

தங்க நகைகள்
சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 19) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 2,160 குறைந்து அதிரடி காட்டியுள்ளது.
இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமையன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.400 குறைந்து பவுன் ரூ.1,17,680-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று (மார்ச் 18) 22 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.14,570-க்கும், ஒரு பவுன் ரூ.1,16,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து இன்று வாரத்தின் 4-வது வர்த்தக தினத்திலும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி, சென்னையில் இன்று (வியாழக்கிழமை) கிராமுக்கு மேலும் ரூ.270 குறைந்து ஒரு கிராம் ரூ.14,300-க்கும், பவுனுக்கு ரூ.2,160 குறைந்து ஒரு பவுன் ரூ.1,14,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த விலை சரிவு நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தமிழகம் போன்ற மாநிலங்களில் இனி திருமண சீசன் என்பதால் இப்போதே நகையை வாங்கி வைத்துக் கொள்ள ஆர்வம் காட்டப்படுகிறது.
தங்கம் விலை சரிவதைப் போல் வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளியின் விலை இன்று ஒரு கிலோவுக்கு ரூ. 10,000 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 265-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ. 2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை குறைவுக்கு 3 முக்கியக் காரணங்கள்:
* மேற்கு ஆசிய மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை ஏற்றம் என்பது, உலக நாடுகளில் பணவீக்கத்தை எதிர்பார்த்ததைவிட நீண்ட காலம் உயர்ந்தே இருக்கச் செய்யும் என்ற அச்சத்தைக் கடத்தியுள்ளது. அந்த வகையில் பணவீக்க அச்சம்தான் தங்கம் விலை சரிவுக்கு முதன்மைக் காரணம் என்று கணிக்கப்படுகிறது.
* தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே பல்வேறு புதிய உச்சங்களைத் தொட்டுவிட்ட நிலையில், இத்தகைய உச்சத்துக்குப் பின்னர் முதலீட்டாளர்கள் ப்ராஃபிட் புக்கிங் மீது கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். அதாவது தங்கத்தை விற்றுவிட்டு வேறு பக்கம் முதலீட்டு கவனத்தைத் திருப்பத் தொடங்கியுள்ளனர். மேலும், நிலையான வருமானம் தரக்கூடிய வேறு சொத்துகளில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர். இதனால், தங்கம் விலை சமீப நாட்களாக குறைந்து வருகிறது.
* சர்வதேச அளவிலான பொருளாதார நிச்சயமற்ற சூழல்களில், தங்கமும், டாலரும் தான் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. ஆனால், இப்போதைய சூழலில் டாலர் அதிக புழகத்தை ஈர்க்கிறது. டாலரின் மதிப்பு வலுவாக இருக்கும்போது, தங்கத்தை மற்ற நாணயங்களைக் கொண்டு வாங்குவது என்பது கைக்கு எட்டாத விலையாகிவிடுகிறது. இதனால் சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை குறைகிறது. அவ்வாறு தேவை குறையும்போது அதுவும் தங்கம் விலை மீது கூடுதல் அழுத்தத்தை செலுத்துகிறது. ஆக, டாலர் மதிப்பின் எழுச்சியும் தங்கம் விலை சரிவுக்குக் காரணம்.
இவ்வாறாக, உலகாளவிய சந்தைகள் புவிசார் அரசியல் பதற்றங்களைக் காட்டிலும் பல்வேறு பொருளாதாரக் கொள்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதாலேயே தங்கம் விலை குறைகிறது.