நயாரா எனர்ஜி பெட்ரோல் ரூ.5.30, டீசல் ரூ.3 வரை விலை அதிகரிப்பு

நயாரா எனர்ஜி பெட்ரோல் ரூ.5.30, டீசல் ரூ.3 வரை விலை அதிகரிப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியாவின் மிகப் பெரிய தனியார் எரிபொருள் விற்பனை நிறுவனமான நயாரா எனர்ஜி, பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.5.30 வரையிலும், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.3 வரையிலும் உயர்த்தியுள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட தகவல்: கடந்த ஒரு மாத காலமாக நீடித்து வரும் ஈரான் - அமெரிக்கப் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து முடக்கம் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5.30 வரையிலும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது.

அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களுக்கு நஷ்டத்தை ஈடுகட்ட அரசு தரப்பில் சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆனால், தனியார் நிறுவனங்களுக்கு அத்தகைய இழப்பீடுகள் வழங்கப்படுவதில்லை. அதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள கூடுதல் செலவினத்தின் ஒரு பகுதியை நுகர்வோர் மீது சுமத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக நயாரா எனர்ஜி தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள 1,02,075 பெட்ரோல் நிலையங்களில் 6,967 பெட்ரோல் நிலையங்களை நயாரா எனர்ஜி நிறுவனம் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நயாரா எனர்ஜி நிறுவனம் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி தந்துள்ளது.

நயாரா எனர்ஜி பெட்ரோல் ரூ.5.30, டீசல் ரூ.3 வரை விலை அதிகரிப்பு
அதிருப்தியில் குமுறும் கூட்டணிக் கட்சிகள்: தேர்தலில் திமுகவுக்கு சிக்கலை உருவாக்குமா?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in