சுங்கச் சாவடி | கோப்புப் படம்
புதுடெல்லி: தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் சுங்க கட்டணத்தை பணமாக செலுத்துவதை ஏப்ரல் 1ம் தேதி முதல் நிறுத்த மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இது தொடர்பாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை பணமாக செலுத்துவதை ஏப்ரல் 1-ம் தேதி முதல் நிறுத்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரிசீலித்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் முழுமையான டிஜிட்டல் கட்டணத்தை உருவாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் FASTag முறையிலோ அல்லது UPI மூலமாகவோ டிஜிட்டல் முறையில் கட்டணத்தை செலுத்த முடியும். மின்னணு சுங்க கட்டண வசூல் முறையை வலுப்படுத்தவும், சுங்கச்சாவடிகளின் செயல் திறன் மற்றும் நம்பகத்தன்மையை மேம்படுத்தவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், சுங்கச்சாவடிகளில் நெரிசலைக் குறைக்க முடியும். சுங்க பரிவர்த்தனைகளில் வெளிப்படைத் தன்மையை கொண்டு வந்து, பயனர்களின் பயணத்தை எளிதாக்க முடியும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.