

மும்பை: இந்தியாவின் முன்னணி மற்றும் மிகப்பெரிய தொழில் குழுமமான டாடா குழுமத்தின் தாய் நிறுவனம் டாடா சன்ஸ். இந்நிறுவனத்தின் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த என்.சந்திரசேகரன் 2017-ல் பொறுப்பேற்றார். அவருடைய தற்போதைய பதவிக்காலம் 2027 பிப்ரவரி 20-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
எனவே சந்திரசேகரனின் பதவிக் காலத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி நடைபெற்ற டாடா சன்ஸ் வாரியக் குழுவின் கூட்டத்தில் தீர்மானம் முன்வைக்கப்பட்டது.
ஆனால், ரத்தன் டாடாவின் சகோதரர் நோயல் டாடா தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்ததால் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. டாடா சன்ஸ் வாரியக் குழு புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகளை தொடங்கியது. இந்நிலையில், மும்பையில் நேற்று நடைபெற்ற டாடா சன்ஸ் வாரியக் குழுக் கூட்டத்தில், அதன் தலைவராக சந்திரசேகரனுக்கு மேலும் 5 ஆண்டுகளுக்கு பதவி நீட்டிப்பு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது.
நோயல் டாடா எதிர்ப்பு
இது தொடர்பாக அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு தலைவரின் நியமனத்துக்கு, அறக்கட்டளையின் நியமன இயக்குநர்களில் பெரும்பான்மையானோர் ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என டாடா சன்ஸ் நிறுவனத்தின் விதிகள் கூறுகின்றன.
இந்த நிபந்தனை முதல் நியமனத்துக்கும், மறுநியமனத்துக்கும் பொருந்தும். அறக்கட்டளையின் நியமன இயக்குநர்களில் ஒருவரான நோயல் டாடா, பதவி நீட்டிப்பு தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்ததால், அந்த நியமனம் சட்டப்படி செல்லாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.