மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம் - பின்னணி என்ன?

தேர்தல் நெருங்கும் நிலையில் சந்திரபோஸ் திடீர் ராஜினாமா
மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம் - பின்னணி என்ன?
Updated on
1 min read

புதுடெல்லி: மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஆளுநர் ஆனந்தபோஸ் நேற்று ராஜினாமா செய்தார். புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார் என முதல்வர் மம்தா பானர்ஜி, ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மேற்கு வங்க ஆளுநராக கடந்த மூன்றரை ஆண்டுகளாக இருந்தவர் சி.வி.ஆனந்த போஸ். இவருக்கும், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் பல விஷயங்களில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று டெல்லி சென்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த ஆனந்தபோஸ் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். மேற்கு வங்கத்துக்கு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஆளுநர் ராஜினாமா செய்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: ஆளுநர் ஆனந்த போஸ் ராஜினாமாவுக்கான காரணம் தெரியவில்லை. இது அதிர்ச்சியும், கவலையும் அளிக்கிறது. சூழலைப் பார்க்கும்போது, பேரவை தேர்தலை முன்னிட்டு, அரசியல் நலனுக்காக சில வேலைகளை செய்யுமாறு மத்திய உள்துறை அமைச்சரிடம் இருந்து ஆளுநருக்கு அழுத்தம் வந்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

மேற்கு வங்க ஆளுநராக, ஆர்.என்.ரவி நியமிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் இப்போதுதான் தெரிவித்தார். இதுகுறித்து அவர் என்னிடம் ஆலோசிக்கவில்லை.

இத்தகைய நடவடிக்கைகள் அரசியலமைப்பின் மாண்பை சீர்குலைப்பதோடு, கூட்டாட்சித் தத்துவத்தின் அடித்தளத்தையே தகர்ப்பதாக உள்ளன. மாநிலங்களின் கவுரவத்தை சீர்குலைக்கும் தன்னிச்சையான முடிவுகளில் இருந்து மத்திய அரசு விலகி இருக்க வேண்டும். இவ்வாறு மம்தா தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி மேற்கு வங்கத்துக்கு மாற்றம் செய்யப்படுகிறாரா அல்லது மேற்கு வங்க ஆளுநர் பதவியை கூடுதலாக கவனிக்கிறாரா என்ற தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.

மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம் - பின்னணி என்ன?
ஈரான் போர் விளைவுகள்... சீனாவுக்கு இழப்பா, ஆதாயமா? - ஒரு தெளிவுப் பார்வை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in