உரிய தேதியில் இஎம்ஐ செலுத்த தவறினால்..? - கிரெடிட் ஸ்கோர் பாதிப்பும் தீர்வுகளும்

உரிய தேதியில் இஎம்ஐ செலுத்த தவறினால்..? - கிரெடிட் ஸ்கோர் பாதிப்பும் தீர்வுகளும்
Updated on
3 min read

வங்கிகளில் பெற்ற கடனுக்கான மாதாந்திரத் தவணையை (இஎம்ஐ) குறிப்பிட்ட தேதியில் செலுத்த ஒருவர் தவறும்போது, அவருக்கு என்ன விதமான பாதிப்புகள், கிரெடிட் ஸ்கோர் எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்துப் பார்ப்போம்.

இஎம்ஐ தேதி வரும்போது, சேமிப்புக் கணக்கில் பணம் இல்லாமல் இஎம்ஐ ஆட்டோ டெபிட் ஆகாது. சில நூறு ரூபாய் குறைவாக இருந்தால்கூட டெபிட் ஆகாது. சில நேரங்களில் ஒவ்வொருவரின் வேலைப் பளு காரணமாக இஎம்ஐ தேதியைக் கூட மறந்திருக்கலாம். இதுபோன்ற பிரச்சினைகளை, சிக்கல்களை ஏராளமான மக்கள் மாதந்தோறும் சந்தித்து வருகிறார்கள் என்பது தெரிந்ததுதான். ஆனால், இவ்வாறு தாமதமான இஎம்ஐ செலுத்துதல் அல்லது செலுத்தாமல் தவறவிடுதலால், பாதிப்புகள் உடனடியாக ஏற்படாது. ஆனால், நீண்ட காலத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

குறிப்பாக, கடனை முழுமையாக செலுத்தி பின், உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் குறைக்கப்பட்டிருக்கலாம். “நான்தான் கடனை செலுத்திவிட்டேனே, எப்படி கிரெடிட் ஸ்கோர் குறைந்தது?” என்று கேட்பது புரிகிறது. ஆனால், இந்த தண்டனை என்பது, ஏற்கெனவே உரிய தேதியில் இஎம்ஐ கட்டாமல் இருந்ததால், அதற்குரிய தண்டனையாக கிரெடிட் ஸ்கோர் குறைக்கப்படும். எத்தனை இஎம்ஐ தவறவிட்டீர்களோ, தாமதமாக செலுத்தப்பட்ட நாட்கள் ஆகியவற்றைக் கணக்கிட்டு கிரெடிட் ஸ்கோர் குறைக்கப்படும்.

அது மட்டுமல்லாமல் கிரெடிட் கார்டு மூலம் லோன் வாங்கியவர்கள், வங்கியில் கடன் பெற்றவர்கள், உரிய தேதியில் இஎம்ஐ செலுத்தாமல் இருக்கும் பட்சத்தில், அந்த இஎம்ஐக்கு வட்டி, அபராதம், ஜிஎஸ்டி என இஎம்ஐ தொகையைவிட கூடுதலாக செலுத்த வேண்டியதிருக்கும். அது மட்டுமல்லாமல் உரிய நேரத்தில் இஎம்ஐ தொகையை செலுத்தத் தவறும் பட்சத்தில் எதிர்காலத்தில் கடன் பெறும் தகுதியும் குறையும்.

இஎம்ஐ செலுத்தும் தேதியை ஒருமுறை தவறவிட்டால், கிரெடிட் ஸ்கோர் குறைக்கப்படுமா என்பது வங்கி மேலாளர் எடுக்கும் முடிவாகும். ஒருவேளை நல்ல வாடிக்கையாளராக இருக்கும் பட்சத்தில், இஎம்ஐ செலுத்த மறந்திருக்கலாம். மறுநாள் நினைவுபடுத்தும் பட்சத்தில் உடனடியாக வாடிக்கையாளர் இஎம்ஐ தொகையை செலுத்தினால் கிரெடிட் ஸ்கோர் பாதிக்காது.

ஆனால், இஎம்ஐ தேதியை தவறவிட்டு மறுநாளே நாம் இஎம்ஐ பணத்தை செலுத்தும்போதுகூட அதற்குரிய காலதாமதக் கட்டணம் அல்லது அபராத வட்டி, ஜிஎஸ்டி போன்றவற்றை வங்கிகள் விதிக்கும். இவை அனைத்தும் இசிஎஸ், என்ஏசிஎச் முறையில் ஆட்டோடெபிட் செய்யப்படும்போது, வங்கிக் கணக்கில் பணம் இல்லாமல் இருந்தால், இதுபோன்ற அபராதங்கள் விதிக்கப்படும்.

இஎம்ஐ செலுத்தும் தேதியை தவறவிடும் நிலையில் வாடிக்கையாளர்களுக்கு நினைவுபடுத்த வங்கிகள் சார்பில் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள், செல்போன் மூலம் நினைவூட்டல் செய்யப்படும். இவை அனைத்தையும் உதாசினப்படுத்தும்போதுதான் ஒருவரின் கிரெடிட் ஸ்கோர் குறைப்பது குறித்து வங்கிகள் சார்பில் புகார் அளிக்கப்படும்.

