

அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பிரதமர் மோடி நேற்று சென்றபோது, எல்பிஜி, பெட்ரோலியப் பொருட்கள் விநியோகம் மற்றும் சேமிப்பு தொடர்பாக இரு நாடுகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
வர்த்தகம், தொழில்நுட்பம், எரிசக்தி, பாதுகாப்பு, புத்தாக்கம் மற்றும் பசுமை வளர்ச்சி உள்ளிட்ட துறைகளில் வளைகுடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் உறவை மேம்படுத்துவ தற்காக பிரதமர் மோடி நேற்று 5 நாடுகள் பயணத்தை தொடங்கினார். முதல் பயணமாக அவர் நேற்று ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். அவரை அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஜயீத் அல் நஹ்யன் வரவேற்றார். பிரதமர் மோடிக்கு ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது.
பின்னர் இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஈரான் போர் காரணமாக ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை நடத்துவதன் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார். அமீரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பிரதமர் மோடி, மேற்கு ஆசியாவில் அமைதி திரும்ப அனைத்து ஒத்துழைப்புகளையும் இந்தியா வழங்கும் என்றும் உறுதியளித்தார். ஈரான் போர் நடந்தபோது, இந்தியர்களுக்கு பாதுகாப்பு அளித்ததற்காக அதிபர் அல் நஹ்யனுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.
உலகளாவிய எரிசக்தி மற்றும் வர்த்தக கப்பல் போக்குவரத்துக்கு ஹார்முஸ் ஜலசந்தி எந்த தடையும் இன்றி திறக்கப்பட வேண்டும் என்றும், அங்கும் சர்வதேச சட்டவிதிமுறைகள் பின்னபற்றப்பட வேண்டிய அவசியத்தையும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். அதன்பின் எல்பிஜி காஸ், பெட்ரோலியப் பொருட்கள் விநியோகம் மற்றும் சேமிப்பு தொடர்பாக இரு நாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பு மேம்படும்.
ஈரான் போர் காரணமாக உலகளவில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை, பெட்ரோலியப் பொருட்கள் விலை உயர்வு ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் இரு நாடுகள் இடையே ஏற்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் மிக முக்கிய மானதாக கருதப்படுகிறது. தவிர பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு, கட்டமைப்புகளில் முதலீடு ஆகியவையும் கையெழுத்தானது. இந்திய கட்டமைப்பு மற்றும் ஆர்பிஎல் வங்கி மற்றும் சம்மான் கேபிடல் போன்ற நிதி நிறுவனங்களில் அமீரகம் 5 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.48,000 கோடி) முதலீடு செய்ய உறுதி அளித்துள்ளது.
குஜராத் மாநிலத்தின் வாடினர் பகுதியில் கப்பல் பழுது பார்க்கும் மையங்கள் அமைக்கும் ஒப்பந்தமும் கையெழுத்தானது. இதன் மூலம் இரு நாடுகள் இடையேயான பொருளாதார உறவு மேம்படும். வர்த்தக உறவில் அமீரகம் இந்தியாவின் 3-வது பெரிய நாடாகவும், கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலான மொத்த முதலீட்டில் அமீரகம் 7-வது பெரிய நாடாகவும் உள்ளது.
மோடிக்கு எப்-16 போர் விமான பாதுகாப்பு
பிரதமர் மோடி நேற்று ஐக்கிய அரபு அமீரகம் சென்ற போது ‘ஏர் இந்தியா ஒன்’ என அழைக்கப்படும் போயிங் 777 - 300இஆர் ரக விமானத்தில் சென்றார். மோடியின் விமானம் அமீரகம் வான் எல்லைக்குள் நுழைந் ததும், அதற்கு அந்நாட்டு விமானப்படையின் எப்-16 ரக போர் விமானம் பாதுகாப்பாக உடன் வந்தது.
முக்கிய நாடுகளின் தலைவர்கள் வரும் போது, போர் விமானங்களை அனுப்பி பாதுகாப்பாக அழைத்து வருவதை ஐக்கிய அரபு அமீரகம் சமீபகாலமாக பின்பற்றி வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்புக்காக அந்நாட்டு அதிபர் அல் நஹ்யனுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.