திருப்பூரில் பின்னலாடைத் தொழில் முடக்கம்: தீபாவளிக்குப் பிறகு போராட்டம் நடத்த முடிவு

திருப்பூரில் பின்னலாடைத் தொழில் முடக்கம்: தீபாவளிக்குப் பிறகு போராட்டம் நடத்த முடிவு
Updated on: 
1 min read

திருப்பூர்: திருப்பூரில் பின்னலாடைத் தொழில் எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்குத் தீர்வு காண வலியுறுத்தி, தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்த அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.

அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்த திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் எம்.பி.முத்து ரத்தினம் பேசியதாவது: திருப்பூரில் பின்னலாடை உற்பத்திக்குத் தேவையான நூல் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வு, சாயமிடும் கட்டண உயர்வு ஆகியவற்றால் உற்பத்திச் செலவு 50 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.

இதனால் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் சந்தைகளில் புதிய ஆர்டர்களைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சுமார் 10 லட்சம் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வரும் திருப்பூரில், 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களாக உள்ளன.

ஏற்கெனவே 50 சதவீத நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக எஞ்சியுள்ள நிறுவனங்களும் மூடப்படும் அபாயத்தில் உள்ளன.

பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களால் அரசை எளிதில் அணுக முடிகிறது. ஆனால், நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளால் அரசை அணுகுவதில் சிக்கல் உள்ளது.

எனவே, திருப்பூர் வடக்கு, தெற்கு சட்டப்பேரவைத் தொகுதிகளின் உறுப்பினர்கள் மற்றும் மக்களவை உறுப்பினர் வாயிலாக, தமிழக முதல்வரிடம் தங்களது கோரிக்கைகளைக் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம். மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசு இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால், தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

ஆலோசனைக் கூட்டத்தில் திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் டிரேடர்ஸ் அசோசியேஷன், திருப்பூர் மாவட்ட செக்கிங், அயர்னிங், பேக்கிங் உரிமையாளர்கள் சங்கம், நூற்பாலை உற்பத்தியாளர்கள் சங்கம், பாலிபேக் உற்பத்தியாளர்கள் சங்கம், லேபிள் அசோசியேஷன், அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட 40 சங்கங்களின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திருப்பூரில் பின்னலாடைத் தொழில் முடக்கம்: தீபாவளிக்குப் பிறகு போராட்டம் நடத்த முடிவு
“மனிதநேயத்தை மூச்சாகக் கொண்டு வாழ்ந்த தேவரின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்”- முதல்வர் விஜய்

X