

இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளாக மாற்றமில்லாமல் இருந்துவந்த பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
லிட்டருக்கு ரூ.3-க்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ள இந்த விலையேற்றம், வாகன ஓட்டிகளை மட்டுமல்லாமல், நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார கட்டமைப்பில் தாக்கம் ஏற்படுத்தும் ஒரு சங்கிலித் தொடர் விளைவை உண்டாக்கக் கூடும் என்ற அச்சம் எழுத்துள்ளது.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்துள்ளது. அதாவது, ரூ.100.80-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் இப்போது ரூ.103.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.11 உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது டீசல் விலை ரூ.95.50 ஆக உள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 105 டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதே இந்த மாற்றத்துக்கான மிக முக்கியக் காரணமாகும்.
உலகின் முக்கிய எண்ணெய் விநியோகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகையிடப்பட்டுள்ளதால், விநியோகச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதும், இந்தியாவில் சில்லறை விற்பனை விலை உயர்த்தப்படவில்லை. இதனால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு ஏறக்குறைய ரூ.1,600 கோடி முதல் ரூ. 2,400 கோடி வரை இழப்பு ஏற்பட்டு வந்தது. இந்த நிதி நெருக்கடியை சமாளிக்கவே தற்போது எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 88 சதவீதத்துக்கும் மேலாக இறக்குமதியையே நம்பியுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் ஏற்படும் ஒரு டாலர் உயர்வு கூட இந்தியாவின் இறக்குமதிச் செலவை பல ஆயிரம் கோடிகளாக உயர்த்தக்கூடும்.
ஏற்கெனவே ஏப்ரல் 2026-ல் இந்தியாவின் மொத்த விற்பனை விலை பணவீக்கம் 8.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த மூன்றரை ஆண்டுகளில் இல்லாத உச்சமாகும். தற்போது எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளதால், வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் இது 9 சதவீதத்தைத் தாண்டக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கணிக்கின்றனர். இதேபோல், நுகர்வோர் விலை பணவீக்கமும் 5.5 சதவீதத்தைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டீசல் விலை உயர்வால் லாரிகளின் வாடகை உயர வாய்ப்புள்ளது. இந்தியா முழுவதும் 70 சதவீதத்துக்கும் அதிகமான சரக்கு போக்குவரத்து சாலை வழியாகவே நடைபெறுவதால், பால், காய்கறிகள், மளிகைப் பொருட்கள் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும்.
உற்பத்தித் துறையில் இயந்திரங்களை இயக்கத் தேவைப்படும் எரிபொருள் செலவு அதிகரிப்பதால், ஜவுளி, ரசாயனம் மற்றும் உலோகத் தொழில்கள் பாதிக்கப்படும். மேலும், அதிக விலைக்குக் கச்சா எண்ணெய் வாங்குவதால் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு வேகமாகச் சரிந்து, ரூபாய் மதிப்பில் சரிவை ஏற்படுத்தக்கூடும்.
இந்த நெருக்கடியைச் சமாளிக்க பிரதமர் மோடி ஏற்கெனவே சில ஆலோசனைகளை முன்வைத்துள்ளார். “கரோனா பெருந்தொற்று காலத்தில் வீட்டில் இருந்து பணியாற்றுவது, ஆன்லைனில் ஆலோசனை கூட்டம் நடத்துவது போன்ற நடைமுறைக்கு நாம் பழகிக் கொண்டோம். தற்போது மீண்டும் அதை நாம் நம் தேசத்தின் நலன் கருதி பின்பற்ற வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. அது இன்றைய காலத்தின் கட்டாயமும் கூட. இதன் மூலம் எரிபொருள் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள முடியும்.
பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலை உலக அளவில் விலை உயர்ந்துள்ளது. இத்தகையச் சூழலில் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்குவதற்காக செலவிடப்படும் அந்நியச் செலாவணியை, பெட்ரோல் மற்றும் டீசலை சேமிப்பதன் மூலம் அதை மிச்சப்படுத்துவது நம் எல்லோரது பொறுப்பாகும். இதே நிலைதான் சமையல் எண்ணெய்க்கும் உள்ளது. அதன் பயன்பாட்டை நாம் குறைத்துக் கொள்ள வேண்டி உள்ளது. இது தேசபக்திக்கு சிறந்தவொரு பங்களிப்பாக இருக்கும்” என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்த விலை உயர்வு தற்காலிகமானதுதான் என்றும், மேற்கு ஆசியாவில் பதற்றம் தணிந்து ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டால் கச்சா எண்ணெய் விலை வேகமாகச் சரிய வாய்ப்புள்ளது என்றும் பொருளாதார வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.