

மும்பைப் பங்குச் சந்தையில் புதன்கிழமை 30 நிமிட வர்த்தகத்தில் சென்செக்ஸ் மளமளவென 1,000 புள்ளிகளை இழந்தது. தேசியப் பங்குச்சந்தையான நிஃப்டியும் கடுமையாக சரிந்து இறுதியில் 4 நாட்கள் லாபத்தை துடைத்துக்கொண்டுச் சென்றது. முதலீட்டாளர்களுக்கு இன்று ஒரே நாளில் ஏறக்குறைய ரூ.8 லட்சம் கோடி (சொத்து மதிப்பு) அளவுக்கு பங்குகளில் இழப்பைச் சந்தித்தார்கள் அல்லது சொத்து மதிப்பு குறைந்தது.
வர்த்தகம் முடிவில் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1,677 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 76,503 புள்ளிகளில் முடிந்து, 2 சதவீதம் சரிவை எதிர்கொண்டது. அதேபோல தேசியப் பங்குச் சந்தையான நிஃப்டியில் 517 புள்ளிகள் குறைந்து, 23,882 புள்ளிகளில் வர்த்தகம் சரிவில் முடிந்தது.
திடீர் வீழ்ச்சிக்கு காரணம் என்ன?
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பேசிய வார்த்தைகள்தான் இந்தியப் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட முக்கியக் காரணமாக அமைந்தது. நேட்டோ படையின் ஆண்டு உச்சி மாநாட்டில் அதிபர் ட்ரம்ப் பங்கேற்றிருந்தார். அப்போது ஈரானுடன் சமீபத்தில் செய்திருந்த போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து அவர் பேசுகையில் “என்னைப் பொறுத்தவரை ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தம் முடிந்துவிட்டது.
ஈரானுடன் எனக்கு இனிமேல் எந்த ஒப்பந்தமும் செய்ய விருப்பமில்லை. அந்நாட்டு தலைவர்கள் அற்ப புத்தி படைத்தவர்கள். கொடூரமானவர்கள், வன்ம புத்தி கொண்டவர்கள். அவர்களிடம் அணு ஆயுதம் இருந்தால், நிச்சயமாக பயன்படுத்தி இருப்பார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இந்தப் பேச்சு, ஈரான்- அமெரிக்கா இடையே மீண்டும் போரை வலுப்படுத்தும் சூழலை உண்டாக்குமோ என்ற அச்சத்தை முதலீட்டாளர்களுக்கு ஏற்படுத்தியதுதான் சந்தையில் வீழ்ச்சி ஏற்பட முக்கியக் காரணங்களில் ஒன்றாகும்.
போர் நிறுத்த ஒப்பந்தம்
ஈரான் - அமெரிக்கா இடையே கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட போர் பல வாரங்களுக்கு நீடித்தது. உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் சரக்கு கப்பல் போக்குவரத்து வழியான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால், உலகளவில் கச்சா எண்ணெய் சப்ளை தடைபட்டு விலை கடுமையாக உயர்ந்தது. இதையடுத்து, இரு நாடுகளும் அமைதிப் பேச்சுக்கு முன்வந்து 60 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டன.
ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் காலக்கட்டத்தில், கச்சா எண்ணெய் விலை பேரல் 130 டாலர் வரை உயர்ந்த நிலையில், போர் நிறுத்தம் ஏற்பட்டதும் படிப்படியாக இறங்கி, பேரல் 70 டாலர் வரை சரிந்தது.
சமீபத்தில், அமெரிக்க ட்ரோன் விமானமான யுஎஸ்-எம்கியூ9 ஆளில்லா விமானம் தங்கள் வான் எல்லைக்குள் வந்ததாகக் கூறி பஹ்ரைன், குவைத் பகுதியில் ஈரானின் புரட்சிகர காவல் படை (ஐஆர்ஜிசி) தாக்குதல் நடத்தியது. இதற்கு அமெரிக்கா பதிலடியாக எங்கள் கண்காணிப்பின் மீது ஈரான் அத்துமீறியுள்ளது என்று தெரிவித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் உருவாகும் பதற்றம் நிலவியது.
இந்தச் சூழலை மேலும் கொதிப்படையச் செய்யும் விதத்தில் அதிபர் ட்ரம்ப், ஈரானுடன் ஒப்பந்தம் முறிந்துவிட்டதாக தெரிவித்த கருத்து, முதலீட்டாளர்களை கலக்கம் அடையச் செய்தது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு
ஈரான் - அமெரிக்கா இடையே புதிதாக மோதல் ஏற்படலாம் என்ற அச்சத்தால் உலக அரசியலில் பதற்றம் தொற்றிக்கொண்டது. இதனால் கச்சா எண்ணெய் சப்ளையில் மீண்டும் சிக்கல் வரலாம் என்பதால், அதன்விலை திடீரென 6.5% அதிகரித்து பேரல் 78 டாலராக அதிகரித்தது. இந்தக் காரணமும் முதலீட்டாளர்களுக்கு பதற்றத்தைக் கொடுத்தது.
