

சென்னை: திமுக ஒருபோதும் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியது:
“2021 சட்டமன்ற தேர்தலின்போது கருணாநிதியை விட மிக டேஞ்சரானவர் ஸ்டாலின் என சிலர் சொன்னார்கள். கருணாநிதி உடன் என்னை எப்போதும் ஒப்பிட முடியாது. அப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாட்டை வஞ்சிக்கவும், நம் வளர்ச்சியை தடுக்க நினைப்பவர்களுக்கு நான் எப்போதும் டேஞ்சர்தான்.
தமிழ்நாட்டை எப்போதும் வஞ்சிக்கும் ஒன்றிய அரசை எதிர்த்து தமிழ் மக்களுக்காக சண்டை செய்துள்ளதை பெருமையாக சொல்லிக் கொள்ள முடியும். சமூக நீதியுடன் கூடிய வளர்ச்சி என்பதுதான் நமது உண்மையான குறிக்கோள். அந்த வகையில் பல்வேறு மக்கள் திட்டங்களை இந்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தி உள்ளோம்.
கல்வி ஒன்றுதான் நம்மிடமிருந்து யாரும் திருட முடியாத சொத்து. அந்த வகையில் மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். இந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியின் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி கண்டுள்ளது.
ஒன்றிய அரசு தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை சார்ந்த மசோதாவை கடந்த வாரம் மக்களவையில் கொண்டு வந்தது. அந்த மசோதாவை எதிர்த்தும், எரித்தும் போராட்டம் செய்தோம். அவர்களின் அடிமையான எடப்பாடி பழனிசாமி இங்கு ஆட்சிக்கு வந்து விட்டால் என்ன மாதிரியான கொடுமையெல்லாம் நடக்கும் என நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை.
திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அப்படி பொய் சொல்லி பாஜக பிரச்சாரம் செய்து வருகிறது. திமுக ஒருபோதும் இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக எவ்வளவோ கொடுமை செய்து வருகிறார்கள். ஆனால், சிறுபான்மையினர் மக்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை என்றால் திமுக களத்தில் இருக்கும். 1975-ல் மிசா போரை அன்றைய ஒன்றிய அரசு நடத்திய போது அதை எதிர்த்து நடத்தினேன். இப்போதும் நமக்கு எதிரான போரை எதிர்த்து நிற்கிறேன்” என தெரிவித்துள்ளார்.