

கட்டைவிரல் தொடுதலில் ஷாப்பிங். ‘இப்போது வாங்கு, அப்புறம் கட்டு’ (BNPL) போன்ற சலுகைகள் கேட்பதற்கு எவ்வளவு கவர்ச்சியாக இருக்கிறதோ, அதே அளவு ஆபத்தானதாக மாறியுள்ளன.
தமிழகத்தில் பல லட்சம் குடும்பங்களின் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கும் காரணிகளில் ஒன்று, கிரெடிட் கார்டுகளின் கடன் நிலுவைத் தொகை. அது எவ்வளவு தெரியுமா? ரூ.2.86 லட்சம் கோடி!
இது வெறும் எண் அல்ல; ஆயிரக்கணக்கான மக்களின் நிம்மதியற்ற இரவுகளின் விலை!
கையில் பணம் இல்லை என்றாலும் ‘கார்டு இருக்கிறதே’ என யோசிக்காமல் ஸ்வைப் செய்த பலரும், இன்று வட்டிக்கு மேல் வட்டி கட்டி அதில் இருந்து மீள முடியாமல் திணறுகிறார்கள்.
ஏறக்குறைய இரட்டிப்பு ஆகியிருக்கும் தமிழகத்தின் கிரெடிட் கார்டு கடன் நிலுவையின் பின்னணி என்ன? ஆபத்தான இந்த பொறியில் இருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்து சற்று தெளிவாகப் பார்ப்போம்.
தமிழகத்தை உலுக்கிய தகவல்
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் ராமநாதபுரம் எம்பி கே.நவாஸ்கனி, தமிழகத்தில் கிரெடிட் கார்டுகளின் நிலுவை குறித்து எழுப்பிய எழுத்துப்பூர்வமான கேள்விக்கு மத்திய நிதி அமைச்சகம் பதில் அளித்தது. அதில் அதிர்ச்சியளிக்கும் பல்வேறு புள்ளி விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகள் வழங்கிய கிரெடிட் கார்டுகளின் நிலுவைத் தொகை, கடந்த 5 ஆண்டுகளில் இரண்டு மடங்காகியுள்ளது.
அதாவது, 2022 மார்ச்சில் ரூ.1.47 லட்சம் கோடியாக இருந்த இந்தத் தொகை, 2026 மார்ச்சில் ரூ.2.86 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
இந்த நிலுவைத் தொகையில் தனியார் வங்கிகளின் பங்கே மிக அதிகம். தனியார் வங்கிகளின் கடன் நிலுவை 2022-ம் ஆண்டில் ரூ.1.46 லட்சம் கோடியிலிருந்து 2026 மார்ச்சில் ரூ.2.81 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அதேசமயம், பொதுத்துறை வங்கிகளுக்கான நிலுவைத் தொகை ரூ.1,123 கோடியிலிருந்து ரூ.5,667 கோடியாக உயர்ந்துள்ளது.
எந்த வங்கிக்கு அதிக நிலுவைத் தொகை?
தனியார் வங்கிகளில் அதிகபட்சமாக ஹெச்டிஎஃப்சி வங்கிக்குத்தான் அதிக நிலுவைத் தொகை உள்ளது. அந்த வங்கிக்கு மார்ச், 2022-ல் ரூ.71 ஆயிரத்து 928 கோடியாக இருந்த நிலுவை, மார்ச், 2026-ல் ரூ.1.12 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
அதைத் தொடர்ந்து பிற வங்கிகளின் நிலுவை தொகை விவரங்கள்:
> ஐசிஐசிஐ வங்கி - ரூ.54,865 கோடி
> ஆக்ஸிஸ் வங்கி - ரூ.49,702 கோடி
> ஆர்பிஎல் வங்கி - ரூ.16,430 கோடி
> கோடக் மகிந்திரா வங்கி - ரூ.12,852 கோடி
> இன்டஸ்இன்ட் வங்கி - ரூ.9,962 கோடி
குறிப்பாக, ஐடிஎஃப்சி வங்கி நிலுவை ரூ.2,007 கோடியிலிருந்து ரூ.9,165 கோடியாகவும், யெஸ் பேங்க் நிலுவை ரூ.2,159 கோடியிலிருந்து ரூ.8,827 கோடியாகவும் அதிவேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளன.