உலகளவில் மந்தமான சந்தைச் சூழல்
ஈரான் - அமெரிக்கா இடையே மீண்டும் மோதல் உருவாகும் சூழல் இருப்பதை அறிந்து, உலக நாடுகளின் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யும் ஆர்வத்தைக் குறைத்ததால், மந்தமான நிலை காணப்பட்டது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசிய வார்த்தைகளால் ஐரோப்பிய பங்குச் சந்தைகளான பிரிட்டனின் எப்டிஎஸ்இ, பிரான்சின் சிஏசி, ஜெர்மனியின் டேக்ஸ், ஆசியச் சந்தைகளான ஜப்பானின் நிக்கி, தென் கொரியாவின் கோஸ்பி ஆகியவை சரிவுடன் வர்த்தகத்தை முடித்தன. அமெரிக்கப் பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக உற்சாகமாக சென்ற நிலையில், அதிபர் ட்ரம்பின் பேச்சால், டோ ஜோன்ஸ் வர்த்தகம் தொடக்கமே ஒரு சதவீதம் வீழ்ச்சியுடன் தொடங்கியது.
உலகச் சந்தைகளில் வர்த்தகம் மந்தமாகவும், பரபரப்புடனும், பதற்றத்துடனும் இருந்தது. அதன் எதிரொலி இந்தியச் சந்தைகளிலும் காணப்பட்டது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை பாதுகாப்பாக வைத்திருக்க பங்குகளை வேகமாக விற்பனை செய்ததால், சரிவு தவிர்க்க முடியாததாகிவிட்டது.
அமெரிக்க பங்குப் பத்திரங்கள் மீது நம்பிக்கை
அமெரிக்க ஃபெடரல் வங்கி வரும் மாதங்களில் வட்டியை அதிகரிக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும், பங்குப் பத்திரங்கள் மீது கிடைக்கும் ஈவுத்தொகையும் அதிகரித்திருப்பதால், முதலீட்டாளர்களுக்கு டாலர், பங்குப் பத்திரங்கள் மீதான முதலீட்டார்வம் அதிகரித்துவிட்டது.
பங்குப் பத்திரங்கள் மீது முதலீடு செய்தால் கிடைக்கும் வட்டி அதிகம், பலன் அதிகம், பாதுகாப்பு அதிகம் என்பதால், இந்தியச் சந்தையில் இருந்து அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறுவது அதிகரித்து, அழுத்தத்தை ஏற்படுத்தியது.
ரூபாய் மீது அழுத்தம்
சர்வதேச சூழல் பதற்றமடைந்துவிட்டது, மீண்டும் ஈரான் - அமெரிக்க இடையே போர் மேகம் சூழலாம் என்ற கணிப்பு, டாலர் மீதான தேவையை அதிகப்படுத்தியது. இதனால், டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 0.5% சரிந்து, ரூ.95.50 என நிலை பெற்றது.
வரும் நாட்கள் எப்படி இருக்கும்?
இந்தப் போக்கு குறித்து நிதி நிபுணர்கள் கூறுகையில், “உள்நாட்டுச் சந்தையில் கடந்த 4 நாட்களாக முதலீட்டாளர்களுக்குக் கிடைத்த லாபம் ஒரே நாளில் இன்று அடித்துச் சென்றுவிட்டது. சர்வதேச சூழலில் பதற்றம், ஈரான் - அமெரிக்கப் போர் மீண்டும் ஏற்பட்டால் கச்சா எண்ணெய் சப்ளையில் தடை வருமா என்ற முதலீட்டாளர்களின் அச்சம், அதன் விலை உயர்வு, பணவீக்கம் உயரலாம் என்ற கவலை, அமெரிக்க டாலர் வலுவடைவது, பங்குப் பத்திரங்கள் மீது மக்கள் முதலீட்டை திருப்பியது இந்தியச் சந்தையை ஆட்டம் காணச் செய்து ஊசலாட்டத்தில் விட்டது.
அடுத்த இரு நாட்களும் சர்வதேசச் சூழலில் நிலவும் நிலைத்தன்மையைப் பொறுத்து இந்தியச் சந்தைகளில் வர்த்தகம் நடக்கும். அதிபர் ட்ரம்ப் பேச்சு, முதலீட்டாளர்களின் அச்சத்தை அதிகப்படுத்தியிருக்கிறது. அடுத்துவரும் இரு நாட்களில் ஈரான் - அமெரிக்கா இடையே அமைதியான சூழல் இருக்குமா அல்லது ஏதேனும் புதிய மோதல் தொடங்குமா என்பதைப் பொறுத்து சந்தையில் வர்த்தகத்தின் போக்கு இருக்கும்.
குறிப்பாக, ட்ரம்ப் பேச்சால், கச்சா எண்ணெய் விலை திடீரென 6 சதவீதம் அதிகரித்துள்ளது, இதுவும் முதலீட்டாளர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது. ஒருவேளை வரும் நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் இல்லாவிட்டால், கச்சா எண்ணெய் விலை ஏறிய வேகத்தில் இறங்கலாம். மேலும், அமெரிக்காவில் பங்குப் பத்திரங்கள் மீது முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதும் அதிகரித்து வருவதும், ஃபெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்துவது குறித்து எடுக்கும் முடிவும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்தனர்.