

புதுடெல்லி: ஈரான் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் வலியுறுத்தி உள்ளன.
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தின. இதையடுத்து, ஈரானும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியது. ஒரு மாதத்துக்கு மேல் போர் நீடித்தது.
இதன் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், கச்சா எண்ணெய் சரக்குக் கப்பல்போக்குவரத்து முடங்கியது. இதனால், உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் எரிபொருள் விலை இதுவரை உயர்த்தப்படவில்லை. வர்த்தக எரிவாயு சிலிண்டர் விலை மட்டுமே உயர்த்தப்பட்டு வருகிறது.
இதனிடையே, தற்காலிக போர் நிறுத்தத்தை அமெரிக்கா அறிவித்தது. எனினும், ஈரான் மீதான கடற்படை முற்றுகை தொடரும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். இதையடுத்து, வியாழக்கிழமையன்று கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 126 டாலருக்கு மேல் உயர்ந்தது, பின்னர் சற்று குறைந்தது. இது ஹார்முஸ் ஜலசந்தியில் நீடித்த இடையூறு குறித்த கவலைகளை அதிகரித்தது.
இந்த விலை உயர்வு, அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களின் இழப்புகளை கணிசமாக விரிவுபடுத்தியுள்ளது, குறிப்பாக, பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு (எல்பிஜி) ஆகியவற்றின் விற்பனையில் அதிக நஷ்யம் ஏற்பட்டு வருகிறது. எனவே, அவற்றின் விலையை உயர்த்த வேண்டும் என எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன.
பணவீக்கம் அதிகரிக்கும் ஆனாலும் மத்திய அரசு உடனடியாக விலையை உயர்த்துமா என்பது தெரியவில்லை. ஏனெனில், எரிபொருள் விலையை உயர்த்தினால் பணவீக்கம் கணிசமாக அதிகரிக்கும் என அரசு கருதுகிறது.