கென்ய அதிபர் Vs டாடா கெமிக்கல்ஸ்: பிரச்சினையும் பின்புலமும் என்ன?

கென்ய அதிபர் Vs டாடா கெமிக்கல்ஸ்: பிரச்சினையும் பின்புலமும் என்ன?
Updated on
3 min read

“இயற்கை வளங்களை அள்ளிச் சென்றுவிட்டு, எங்களை வெறும் நுகர்வோராக மட்டுமே வைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம்? நாங்கள் இன்னும் மற்றவர்களுக்கு அடிமைகளாக இருக்க வேண்டுமா?” - கென்யாவில் செயல்படும் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தை வெளியேறுமாறு கூறிய கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ எழுப்பியுள்ள இந்தக் கேள்வி, அனைத்து ஆப்பிரிக்க நாடுகளின் மனக் குமுறலாகவே பார்க்கப்படுகிறது.

கென்யாவின் காஜியாடோ மாவட்டத்தில் உள்ள மகாடி ஏரியில், உலகின் மிக அரிதான சோடா சாம்பல் (Soda Ash) கனிம வளம் கிடைக்கிறது. இதை ஏற்றுமதி செய்யும் தொழிலை டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறது. 100 ஆண்டுகள் வரை போடப்பட்டிருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ள கென்ய அரசு, டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தை நாட்டை விட்டு வெளியேறுமாறு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

நைரோபியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்தும் அதானி குழுமத்தின் 2.5 பில்லியன் டாலர் திட்டத்தை கென்ய அரசு ரத்து செய்திருந்த நிலையில், தற்போது டாடா குழுமத்தையும் வெளியேறுமாறு கூறியுள்ளது சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

2005 முதல் கென்யாவின் மகாடி பகுதியில் முதலீடு செய்து வேலைவாய்ப்பை வழங்கி வரும் டாடா கெமிக்கல்ஸ், தங்களின் சமூகப் பொறுப்புத் திட்டங்களைச் (CSR) சுட்டிக்காட்டித் தன் தரப்பை நியாயப்படுத்துகிறது. ஆனால் கென்ய அரசோ, ‘எங்களுக்குத் தொண்டு நிறுவனங்கள் தேவையில்லை; தொழில் துறை உள்கட்டமைப்பே தேவை’ எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டது.

பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்புக்கும், ஒரு நாட்டின் தொழில் துறை தேவைகளுக்கும் இடையிலான இந்த முரண்பாட்டைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது மகாடி ஏரி விவகாரம்.

மகாடி ஏரியின் முக்கியத்துவமும் வரலாறும்

கென்யா நாட்டின் மகாடி ஏரி, உலகின் 4-வது மிகப் பெரிய இயற்கை சோடா சாம்பல் ஏரியாகும். கண்ணாடி தயாரிப்பு, சோப்பு, நீர் சுத்திகரிப்பு, காகிதத் தொழில் போன்ற பல தொழில்களுக்கு சோடா சாம்பல் மிக முக்கியமான அடிப்படை மூலப்பொருளாகும். மகாடி ஏரியில் இருந்து ஆண்டுக்குச் சுமார் 3.5 லட்சம் டன்களுக்கும் அதிகமான சோடா சாம்பல் வெட்டி எடுக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது கென்யாவின் கனிம ஏற்றுமதியில் பெரும் பங்கு வகிக்கிறது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பிரிட்டனின் ‘ப்ரன்னர் மாண்ட்’ நிறுவனம், 100 ஆண்டுகளுக்கு மகாடி ஏரியில் சோடா சாம்பல் மூலப்பொருட்களை எடுக்க ஒப்பந்தம் செய்திருந்தது. 2005-ஆம் ஆண்டில் அந்நிறுவனத்தைக் கைப்பற்றி, நிர்வாக உரிமையையும் கனிமச் சுரங்கக் குத்தகையையும் டாடா கெமிக்கல்ஸ் வசமாக்கியது.

பிரச்சினையின் தொடக்கப் புள்ளி...

டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் ஒழுங்கு விதிகளில் கென்ய அரசுக்கு உரசல் ஏற்பட்டது. கடந்த ஜூலை 28-ஆம் தேதி டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்துக்கு கென்ய அமைச்சகம் விடுத்த அறிவிப்பில், ‘சோடா சாம்பல் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை நிறுத்துங்கள்’ எனக் கடிதம் அனுப்பியது.

காஜியாடோ மாவட்டத்துக்குச் சென்றிருந்த கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ அளித்துப் பேட்டியில், “காஜியாடோ மாவட்டத்துக்கு போதுமான முதலீட்டை டாடா செய்யவில்லை. வளங்களை அள்ளிச் சென்று வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு எங்களை வெறும் நுகர்வோராக மட்டுமே வைத்திருப்பது எந்த விதத்தில் நியாயம்?

