர்.
இந்த வேலை நிறுத்தம் காரணமாக, வங்கி சேவைகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.