ஆர்பிஐ வழிகாட்டுதல்கள் என்ன?
மாநில வாரியாகத் தரவுகளைப் பராமரிக்காவிட்டாலும், ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களைப் பாதுகாக்க சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அவை.
1. கார்டுகள் வழங்குதல் மற்றும் கடன் வரம்புகளை உயர்த்துவதில் வாடிக்கையாளரின் ஒப்புதலும் வெளிப்படைத் தன்மையும் அவசியம்.
2. சேவை விதிகள், வட்டி விகிதம் மற்றும் மறைமுக கட்டணங்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.
3. நிதிசார் விழிப்புணர்வு மற்றும் கடன் ஒழுக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். (தமிழகத்தில் 2025-26 நிதி ஆண்டில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 515 விழிப்புணர்வு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன).
மாதம் ரூ.2 லட்சம் கோடி செலவு
ரிசர்வ் வங்கி தரவுகளின்படி, இந்தியாவில் மொத்தம் 1.20 கோடி கிரெடிட் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. இவற்றின் மூலம் மாதந்தோறும் ரூ.2 லட்சம் கோடி செலவு செய்யப்படுகிறது.
பெரும்பாலும் ஆன்லைன் ஷாப்பிங், சுற்றுலா, பொழுதுபோக்கு மற்றும் ஆடம்பரப் பொருட்கள் வாங்குவதற்கே இவை பயன்படுகின்றன.
வீடுகளின் சில்லறைக் கடன் (household debt) செப்டம்பர் 2025-ல் நாட்டின் மொத்த ஜிடிபியில் 45.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. சுருக்கமாகச் சொன்னால், இந்தியர்களின் வருமானம் மற்றும் சேமிப்பு வளர்ச்சியை விட, கடன் பெறும் வேகம் அதிகமாக உள்ளது.
கடன்கள் இரட்டிப்பாகக் காரணங்கள்
> ஆன்லைன் வணிகத் தளங்கள் வழங்கும் ‘பிஎன்பிஎல்’ (BNPL) மற்றும் வட்டி இல்லாத இஎம்ஐ சலுகைகள் மக்களைத் தேவைக்கு அதிகமாக செலவழிக்கத் தூண்டுகின்றன.
> சமூக ஊடகங்களின் தாக்கம் மற்றும் உயர்ந்து வரும் விலைவாசி உயர்வைச் சமாளிக்க முடியாத சூழல் காரணமாக, மாதச் சம்பளக்காரர்களும் இளைஞர்களும் அத்தியாவசியச் செலவுகளுக்கும் கிரெடிட் கார்டுகளைச் சார்ந்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
> குறைந்தபட்ச வருமானம் கொண்ட நபர்களுக்கு வங்கிகள் மிக எளிதாகக் கடன் வரம்பை உயர்த்துகின்றன. இது வாடிக்கையாளர்களின் செலவு செய்யும் பழக்கத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.
கடனிலிருந்து எப்படி தப்பிப்பது?
1. கிரெடிட் கார்டில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தும்போது, குறைந்தபட்சத் தொகையை (Minimum Due) மட்டும் செலுத்தினால், எஞ்சிய தொகைக்கு ஆண்டுக்கு 36 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை வட்டியும் ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும். எனவே, எப்போதும் முழு நிலுவை தொகையையும் செலுத்த வேண்டும்.
2. மொத்த கடன் வரம்பில் அதிகபட்சம் 30 சதவீதத்துக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. அதற்கு மேல் பயன்படுத்தினால் அது சிபில் ஸ்கோரைப் பாதிக்கும்.
3. கார்டு வட்டி அதிகமாக இருக்கும்போது, அதை அடைக்க 12 சதவீதம் அல்லது 14 சதவீதம் வட்டி கொண்ட தனிநபர் கடன் அல்லது நகைக் கடன் பெற்று, கிரெடிட் கார்டு கடனை மொத்தமாக அடைப்பது அதிலிருந்து தப்பிக்க சிறந்த வழி.
4. தூண்டுதலால் பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்க, கார்டில் சர்வதேசப் பரிவர்த்தனைகள் மற்றும் ‘டேப் அண்ட் பே’ வசதிகளை நிறுத்தி வைக்க வேண்டும்.