

மும்பை: உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த இளம் பெண் ஸ்விக்கி டெலிவரி பார்ட்னராகப் பணிபுரிந்து கொண்டே காவல் துறைத் தேர்வுக்குத் தயாராகி வருகிறார்.
உத்தர பிரதேச மாநிலம் காசிப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் குஷ்பு (23). இவர், தனது பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்காமல் மும்பைக்கு வந்துள்ளார்.
ஸ்விக்கி நிறுவனத்தில் உணவு விநியோகம் செய்யும் பணியில் சேர்ந்தார். குஷ்புவின் இந்த கடின உழைப்பு மற்றும் லட்சியப் பயணம் குறித்த வீடியோவை, ஸ்விக்கி நிறுவனத் தலைமைச் செயல் அதிகாரி ரோஹித் கபூர் தனது ‘சாய் பிஸ்கூட்' என்ற நேர்காணல் தொடரின் ஒரு பகுதியாக சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இது வைரலானது.
ரோஹித் கபூர் தனது பதிவில், ‘‘இந்தியக் கிராமங்களில் இருந்து பல தசாப்தங்களாக மக்கள் வெளியேறு வதை நாம் பார்த்திருக்கிறோம். 23 வயதான குஷ்புவும் காசிப்பூரில் உள்ள தனது கிராமத்தை விட்டு மும்பைக்கு வந்துள்ளார். இவர் பகல் நேரத்தில் உணவு விநியோகம் செய்யும் பணிகளை மேற்கொள்கிறார். இரவு நேரங்களில் உ.பி. போலீஸ் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தீவிரமாகப் படித்து வருகிறார்.
பெரும்பாலான மக்கள் மீண்டும் தங்களின் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்லக் கூடாது என்ற எண்ணத்துடன்தான் மும்பைக்கு வருவார்கள். ஆனால், குஷ்பு ஒரு நாள் போலீஸ் சீருடை அணிந்து, தன் கிராமத்து மக்களுக்குச் சேவை செய்வதற்காக மீண்டும் ஊருக்குத் திரும்ப வேண்டும் என்ற தெளிவான லட்சியத்துடன் மும்பை வந்துள்ளார். ஊரை விட்டு வெளியேறும் தைரியம் பலருக்கு இருக்கும், ஆனால் அதற்கான காரணம் என்ன என்ற தெளிவு சிலருக்கு மட்டுமே இருக்கும்’’ என்று பாராட்டியுள்ளார்