

மும்பை: ஈரான் போர் உச்சம் கண்டுள்ளதன் எதிரொலியாக, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி கண்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை உச்சம் தொட்டுள்ளது. இந்திய பங்குச் சந்தைகளில் படுவீழ்ச்சி நிலவுகிறது.
ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் போர் அதி தீவிரம் அடைந்துள்ள நிலையில், ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 111 டாலருக்கு மேலாக உச்சம் கண்டுள்ளது. இது, சர்வதேச அளவில் பொருளாதாரச் சூழல்களை உலுக்கி வருகிறது.
அதேவேளையில், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.93.34 என வரலாறு காணாத வீழ்ச்சியை எட்டியுள்ளது. அத்துடன், இந்திய பங்குச் சந்தைகளில் வெளிநாட்டு முதலீடுகளின் வரத்தும் வெகுவாக சரிந்துள்ளது. இந்தக் காரணங்களால், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி நிலவி வருகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (மார்ச் 19) வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 1,953.21 புள்ளிகள் சரிந்து 74,750.92 ஆகவும், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 580.05 புள்ளிகள் சரிந்து 23,197.75 ஆக இருந்தது.
இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிட்டப்பட்ட நிறுவனப் பங்குகள் அனைத்துமே சரிவை சந்தித்தன. இந்தச் சரிவால் இன்று ஒரே நாளில் பல லட்சம் கோடியில் முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்படும் என அஞ்சப்படுகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று முற்பகல் 11.45 மணியளவில் சென்செக்ஸ் 1,718.62 புள்ளிகள் சரிந்து 74,985.51 ஆகவும், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 523.90 புள்ளிகள் சரிந்து 23,253.90 ஆகவும் இருந்தது.