மூலப்பொருட்கள் விலையேற்றம், தொழிலாளர் பற்றாக்குறையால் கரூரில் கடும் நெருக்கடியை சந்திக்கும் ஜவுளித் தொழில்

மூலப்பொருட்கள் விலையேற்றம், தொழிலாளர் பற்றாக்குறையால் கரூரில் கடும் நெருக்கடியை சந்திக்கும் ஜவுளித் தொழில்
Updated on
2 min read

கரூர்: மூலப்பொருட்களின் விலையேற்றம், தொழிலாளர் பற்றாக்குறையால் கரூர் ஜவுளித் தொழில் கடும் நெருக்கடியில் உள்ளதாக ஜவுளி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.

கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் சங்க உறுப்பினர்கள் கூட்டம், சங்ககூட்டரங்கில் நேற்று முன்தினம்நடைபெற்றது. இக்கூட்டத்தில், தற்போதைய ஜவுளித் தொழிலின் சவால்கள், உற்பத்தி தடைகள், ஏற்றுமதி துறையில் உருவாகி வரும் நெருக்கடிகள் குறித்து விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

குறிப்பாக கடந்த சில மாதங்களாக ஜவுளி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை 30 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை உயர்ந்திருப்பது குறித்து உறுப்பினர்கள் கடும் அதிருப்தியை தெரிவித்தனர். இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறியது: மேற்கு ஆசிய போர் பதற்றத்தால் பெட்ரோலியம் சார்ந்த மூலப்பொருட்களான பாலியஸ்டர், சாயத் தொழிலுக்கான ரசாயனங்கள், பாலிதீன், பேக்கிங் பொருட்கள் உள்ளிட்ட ஜவுளிஉற்பத்திக்கு அத்தியாவசிய மான பொருட்களின் விலை திடீர் உயர்வை சந்தித்துள்ளது.

மேலும், சர்வதேச கப்பல் போக்குவரத்து தாமதங்கள், இறக்குமதி, சரக்குகளின் பற்றாக்குறை காரணமாக சாயமிடுதல், பிரின்டிங், பிற ஜாப்வொர்க் செயல்முறைகளின் செலவுகள் பெருமளவில் உயர்ந்துள்ளன. நாட்டில் பருத்தி உற்பத்தியில் முன்னணியில் இருந்தாலும், பருத்தி நூல் விலையேற்றம் செயற்கையாகவே தெரிகிறது.

அதேபோல, கரூர் ஜவுளித் துறையில் அதிகமாக பயன்படுத்தப்படும் மறுசுழற்சி செய்யப்பட்ட பருத்தி, பாலியஸ்டர் கலவை நூல்களின் விலையும் 10 முதல் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இத்துடன், இங்கு பணிபுரிந்து வந்த வெளிமாநில தொழிலாளர்கள் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். மேலும், உள்ளூர் தொழிலாளர்களின் வருகையும் குறைந்துள்ளதால், உற்பத்தி நடவடிக்கைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக ஊதியச் செலவுகளும் கணிசமாக உயர்ந்துள்ளன. இத்தகைய சூழலில், உற்பத்தியை தொடர்வதும், புதிய ஏற்றுமதி ஒப்பந்தங்களை மேற்கொள்வதும் தொழில் நிறுவனங்களுக்கு கடுமையான நிதிச் சுமையாக மாறியுள்ளது. இந்த நிலைநீடித்தால், கரூர் ஜவுளித் துறையின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்படுவதுடன், ஏற்றுமதிவளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு களுக்கும் பெரிய பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, மத்திய, மாநில அரசுகளிடம் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்த கரூர் ஜவுளி உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் சங்கம் முடிவு செய்துள்

ளது. ஜவுளித் துறைக்கு உடனடி நிவாரண, ஆதரவு திட்டங்களை அறிவிக்க வேண்டும். மூலப்பொருட்களின் விலை நிலைத்தன் மையை உறுதி செய்ய வேண்டும். ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வட்டி மானியம், நிதி உதவிகள்வழங்கவேண்டும். தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க சிறப்பு திட்டங்கள் உருவாக்கவேண்டும். சிறு, நடுத்தர ஜவுளி உற்பத்தி நிறுவனங்களுக்கு பாதுகாப்பு, ஊக்கத் திட்டங்கள் வழங்கவேண்டும்.

மேலும், கரூர் ஜவுளி நிறுவனங்களிலிருந்து பொருட்களை வாங்கும் உள்நாட்டு, வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு தற்போதைய சூழ்நிலைகளை விளக்கி, மூலப்பொருட்களின் விலையேற்றம், தொழிலாளர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு தயாரிப்புகளின் விலையை மறு ஆய்வு செய்யவும், உற்பத்தி, விநியோகத்துக்கான கால அவகாசத்தை நீட்டிக்கவும் வேண்டுகோள் விடுக்கும் வகையில் கடிதம் அனுப்ப சங்கம் முடிவு செய்துள்ளது.

அதேபோல, மூலப்பொருட்கள் வழங்கும் விற்பனையாளர்கள், சாயம், ஜாப்வொர்க் நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தொடர்புடைய தரப்பினரும் தற்போதைய சூழ்நிலையை உணர்ந்து, அடிக்கடி விலை உயர்வு செய்யாமல், கரூர் ஜவுளித் துறையைப் பாதுகாக்கும் நோக்கில் தொழில் நிறுவனங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

கரூர் ஜவுளித் துறை என்பது ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. எனவே, இந்த நெருக்கடியான சூழலில் வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள், அனைத்து தொடர்புடைய தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் இந்த முக்கியமான ஏற்றுமதி துறையை பாதுகாக்க முடியும் என்று சங்கம் தெரிவித்துள்ளது.

மூலப்பொருட்கள் விலையேற்றம், தொழிலாளர் பற்றாக்குறையால் கரூரில் கடும் நெருக்கடியை சந்திக்கும் ஜவுளித் தொழில்
நிதியமைச்சர் ஆனார் செங்கோட்டையன்: முதல்வர் விஜய், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in