

புதுடெல்லி: இந்தியாவில் முதல் வணிக ரீதியிலான நீர் விமான சேவை லட்சத்தீவில் இருந்து தொடங்க உள்ளது.
இந்திய பயணிகள் விமானப் போக்குவரத்து, தரை வழியில் மட்டுமல்லாமல் தற்போது நீர் வழியிலும் விமானசேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக லட்சத் தீவில் இருந்து நீர் விமான சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது. ‘ஸ்கைஹாப் ஏவி யேஷன்’ என்ற நிறுவனம் இதற்கான அனுமதியை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடம் இருந்து பெற்றுள்ளது.
லட்சத்தீவில் இருந்து நீர் விமான சேவையை வழங்க ‘ஆபரேட்டர்’ சான்றிதழ் இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக உத்தராண்ட் மாநிலம் ரிஷிகேஷ் பகுதியில் ஸ்கைஹாப் ஏவியேஷன் நிறுவனம் கங்கா தடுப்பணையில் இருந்து விமானத்தை மேலே கிளப்பியும், நீரில் இறக்கியும் சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளது.
இதையடுத்து, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் அனுமதி கிடைத்துள்ளதால், முதல் முறையாக வணிக ரீதியிலான பயணிகள் நீர் விமானத்தை லட்சத்தீவில் இருந்து இந்நிறுவனம் இயக்க உள்ளது. இந்தச் சேவை லட்சத்தீவுப் பகுதியில் உள்ள 5 தீவுகளுக்கு இயக்கப்பட உள்ளது. இந்நிறுவனத்தின் நீர் விமானத்தில் ஒரே நேரத்தில் 19 பேர் பயணம் செய்ய முடியும். லட்சத்தீவில் விமான நிலைய கட்டமைப்புகள் ஓரளவுக்குதான் உள்ளது.
இதனால் லட்சத்தீவில் உள்ள 5 தீவுகளுக்கு சென்று வருவது மெதுவாகவும் சிக்கலாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில், ஸ்கைஹாப் நிறுவனத்தின் நீர் விமான சேவை பெரும் மாற்றத்தைக் கொண்டு வரும். இதனால் பயண நேரம் வெகுவாகக் குறையும். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விமான நிலையங்கள் அமைக்க முடியாத மலைப்பாங்கான இடங்கள், யாரும் எளிதில் செல்ல முடியாத தீவுகள், நீர்ப் பகுதிகளுக்கு இந்த நீர் விமான சேவை மிகப் பெரிய பங்காற்றும்.