

சென்னை: சென்னையில் இன்று (மார்ச்.4) தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது. ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,120 குறைந்து நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது.
இந்நிலையில், கடந்த பிப்.28 இஸ்ரேல் - அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து வழக்கத்துக்கு மாறாக ஞாயிற்றுக் கிழமையன்று (மார்ச் 1) தங்கம் விலை எகிறியது.
அன்றைய தினம் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.225 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,775-க்கும், பவுனுக்கு ரூ.1,800 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,26,200-க்கும் விற்பனை ஆனது.
ஈரான் போர் முற்றியதால் தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மார்ச் 2 காலை வர்த்தகம் தொடங்கியதும் பவுனுக்கு ரூ.920 என விலை குறைந்தது. இதேபோல வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.10,000 என விலை சரிந்தது.
தொடர்ந்து நேற்று மார்ச் 3 நிலவரப்படி சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.15,465-க்கு விற்பனையானது.
இந்நிலையில், தொடர்ந்து 3-வது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று (புதன்கிழமை) காலை நிலவரப்படி சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.265 குறைந்து ஒரு கிராம் ரூ.15,200-க்கும், பவுனுக்கு ரூ.2,120 குறைந்து ஒரு பவுன் ரூ.1,21,000-க்கும் விற்பனை ஆகிறது.
வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.295-க்கு விற்பனை ஆகி வருகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,95,000-க்கு விற்பனையாகிறது.