

புதுடெல்லி: டெல்லியில் நடைபெறும் உலகளாவிய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டின் இடையே பிரதமர் நரேந்திர மோடியை, இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பு குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அனுர குமார திசாநாயக்க, ‘‘புதுடெல்லியில் இன்று (பிப்.20) மதியம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தேன். 2026 ஆம் ஆண்டுக்கான ஏஐ தாக்க உச்சி மாநாட்டிற்கு அழைக்கப்பட்டதற்கு நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன்.
நமது வரலாற்று உறவுகளை வலுப்படுத்துவது மற்றும் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து நாங்கள் விரிவான விவாதங்களை நடத்தினோம். சமீபத்திய டித்வா புயலின் போது இந்தியா அளித்த மிகப் பெரிய ஆதரவுக்கு எனது நன்றியைத் தெரிவித்தேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.
அனுர குமார திசாநாயக்க உடனான சந்திப்பு குறித்து தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ‘‘மதிப்புமிக்க அண்டை வீட்டாருடன் நட்பை வலுப்படுத்துதல்! டெல்லியில் அதிபர் அனுர குமார திசாநாயக்கவை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியா-இலங்கை இடையேயான உறவில் சமீபத்திய முன்னேற்றம் குறித்து நாங்கள் மதிப்பாய்வு செய்தோம்.
எரிசக்தி, இணைப்பு, உள்கட்டமைப்பு, சுகாதாரம், திறன் மேம்பாடு, கலாச்சாரம், நீலப் பொருளாதாரம் போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம்’’ என தெரிவித்துள்ளார்.