கிம் வென்ற ‘கதை’ - இது வடகொரிய தேர்தல் கூத்து!
வட கொரியாவில் ஞாயிற்றுக்கிழமை காதும் காதும் வைத்த மாதிரி ஆளுங்கட்சியின் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடந்துள்ளது. அந்தத் தேர்தலில் தற்போதைய தலைவர் கிம் ஜோங் உன்-க்கு ஆதரவாக 99.93% வாக்குகள் பதிவாகியுள்ளது. மொத்தமுள்ள 687 இடங்களிலும் ஆளும் கட்சியே வெற்றி பெற்றுள்ளது. ஆளும் கட்சியின் தலைவராக கிம் ஜோங் உன்னை தேர்வு செய்யும் இந்தத் தேர்தலில் கிம் வேட்பாளரே இல்லை என்பது கூடுதல் ருசிகரத் தகவல்.
வட கொரியாவில் ஆளும் கொரிய தொழிலாளர்கள் கட்சிதான் அங்கு சர்வாதிகாரம் பொருந்திய கட்சி. சில குட்டிக் குட்டி அரசியல் கட்சிகள் பெயரளவில் இயங்குகின்றன. அவர்களும் ஆளும் கூட்டணியின் கட்டுப்பாட்டில் தான் இயங்குவார்களே தவிர, அவர்களுக்கென்று எந்த சுயமான அரசியல் அதிகாரமும் இல்லை. அதனால் தேர்தல் களத்தில் அவர்கள் போட்டியாளர்கள் இல்லை.
தேர்தலில் ஆளுங்கட்சி சார்பில் யார் போட்டி என்பதை கட்சித் தலைமை முடிவு செய்கிறது. ஒரு தொகுதிக்கு ஒரு வேட்பாளர் தான் வாக்காளர்கள் முன்னால் இருக்கும் சாய்ஸ். அதனால் வட கொரிய தேர்தலில் வாக்காளர்கள் எஜமானர்கள் அல்ல. வாக்கை செலுத்த ஒரு கருவிதான் அவர்கள். தேர்தல் மட்டுமல்ல ஊடகமும், தேர்தல் தொடர்பான மக்கள் கருத்துகளும் அரசுக் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது.
தேர்தல் நடைமுறையும் கூட ஜனநாயக நாடுகளைப் போல் ரகசிய வாக்கெடுப்பில் நடப்பதில்லை. ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும், ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவை அங்கீகரிக்கும் வகையிலும் மட்டுமே தேர்தல் நடைபெறுகிறது. வட கொரிய தேர்தல் நடைமுறையையும், அங்கே எதிர்க்கட்சியே இல்லை என்பதையும் தெரிந்து கொண்டதால், அங்கு 99.93% வாக்குகள் மட்டுமே பதிவானது எப்படி? 0.07% எங்கே போயின என்ற கேள்வி இப்போது உங்களுக்கு எழலாம்.
வாக்காளர்கள் தங்கள் முன்னால் இருக்கும் ஒற்றை வேட்பாளருக்கு வாக்களிக்காமல் இருப்பதற்கான வாய்ப்பு தொழில்நுட்ப ரீதியாக இருந்தாலும் கூட, அதில் ரகசியத் தன்மை ஏதும் இல்லாததால் அப்படி வாக்களித்தால் அரசு துரோக நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். இதனால், இந்த 0.07% நெகடிவ் வாக்கு என்பது வெறும் அடையாளம். போலிக் கணக்கு என்று எளிமையாகச் சொல்லலாம். வட கொரியாவில் ஜனநாயகம் இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக செய்யப்படும் சால்ஜாப்பு இது.
வட கொரிய தேர்தல் என்பது கிம் ஜோங் உன்னின் கட்டுப்பாட்டில் நிகழும் தலைமையை கட்டளைப்படி ஒருமனதாக, முழுமையாக ஆதரிக்கும் நடைமுறையே தவிர, அரசியல் போட்டிகளின் ஊடே நடக்கும் ஜனநாயகத் தேர்தல் அல்ல. இதனால் தன் உலகம் முழுவதுமான ஊடகங்கள் வட கொரிய தேர்தலை ‘ரப்பர் ஸ்டாம்ப் தேர்தல்’ என்றழைக்கின்றன.