

புதுடெல்லி: இந்தியாவின் நான்கு மிகப்பெரிய பொருளாதார மாநிலங்களில் கடந்த 4 ஆண்டுகளில் மகாராஷ்டிர மாநிலம் மிகக் குறைந்த பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதேவேளையில், ஒட்டுமொத்தப் பொருளாதார மதிப்பில் (GSDP) அந்த மாநிலமே இப்போதும் முதலிடத்தில் நீடிக்கிறது.
2024-25 நிதியாண்டில் மகாராஷ்டிராவின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி ரூ.42,67,771 கோடி என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வளர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் பார்த்தால், கர்நாடகம், குஜராத் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை விட இம்மாநிலம் பின்தங்கியுள்ளது.
கர்நாடகம் முதலிடம்
கரோனா காலத்திற்குப் பிந்தைய சூழலில் (2021-22 முதல் 2024-25 வரை), கர்நாடக மாநிலம் சுமார் 65 சதவீத வளர்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது. பெங்களூரை மையமாகக் கொண்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைத் துறைகளின் அசுர வளர்ச்சியே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது. கர்நாடகத்தின் ஜிஎஸ்டிபி ரூ.17,02,227 கோடியிலிருந்து ரூ.28,09,063 கோடியாக உயர்ந்துள்ளது.
இரண்டாவது இடத்தில் குஜராத்
தொழில்துறை மற்றும் உற்பத்தித்துறையில் வலுவாக உள்ள குஜராத் மாநிலம், 48 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. அந்த மாநிலத்தின் பொருளாதார மதிப்பு ரூ.18,79,826 கோடியிலிருந்து ரூ.27,90,000 கோடியாக அதிகரித்துள்ளது.
தமிழகத்துக்கு மூன்றாவது இடம்
பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்துள்ள தமிழகம், சுமார் 47% வளர்ச்சியை எட்டியுள்ளது. 2021-22-ல் ரூ.21,36,351 கோடியாக இருந்த தமிழகத்தின் ஜிஎஸ்டிபி, 2024-25-ல் ரூ.31,55,096 கோடியாக உயர்ந்துள்து. இதன் மூலம், ஒட்டுமொத்தப் பொருளாதார அளவில் மகாராஷ்ட்ராவுக்கு அடுத்தபடியாகத் தமிழகம் நெருக்கமான போட்டியாளராக உருவெடுத்துள்ளது.