

புதுடெல்லி: நாட்டின் சில்லறை விற்பனை பணவீக்கம் கடந்த பிப்ரவரி மாதத்தில் 3.21% ஆக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஜனவரி மாதத்தில் 2.74% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்ட நுகர்வோர் விலை குறியீட்டு புள்ளிவிவரங்களின்படி, உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாகவே இந்தப் பணவீக்க உயர்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
2024-ம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்டு கணக்கிடப்பட்ட புதிய வரிசை புள்ளிவிவர அடிப்படையில் இந்தத் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஜனவரி மாதத்தில் 2.13 சதவீதமாக இருந்த உணவுப் பொருட்கள் பணவீக்கம், பிப்ரவரி மாதத்தில் 3.47 சதவீதமாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக, தக்காளி மற்றும் காலிஃபிளவர் போன்ற காய்கறிகளின் விலை உயர்வு சந்தையில் எதிரொலித்துள்ளது. மேலும், தேங்காய் மற்றும் கொப்பரைத் தேங்காய் விலையும் அதிகரித்துள்ளது.
அதேசமயம், வெங்காயம், உருளைக்கிழங்கு, பூண்டு, துவரம் பருப்பு மற்றும் லிச்சி பழம் ஆகியவற்றின் விலையில் சரிவு காணப்பட்டுள்ளது. பணவீக்க விகிதமானது கிராமப்புறங்களில் 3.37% ஆகவும், நகர்ப்புறங்களில் 3.02% ஆகவும் பதிவாகியுள்ளது.
நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு சற்று அதிகமாக இருப்பது புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.