இது குறித்து நிதி ஆலோசகர்கள் கூறுகையில் “இஎம்ஐ தேதியை தவறவிட்ட முதல் சில நாட்கள் மிகவும் முக்கியமானவை. வட்டி அதிகமாவதைத் தடுக்க தொடக்கத்திலேயே விரைவாகச் செயல்பட்டு தொகையை செலுத்த வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளனர்.

கடும் பாதிப்பு எத்தகையது?

வங்கிகளில் பெற்ற கடனுக்கான மாதாந்திரத் தவணையை முறையாக செலுத்துகிறோமா என்பதுதான் நமது கிரெடிட் ஸ்கோரை நிர்ணயிக்கும் முக்கியக் காரணிகளில் ஒன்றாகும். கிரெடிட் பியூரோவில், தாமதமான இஎம்ஐ குறித்து புகார் செய்துவிட்டால் நிச்சயமாக ஒருவரின கிரெடிட் ஸ்கோர் குறையும், அவரின் எதிர்காலத்தில் கடன் பெறும் தகுதியும் குறையும்.

இது குறித்து நிதி ஆலோசகர்கள் கூறும்போது, “ஒரு இஎம்ஐ செலுத்தத் தவறினால் கிரெடிட் ஸ்கோர் குறைந்துவிடுமா என்று அசட்டையாக மட்டும் வாடிக்கையாளர் இருந்துவிடக் கூடாது. இதனால் உலகம் அழிந்துவிடுமா என்றெல்லாம் கேட்கக் கூடாது, ஆனால், தாமதம் மட்டும் செய்யாதீர்கள். ஒரு இஎம்ஐ செலுத்தத் தவறும்பட்சத்தில் உடனடியாக கிரெடிட் ஸ்கோர் குறையாது. ஆனால், முதல் முறையாக நடக்கும் தவறு, உங்கள் கிரெடிட் ஸ்கோரை குறைப்பதற்கான சமிக்ஞையாக அமைந்துவிடும்.

சில வங்கிகள், நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு 3 முதல் 15 நாட்கள்வரை கருணை காட்டும். அதையும் வாடிக்கையாளர் பயன்படுத்தாத பட்சத்தில் கிரெடிட் பியூரோவிடம் புகார் செய்யப்படும். ஆதலால் வங்கிகளில் கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் தங்களுக்கு கிடைத்த கருணைக் காலத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும். இந்த காலக்கட்டத்தில் இஎம்ஐ தொகை, அபராத வட்டி, தாமதக் கட்டணத்தை செலுத்திவிட்டால் தப்பிக்கலாம், கிரெடிட் ஸ்கோரில் எந்த பாதிப்பும் ஏற்படாது.

அதேநேரம் சரியான நேரத்தில் இஎம்ஐ செலுத்தும் வாடிக்கையாளருக்கு கடனை முழுமையாகச் செலுத்தும்போது, அவரின் கிரெடிட் ஸ்கோரில் 35% உயரவும் வாய்ப்புள்ளது. அதேநேரம், இஎம்ஐ முறையாக செலுத்தாத வாடிக்கையாளருக்கு அவரின் கிரெடிட் ஸ்கோரில் 50 முதல் 100 புள்ளிகள் வரை குறைக்கப்படலாம். இவ்வாறு கிரெடிட் ஸ்கோர் குறைவாக வைத்து அடுத்ததாக புதிய கடன் பெறுவது கடினமாக இருக்கும். அவ்வாறே கடன் கிடைத்தாலும் வட்டி கடும் உயர்வாக இருக்கும்” என்கின்றனர் நிதி ஆலோசகர்கள்.

இஎம்ஐ தேதியை தவறவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

வங்கிகளில் வீட்டுக் கடன், தனிநபர் கடன், கிரெடிட் கார்டில் கடன், வாகனக் கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள் பலரும் இஎம்ஐ தேதியை தவறவிடும் பட்சத்தில் மிகுந்த மனவேதனையும், வெட்கமும், அவமானமும் அடைவார்கள். வங்கிகளில் இருந்து வரும் அழைப்புக்கு முன்பாக எவ்வாறு சரிசெய்வது என்று பலவிதமாக ஆலோசிப்பார்கள்.

வங்கிகளைப் பொருத்தவரை வாடிக்கையாளர்களுடன் இணக்கமாக நடந்து கொள்ளவே விரும்புகின்றன. வாடிக்கையாளர் வெளிப்படையாகவே தற்கால நிதிச் சிக்கல்கள் இருக்கின்றன என்ற விவரத்தை தெரிவித்துவிட்டால் அதற்குரிய தீர்வும் உண்டு. ஆனால், அதை விடுத்து வங்கி அதிகாரிகளை, ஊழியர்களை சந்திக்காமல் டிஃபால்ட் செய்து மறைந்து கொள்வதுதான் ஆபத்தாகும்.

