

முன்னாள் அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர் | கோப்புப் படம்
சண்டிகர்: பஞ்சாபில் ஓர் அரசு அதிகாரியை தற்கொலைக்குத் தூண்டிய புகாரில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த லால்ஜித் சிங் புல்லர் இன்று கைது செய்யப்பட்டார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள மாநிலக் கிடங்கு கழக மேலாளராக இருந்த ககன்தீப் சிங் ரந்தாவா சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவர் பேசும் வீடியோ கடந்த சனிக்கிழமை சமூக வலைதளங்களில் வெளியானது. அதில், தான் விஷம் அருந்திவிட்டதாகவும், அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர் தனக்கு தொல்லை கொடுத்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இந்நிலையில், முதல்வர் பகவந்த் மான் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர் நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். தரன் தரன் மாவட்டத்தில் உள்ள பட்டி தொகுதி எம்எல்ஏவான புல்லர், தனது முகநூல் பதிவில், ‘‘என் மீதான குற்றச்சாட்டில் உண்மை இல்லை. எனது கட்சி எப்போதும் உண்மையின் பக்கம் நிற்கும். எனவே என் மீதான குற்றச்சாட்டுகள் முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.
இந்த விசாரணை முடியும் வரை, எனது ராஜினாமாவை ஏற்குமாறு கட்சியையும் முதல்வரையும் கேட்டுக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்திருந்தார்.
புல்லரின் ராஜினாமா குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் பகவந்த் மான், ‘‘இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன். இதன் பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன என்பது விசாரணையில் தெரிய வரும். விசாரணைக்கு முன்னதாகவே அமைச்சரின் ராஜினாமாவை நாங்கள் பெற்றுக் கொண்டோம். இதனால் விசாரணையில் யாரும் தலையிடவோ அல்லது அழுத்தம் கொடுக்கவோ முடியாது’’ என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், லால்ஜித் சிங் புல்லரை கைது செய்ய வலியுறுத்தி சண்டிகரில் போராட்டம் நடைபெற்றது. முதல்வர் பகவந்த் மானின் இல்லத்தை முற்றுகையிட்டு நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதோடு, இந்த விவகாரத்தை அமிர்தசரஸைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பி குரு்ஜீத் சிங் அவ்லா, மக்களவையில் எழுப்பினார். அதற்கு பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பஞ்சாப் எம்பிக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எழுத்துபூர்வமாக தன்னிடம் கோரிக்கை வைத்தால், சிபிஐ விசாரணைக்கு உடனடியாக உத்தரவிடுவதாகக் கூறினார்.
அமித் ஷா இவ்வாறு கூறிய இரண்டு மணி நேரத்துக்குள் அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர் கைது செய்யப்பட்டார். பட்டேகர் சாகிப் மாவட்டத்தின் மாண்டி கோபின்கர் பகுதியில் அவர் கைது செய்யப்பட்டதாக மூத்த காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.