நாங்கள் இன்னும் மற்றவர்களுக்கு அடிமைகளாக இருக்க வேண்டுமா? கென்யாவின் வளம் முதலில் கென்ய மக்களுக்குப் பயன்பட வேண்டும். டாடா கெமிக்கல்ஸ் நிறுவனம் மூட்டை முடிச்சுகளோடு நாட்டை விட்டு வெளியேற வேண்டும்” எனத் தெரிவித்தார்.

100 ஆண்டுகளாக வளங்களை அள்ளி எடுத்துச் சென்றபோதிலும், உள்ளூரில் ஒரு கண்ணாடி ஆலையோ அல்லது தொழிற்சாலையோ அமைக்கப்படவில்லை என கென்ய அரசு குற்றம் சாட்டுகிறது. மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்துவிட்டு, அதிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்களை அதிக விலைக்கு இறக்குமதி செய்யும் காலனித்துவப் பொருளாதார மாதிரியை உடைக்கவும், உள்நாட்டிலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்கி, தொழில்துறை வளர்ச்சியை அதிகப்படுத்தவும் கென்ய அரசு விரும்புகிறது.

கென்ய அதிபருக்கு எதிர்ப்பு

டாடாவை வெளியேறுமாறு கூறிய கென்ய அரசின் முடிவுக்கு, அந்நாட்டின் ‘டெமாக்ரசி ஃபார் தி சிட்டிசன்ஸ் பார்ட்டி’ (DCP) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

‘அதிபர் ரூட்டோவின் வணிக நலன்களுக்காகவே டாடா மூடப்படுகிறது. இதனால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மகாடி ஏரிக்கு அடியில் டிரில்லியன் டாலர் மதிப்புள்ள லித்தியம் படிவுகளும் எண்ணெய் வளமும் உள்ளன. வேறு சில வணிக நலன்களுக்கு வழிவகுக்கும் வகையிலேயே டாடாவை வெளியேற்ற ரூட்டோ முயல்கிறார்’ எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

டாடா நிறுவனம் என்ன சொல்கிறது?

சட்டப்பூர்வமாகத் தாங்கள் வலுவாக இருப்பதாகவும், கென்ய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்றும் டாடா நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘கென்ய அரசாங்கத்தை நாங்கள் மதிக்கிறோம். நிலுவையில் உள்ள விவகாரங்களுக்குத் தீர்வு காண, முறையான சட்ட மற்றும் ஒழுங்குமுறை வழிமுறைகள் மூலம் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளைத் தொடர விரும்புகிறோம்.

அமைச்சகம் எழுப்பிய பிரச்சினைகளுக்குத் தேவையான விரிவான பதிலை அளித்துவிட்டோம். வறட்சி நிறைந்த அப்பகுதியில் உள்ளூர் மக்களுக்கு இலவச மருத்துவமனைச் சேவை, குடிநீர் வசதி, பள்ளிகளைத் தொடர்ந்து நிர்வகித்து வருகிறோம். கென்ய அரசுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தின் மூலம், மகாடி கனிமப் படிவுகள் மீது டாடா நிறுவனத்திற்கு 2053-ஆம் ஆண்டு வரை கனிமங்களை எடுக்க உரிமை இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளது.

மகாடி ஏரிக்குக் குத்தகைப் பணம் செலுத்துவது தொடர்பாகக் காஜியாடோ மாவட்டத்துக்கும், டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்துக்கும் இடையிலான வழக்கில் 2025 அக்டோபரில் டாடா கெமிக்கல்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

வளங்களை இனி எடுக்க முடியுமா?

இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒரு முக்கியச் செய்தியை உணர்த்துகிறது:

“இனி வளரும் நாடுகளில் வெறும் இயற்கை வளங்களை எடுத்துச் சென்று பிற நாடுகளில் ஆலைகளை அமைக்கும் பழைய வணிக மாதிரி செல்லுபடியாகாது.”

அந்நாட்டின் மண்ணிலேயே தொழிற்சாலைகளை அமைத்து, உள்ளூர் மக்களுக்கு மதிப்புக் கூட்டப்பட்ட பயன்களை அளிக்கும் நிறுவனங்களே இனி நீடிக்க முடியும் என்பதை கென்யா - டாடா இடையிலான இந்தப் பிரச்சினை சர்வதேச வர்த்தக உலகுக்கு தெளிவுபடுத்தியுள்ளது.

கென்ய அதிபர் Vs டாடா கெமிக்கல்ஸ்: பிரச்சினையும் பின்புலமும் என்ன?
ராகுல் காந்தியின் 2029 கனவு: இண்டியா கூட்டணியில் காங்கிரஸின் சவால்கள் என்னென்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in