

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சென்னையில் ஒரே நாளில் இரண்டாவது முறையாக குறைந்துள்ளது. காலையில் கிராமுக்கு ரூ.670 குறைந்த நிலையில், மாலையில் மேலும் ரூ.280 குறைந்துள்ளது.
ஈரான் போர் காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால், அவற்றின் விலை உயர்ந்து வருகிறது. எதிர்கால எரிபொருள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பல்வேறு நாடுகளும் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிபொருட்களை வாங்குவதில் தீவிரம் காட்டி வருகின்றன.
இதனால், டாலர் பயன்பாடு அதிகரித்து அதன் மதிப்பு உயர்ந்து வருகிறது. இதனால், முதலீட்டாளர்கள் பலரும் டாலரில் முதலீடு செய்வதை அதிகரித்து வருகின்றனர். இதன் காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு குறைந்து வருகிறது. தங்கத்தின் விலை சரிவதற்கு இது ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.
அதோடு, இந்தியாவிலும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவைச் சந்தித்து வருகிறது.
கடந்த 20-ம் தேதி வர்த்தகத்தின் முடிவில் ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 93.69 ஆக இருந்த நிலையில், இன்று (மார்ச் 23) அது 93.95 ஆக வீழ்ச்சி கண்டு வர்த்கமாகி வருகிறது.
இந்த மாத தொடக்கத்தில் 91.58 ஆக இருந்த ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 20 நாட்களில் இரண்டு முறை மட்டுமே ஏற்றம் கண்டது. மற்றபடி அது தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் காரணமாக, தங்கத்தின் விலை குறைந்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
அந்த வகையில் இன்று (மார்ச் 23) காலை வர்த்தகம் தொடங்கியதும் தங்கம் விலை சரிந்தது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.670 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,950-க்கும், பவுனுக்கு ரூ.5,360 குறைந்து, ஒரு பவுன் ரூ.1,03,600-க்கும் விற்பனை ஆனது.
இந்நிலையில், இன்று மாலை மீண்டும் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.280 குறைந்தது; சவரனுக்கு ரூ.2,240 குறைந்தது. இதன்மூலம், ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.12,670 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,01,360 ஆகவும் விற்பனையாகிறது. அதாவது, இன்று ஒரே நாளில் ரூ.7,600 சரிந்துள்ளது.
24 காரட் தங்கம் இன்று பவுனுக்கு ரூ.5,848 குறைந்து ஒரு பவுன் ரூ.1,13,016-க்கு விற்பனை ஆன நிலையில், மாலையில் மேலும் ரூ.2,440 குறைந்து ரூ.1,10,576-க்கு விற்பனையாகிறது.
வெள்ளியின் விலை இன்று மாலை எந்த மாற்றமும் இல்லை. இன்று காலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.235-க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ கட்டி விலை கிலோவுக்கு ரூ.15,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2,35,000-க்கு விற்பனை ஆனது. அதே விலையில் மாலையிலும் விற்பனை நடைபெற்று வருகிறது.