

ஓசூர்: ஓசூரில் மலர்கள் வாடிய பிறகும் அவற்றின் மதிப்பு குறைவதில்லை. மாறாக, காய்ந்த மலர்கள் மற்றும் தாவரங்களைப் பயன்படுத்தி அழகிய அலங்காரப் பொருட்களை உருவாக்கி, அவற்றின் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓசூர் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமப் பகுதிகளில் காய்கறிகள், கீரைகள் மற்றும் மலர் சாகுபடியில் விவசாயிகள் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு அறுவடைக்குப் பின்னர் வீணாகும் மலர்கள், தாவரங்கள் மற்றும் விதைக்கூடுகளைச் சேகரித்து, சுத்தப்படுத்தி. உலர வைத்து, அவற்றை மதிப்புக் கூட்டுப் பொருட்களாகத் தயாரிக்கும் நடைமுறை தற்போது வரவேற்பைப் பெற்று வருகிறது.
காய்ந்த மலர்களைக் கொண்டு உலர் பூங்கொத்துகள், பூமாலைகள், தோரணங்கள், பொட்பூரி (நறுமணம் வீசும் உலர்ந்த மலர்களின் கலவை), ரெசின் கலைப்பொருட்கள், வாழ்த்து அட்டைகள், புகைப்படச் சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் காட்சிப்படுத்தி, ஆன்லைன் மூலம் நேரடியாக விற்பனையும் செய்து வருகின்றனர்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள், தனியார் நிறுவன விழாக்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள், வீட்டு அலங்காரம் மற்றும் புகைப்பட ஸ்டுடியோக்களின் பின்னணி அலங்காரம் உள்ளிட்டவற்றுக்கு இந்த மதிப்புக் கூட்டுப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால், இவற்றுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
இயற்கையான பூக்கள் சில மணி நேரங்களிலேயே வாடிவிடும் நிலையில், முறையாக உலர்த்தி, வண்ணம் தீட்டி வடிவமைக்கப்பட்ட மலர்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் 6 மாதங்கள் முதல் ஓராண்டு வரை கெடாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், அவற்றை மீண்டும் மீண்டும் பயன்படுத்தமுடிவதால், வாடிக்கையாளர்களுக்கான செலவும் குறைகிறது. இதுவும் சந்தையில் இப்பொருட்களுக்கு வரவேற்பு அதிகரிக்கக் காரணமாக உள்ளது.
சந்தையில் ஒரு பூங்கொத்து ரூ.350 முதல் ரூ.700 வரை விற்பனையாகிறது. நிலத்தில் கழிவாக வீணாகும் மலர்கள் மற்றும் தாவரங்களை மதிப்புக் கூட்டுப் பொருட்களாக மாற்றுவதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைத்து வருகிறது. இதனால், ஓசூரைச் சேர்ந்த இளம் விவசாயிகள் பாரம்பரிய வேளாண் தொழிலுடன் சார்புத் தொழிலாக மதிப்புக் கூட்டுப் பொருட்கள் தயாரிப்பிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: ஓசூரில் நிலவும் குளிர்ந்த தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப ரோஜா மற்றும் அலங்கார மலர்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற் பனைக்கு அனுப்பப்படுகின்றன. தற்போது, வீணாகும் காய்ந்த தாவரங்கள் மற்றும் மலர்களை மதிப்புக் கூட்டுப் பொருட்களாகத் தயாரிப்பதன் மூலம் கூடுதல் வருவாய் ஈட்டி வருகிறோம்.
இத்தொழிலுக்குத் தேவையான தொழில்நுட்பப் பயிற்சிகள் மற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்த வழிகாட்டுதல்களை வழங்கவும், இத்தொழிலை ஊக்கப்படுத்தவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.