

புதுடெல்லி: இந்தியா - பிரிட்டன் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் நேற்று முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளதால், இரு நாட்டு பொருளாதார உறவுகள் மேலும் வலுவடையும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் பிரிட்டன் இடையேயான ‘விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம்’ (சிஇடிஏ) மற்றும் சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஆகியவை நேற்று முதல் முறைப்படி செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவின் பல்வேறு உள்நாட்டுத் தயாரிப்புகள் பிரிட்டிஷ் சந்தையில் எவ்வித இறக்குமதி வரியும் (பூஜ்ஜிய வரி) இன்றி நுழைவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளதை ஒரு “முக்கிய வரலாற்றுத் தருணம்” என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, தனது சமூக ஊடகப் பதிவில் கூறியிருப்பதாவது: இது இந்தியா - பிரிட்டன் இடையேயான கூட்டுறவில் ஒரு மிக முக்கியமான வரலாற்றுத் தருணம். விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் மற்றும் சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தம் ஆகியவை அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளதன் மூலம், இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார உறவுகள் இனி மேலும் ஆழமடையப் போகின்றன. இந்த இரு ஒப்பந்தங்களும் இணைந்து, நமது கூட்டு லட்சியங்களை அடைய உதவும்.
இந்த ஒப்பந்தம் நமது விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ-கள்) பெரும் பயனளிக்கும். அத்துடன், தொழில்நுட்பம், தொழில்முறை சேவைகள் மற்றும் புத்தாக்கத் துறைகளிலும் புதிய கதவுகளைத் திறக்கும். இந்தத் தருணம் நமது இரு ஜனநாயக நாடுகளுக்கு இடையே உள்ள பரஸ்பர நம்பிக்கையையும், வர்த்தகம், தொழில்நுட்பம், முதலீடு மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு முன்னோக்கிய கூட்டாண்மையைக் கட்டியெழுப்புவதற்கான நமது உறுதியையும் பிரதிபலிக்கிறது. கூட்டு வளர்ச்சிக்காக இந்தியாவும் பிரிட்டனும் தொடர்ந்து இணைந்து செயல்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதிப் பொருட்களில் சுமார் 99 சதவீதப் பொருட்களுக்கு இறக்குமதி வரி இல்லாத (பூஜ்ஜிய வரி) சந்தை வாய்ப்பு கிடைத்துள்ளது.
மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான ஒட்டுமொத்த வர்த்தக மதிப்பில் கிட்டத்தட்ட 100 சதவீத அளவை இந்த ஒப்பந்தம் உள்ளடக்கியுள்ளது. இந்த இரு ஒப்பந்தங்கள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளதன் மூலம், இரு நாடுகளுக்கு இடையேயான பொருளாதார உறவுகள் மேலும் வலுவடையப் போகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.