பொதுவாக, இதுபோன்ற நேரங்களில் வாடிக்கையாளர்கள் தங்களின் உண்மை நிலையை வங்கி அதிகாரிகளிடம் கூறும்பட்சத்தில், கூடுதல் அவகாசம் அளிக்க ஆலோசிப்பார்கள். கடன் தவணையை மாற்றி அமைக்கவும் முயல்வார்கள். அதாவது, மதாந்திர இஎம்ஐ என்பதை, காலாண்டுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில்கூட மாற்றலாம் (வங்கி மேலாளர் அதிகாரம்). ஆனால், பல இஎம்ஐக்கள் செலுத்தாமல் இருக்கும்பட்சத்தில் வாடிக்கையாளருக்கு இந்த சலுகையை வங்கி மேலாளர் செய்வது கடினமாகும்.

இதுபோன்ற சூழலில் எளிய தீர்வு என்பது, காலாவதியான தொகை (ஓவர் டியூ) முழுவதையும் உடனடியாக செலுத்திவிட்டு, வங்கி அதிகாரிகளிடம் எதிர்காலத்தில் இஎம்ஐ செலுத்துவதில் இருக்கும் சிரமங்களை வெளிப்படையாக தெரிவிப்பது உத்தமமாகும்.

இஎம்ஐ தவறவிடாமல் இருப்பது எப்படி?

வங்கியில் கடன் பெற்ற எந்த வாடிக்கையாளரும் வேண்டுமென்ற இஎம்ஐ செலுத்தத் தவறுவதில்லை, அந்த நோக்கமும் இல்லை. வாடிக்கையாளர் சந்திக்கும் இக்கட்டான சூழல், மோசமான காலம், தாமதமாக ஊதியம் வருதல், எதிர்பாரா செலவுகள், ஆட்டோடெபிட் சில நேரங்களில் முறையாக வேலை செய்யாத பட்சத்தில் பணத்தை எடுத்து செலவிட்டுவிடுதல் போன்றவைதான் இஎம்ஐ செலுத்த தவறவிடுதலுக்கான காரணம்.

இதைத் தடுக்க வாடிக்கையாளர் தன்னுடைய சேமிப்புக் கணக்கில் எப்போதுமே ஒரு தொகையை, அதாவது இஎம்ஐக்கான தொகையை வைத்திருக்க வேண்டும். அப்போதுதான், ஆட்டோ-டெபிட் எப்போது சரியானாலும் உடனடியாக இஎம்ஐ எடுக்கப்பட்டுவிடும்.

மேலும், இஎம்ஐ தேதி வருவதற்கு முன்பே, வாடிக்கையாளர் அதை நினைவில் வைக்க ஏதேனும் நினைவூட்டல் தங்களுக்குள் செய்ய வேண்டும். ஒருவேளை ஊதியம் வருவதற்கு முன்பே இஎம்ஐ செலுத்தும் தேதி வருவதாக இருந்தால், அது குறித்து வங்கியிடம் தெரிவித்து தேதியை மாற்றிக்கொள்ளலாம். நிதிச் சிக்கல் தவிர்க்க முடியாத பட்சத்தில் வங்கி அதிகாரிகளிடம் வெளிப்படையாக பேசி தீர்வுகாண்பதுதான் நிதிர்சனத்தில் சரியான தீர்வாகும்.

விரைவாகத் தொடர்புகொண்டு வங்கி அதிகாரிகளிடம் பேசினால், இஎம்ஐ செலுத்தும் விருப்பம் இருப்பதை அறிந்து, தற்காலிகமான வாய்ப்புகளை வங்கி அதிகாரிகள் வழங்கலாம்.

ஆதலால், ஒரு இஎம்ஐ செலுத்த தவறவிடுவது நிரந்தரமாக கிரெடிட் ஸ்கோரை குறைக்காது. இஎம்ஐ தவறவிட்டபின் நாம் எவ்வளவு பொறுப்பற்ற தன்மையுடன் செயல்படுகிறோம், தாமதமாக செயல்படுகிறோம் என்பதைப் பொறுத்து கிரெடிட் ஸ்கோர் மாறும். அதேநேரம், கடன் பெற்ற வாடிக்கையாளர் முறையாக மாதத் தவணை செலுத்தினால், எந்தவிதமான தவறுக்கும் இடம் அளிக்காமல் இருந்தால், நிதி ஒழுக்கம் சிறப்பாக இருந்தால், கிரெடிட் ஸ்கோர் விரைவாக உயரும்.

உரிய தேதியில் இஎம்ஐ செலுத்த தவறினால்..? - கிரெடிட் ஸ்கோர் பாதிப்பும் தீர்வுகளும்
எல் நினோ தாக்கம்: இந்திய பொருளாதாரம் 3 வழிகளில் பாதிக்கும் அபாயம்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in