

வாஷிங்டன்: ஆப்பிள் நிறுவன சிஇஓ பொறுப்பில் இருந்து டிம் குக் விலக உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், அந்த நிறுவனத்தின் அடுத்த சிஇஓ யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 2011-ல் ஸ்டீவ் ஜாப்ஸ், சிஇஓ பொறுப்பில் இருந்து விலகிய பிறகு அந்த பொறுப்பை ஏற்றார் டிம் குக். அது முதல் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாபத்தை அவர் இரட்டிப்பு செய்யும் வகையில் செயல்பட்டார். அதன் பலனை நிறுவனத்துக்கு பெற்று தந்தார். இதனால் நிறுவனத்தின் சந்தை மதிப்பும் உயர்ந்தது.
வரும் செப்.1-ம் தேதி அன்று ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த சிஇஓ-வாக ஜான் டெர்னஸ் பதவி ஏற்பார் என அந்நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
சிஇஓ பொறுப்பில் இருந்து விலகுவது குறித்து ஆப்பிள் நிறுவன ஊழியர்களுக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். ஆப்பிள் சிஇஓ பணி தன் வாழ்வில் சிறப்பு சேர்த்ததாக அவர் தெரிவித்துள்ளார். புதிய சிஇஓ பொறுப்பேற்றதும் ஆப்பிள் நிறுவன நிர்வாக இயக்குனராக டிம் குக் பணியாற்ற உள்ளார்.
யார் அடுத்த சிஇஓ?
ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த சிஇஓ-வாக ஹார்டுவேர் இன்ஜினியரிங் பிரிவின் துணை தலைவர் ஜான் டெர்னஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் செப்.1-ம் தேதி அவர் அந்த பொறுப்பை ஏற்கிறார் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இவர் கடந்த 2001-ல் ஆப்பிள் நிறுவனத்தில் பணியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.