

புதுடெல்லி: ட்ரோன் உற்பத்தியில் சுயசார்பு மிக அவசியம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். டெல்லியில் 2026-ம் ஆண்டுக்கான தேசிய பாதுகாப்பு தொழிற்சாலைகளுக்கான மாநாடு நேற்று தொடங்கியது.
இதில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: ரஷ்யா - உக்ரைன் நாடுகளும், இஸ்ரேல் - ஈரான் நாடுகளும் இன்று போரில் ஈடுபட்டு வருகின்றன. இதனை ஒட்டுமொத்த உலகமும் பார்த்து கொண்டிருக்கிறது.
வருங்காலத்தில் போர் தளவாடங்களில் ட்ரோன்கள் மற்றும் ட்ரோன்கள் ஒழிப்பு ஆயுதங்கள் ஆகியவற்றுக்கான தொழில்நுட்பங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
இதன் தொடர்ச்சியாக ட்ரோன் உற்பத்திக்கான சுற்றுச்சூழலியலை நிறுவ வேண்டியது, மிக அவசரத் தேவையாக அமைந்துள்ளது. ட்ரோன் உற்பத்தியை அதிக அளவில் நாம் செய்ய வேண்டும். ட்ரோன் உற்பத்தியில் நாம் சுயசார்புடன் இருக்க வேண்டும். இது உற்பத்தி என்ற அளவில் மட்டுமல்லாமல் உபகரணங்கள் அளவிலும் இருக்க வேண்டியது அவசியமாகும். இவ்வாறு அவர் பேசினார்.