

சென்னை: சென்னையில் இன்று (மே.15) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.800 குறைந்தது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 குறைந்தது.
இந்தியா தனது தங்க நுகர்வில் கிட்டத்தட்ட முழுவதையும் இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்கிறது. இந்நிலையில் அந்நியச் செலாவணிக் கையிருப்பைப் பாதுகாக்க உதவும் வகையில், ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை தவிர்க்குமாறு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவுறுத்தினார்.
இந்நிலையில் தங்கம், வெள்ளியின் வெளிநாட்டு கொள்முதலைக் கட்டுப்படுத்தவும் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் எடுக்கப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மே12-ம் தேதியன்று தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 6-லிருந்து 15% ஆக உயர்த்தியது.
இதனைத் தொடர்ந்து மே13-ம் தேதி, தங்கம் விலை பவுனுக்கு ரூ.5,360 அதிரடியாக உயர்ந்தது. அன்றைய தினமே மாலையில் குறைந்தாலும், நேற்று (மே 14) மீண்டும் உயர்ந்தது.
இந்நிலையில், சென்னையில் இன்று (மே 15) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து, ஒரு கிராம் ரூ.ரூ.14,950-க்கும், பவுனுக்கு ரூ.800 குறைந்து ஒரு பவுன் ரூ.1,19,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10-ம், கிலோவுக்கு ரூ.10 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.305-க்கும், ஒரு கிலோ ரூ.3 லட்சத்து 5 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.