தொலைக்காட்சி விளம்பரங்களுக்கான 12 நிமிடக் கட்டுப்பாடு நீக்கம்: மத்திய அரசு உத்தரவு

தொலைக்காட்சி விளம்பரங்களுக்கான 12 நிமிடக் கட்டுப்பாடு நீக்கம்: மத்திய அரசு உத்தரவு
Updated on
1 min read

புதுடெல்லி: தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களுக்கான 12 நிமிடக் கட்டுப்பாட்டை ரத்து செய்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தொலைக்காட்சித் துறையில் நியாயமான போட்டியையும், தொழிலை எளிதாக நடத்துவதையும் ஊக்குவிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006-ஆம் ஆண்டு தொலைக்காட்சித் துறை சிறிய அளவிலும், அனலாக் கேபிள் நெட்வொர்க்குகளை மட்டுமே நம்பியும் இருந்த காலத்தில் இந்த 12 நிமிட விளம்பரக் கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. அப்போது நாட்டில் வெறும் 62 சேனல்கள் மட்டுமே இயங்கி வந்தன. 

ஆனால், தற்போது கேபிள் டிவியின் முழுமையான டிஜிட்டல் மயமாக்கல், டிடிஎச் மற்றும் ஐபிடிவி போன்ற தொழில்நுட்ப வளர்ச்சியால் தொலைக்காட்சி சேனல்களின் எண்ணிக்கை 900-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதனால் பார்வையாளர்களுக்குப் பலதரப்பட்ட தேர்வுகளும் போட்டிகளும் உருவாகியுள்ளன.

மேலும், எவ்வித விளம்பரக் கட்டுப்பாடுகளும் இன்றி இயங்கும் டிஜிட்டல் ஊடகங்களின் வளர்ச்சியால், பாரம்பரியத் தொலைக்காட்சி நிறுவனங்கள் பெரும் வர்த்தக சவால்களைச் சந்தித்து வந்தன. டிஜிட்டல் தளங்களுக்கு இணையான வாய்ப்பை வழங்கவே இந்த விதி நீக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் டெல்லி உயர் நீதிமன்றம் இந்த 12 நிமிட விதியைச் செல்லுபடியாகும் என்று உறுதி செய்திருந்த போதிலும், தற்போதைய சந்தை சூழலைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஒரு மணி நேரத்துக்கு 10 நிமிடங்கள் வணிக விளம்பரங்களும், 2 நிமிடங்கள் சுய விளம்பரங்களும் மட்டுமே ஒளிபரப்பப்பட வேண்டும் என்ற '10+2' விதிமுறை இத்துடன் முடிவுக்கு வருகிறது. இந்திய விளம்பரதாரர்கள் சங்கம் மற்றும் விளம்பர நிறுவனங்கள் பல்வேறு மாற்று யோசனைகளை முன்வைத்த போதிலும், முழுமையானக் கட்டுப்பாட்டு நீக்கத்தையே அரசு தேர்வு செய்துள்ளது. இப்புதிய விதிமுறைகள் தொடர்பான அரசாணை அரசிதழில் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டவுடன் உடனடியாக அமலுக்கு வரவுள்ளன.

தொலைக்காட்சி விளம்பரங்களுக்கான 12 நிமிடக் கட்டுப்பாடு நீக்கம்: மத்திய அரசு உத்தரவு
“இளைஞர்களின் நலனுக்காக தேர்வு முறைகளில் சீர்திருத்தங்கள்...” - குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in