

பரந்தூர் வழியாக சென்னை - பெங்களூருக்கு செல்ல உருவாக்கப்பட்ட விரைவு வழிச் சாலை.
காஞ்சிபுரம்: பரந்தூர் பன்னாட்டு விமான நிலையப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும், விமான நிலையம் அமைய உள்ள 13 கிராமங்களில் நிலம் விற்க, வாங்க இன்னும் தடை நீடிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இத்திட்டத்தை முழுமையாக ரத்து செய்து அரசாணை வெளியிடுவதுடன், நிலம் விற்க, வாங்க உள்ள தடைகளை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ரூ.27,400 கோடி மதிப்பில், சுமார் 5,746 ஏக்கர் பரப்பளவில் புதிய பசுமை வழிப்பன்னாட்டு விமான நிலையம் அமைக்க முந்தைய திமுக அரசும், மத்திய அரசும் திட்டமிட்டிருந்தன.
இதற்காக ஏகனாபுரம் உட்பட 13 கிராமங்களில் உள்ள விவசாய விளை நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் குடியிருப்புகளை கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
குறிப்பாக ஏகனாபுரம் கிராமம் மொத்தமாக இத்திட்டத்துக்காக குறி வைக்கப்பட்டதால் தங்களின் வாழ்வாதாரமும் கிராமமும் முற்றிலும் அழிந்துவிடும் என்று அஞ்சி, அப்பகுதி மக்கள் கடந்த 1,400 நாட்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டங்களை நடத்தினர்.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, இத்திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
அதற்காக உருவாக்கப்பட்டிருந்த சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலகங்களிலும் விமான நிலையத் திட்டத்துக்கான நில அளவை போன்ற களப்பணிகள் நிறுத்தப்பட்டு, தற்போது நிர்வாக ரீதியிலான அலுவலகப் பணிகள் மற்றும் ஆவணப் பரிசீலனைகள் மட்டுமே நடந்து வருகின்றன.
புல் முளைத்த நிலையில் காணப்படும். ரியல் எஸ்டேட் தொழிலுக்காக உருவாக்கப்பட்ட இடங்கள்.
தற்போது வரை சுமார் 1,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டதால் ஏகனாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். போராட்டம் எதுவும் நடைபெறாததால் புறக்காவல் நிலையங்கள் கூட மூடி வைக்கப்பட்டுள்ளன.
ஆனாலும், இப்பகுதியில் நிலம் வாங்க, விற்க உள்ள தடைகள் இன்னும் விலக்கப்படவில்லை. இதுகுறித்து, பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டக் குழுவின் செய்தி தொடர்பாளர் ஜனார்த்தனனிடம் கேட்டபோது, “தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு பரந்தூர் விமான நிலையத் திட்டப் பணிகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது எங்களுக்குப் பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
இதேபோல், இத்திட்டத்தை முற்றிலும் ரத்து செய்து முறையான அரசாணை வெளியிட்டால் மக்கள் இன்னும் மகிழ்ச்சி அடைவார்கள்” என்றார். விமான நிலையத் திட்ட அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு பரந்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் ஒரு சென்ட் நிலம் வெறும் ரூ.5,000-க்கு மட்டுமே விற்கப்பட்டது.
ஆனால், திட்டம் உறுதியானவுடன் வெளிமாவட்ட முதலீட்டாளர்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் நிலத்தை வாங்கிக் குவித்ததால் நிலத்தின் மதிப்பு ஒரு சென்ட் ரூ.5 லட்சம் வரை எகிறியது. அரசு தரப்பிலேயே நில இழப்பீட்டுத் தொகையாக பரந்தூரில் ரூ.68 ஆயிரமும், ஏகனாபுரத்தில் ரூ.60 ஆயிரமும் விலை நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால், தற்போது ஆட்சி மாற்றத்துக்குப் பின் இத்திட்டம் கைவிடப்பட வாய்ப்புள்ளதாகப் பரவும் தகவல்களால், ரியல் எஸ்டேட் துறையில் நிலத்
தின் மதிப்பு 30 சதவீதம் வரை சரிந்துள்ளது. விலை சரிந்தாலும் முதலீட்டாளர்கள் நிலங்களை வாங்கத் தயக்கம் காட்டுகின்றனர்.
இத்திட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டு அரசாணை வெளியானால், நில மதிப்பு மேலும் 50 சதவீதம் வீழ்ச்சி அடையலாம் என்ற அச்சம் பலரிடம் உள்ளது. இதனால் ரியல் எஸ்டேட் தொழில் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
இத்திட்டத்தை முதன்மைப்படுத்தி பரந்தூர் வழியாகச் செல்லும் வகையில் சென்னை - பெங்களூர் விரைவு வழிச்சாலை உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே காஞ்சிபுரம் வழியாக 6 வழிச்சாலை பயன்பாட்டில் இருக்கும்போதே இந்தக் கூடுதல் விரைவுச் சாலை அமைக்கப்பட்டது.
மேலும், இந்த விமான நிலையத்துக்கு வருபவர்கள் காஞ்சிபுரம் வழியாக வந்தவாசி, வெள்ளிமேடுப்பேட்டை சென்று, அங்கிருந்து நேரடியாக கூட்டேரிப்பட்டு வழியாகத் தென்மாநிலங்களுக்கு எளிதாகச் செல்லும் வகையில் சாலை உள்கட்டமைப்புகள் திட்டமிடப்பட்டன. அதுமட்டுமின்றி, பூந்தமல்லி வரை இருந்த மெட்ரோ ரயில் திட்டமும் பரந்தூரை மையப்படுத்தி காஞ்சிபுரம் வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
புல் முளைத்த நிலையில் காணப்படும்.
இத்திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து சில அரசு உயர் அலுவலர்கள் கூறும்போது, “விமான நிலையம் நிறுத்தப்பட்டால், இவ்வளவு கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட சென்னை - பெங்களூர் விரைவுச் சாலை மற்றும் உள்கட்டமைப்புகளின் பயன்பாடு என்னவாகும்? காஞ்சிபுரம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்தின் நிலை என்ன?” என்று கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே, பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டாலும், காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஒட்டுமொத்த போக்குவரத்து மற்றும் வணிக வளர்ச்சியைத் தொலைநோக்குப் பார்வையோடு அணுகி, இந்த மெட்ரோ ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களை அரசு எக்காரணம் கொண்டும் நிறுத்தாமல் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.