தமிழக மாணவர்களின் அரசியல் பேரார்வத்தை ‘அணுகுவது’ எப்படி? - ஒரு தெளிவுப் பார்வை

தமிழக மாணவர்களின் அரசியல் பேரார்வத்தை ‘அணுகுவது’ எப்படி? - ஒரு தெளிவுப் பார்வை
Updated on
4 min read

‘தமிழக தேர்தல் களம் 2026’ தனித்துவமானது மட்டுமல்ல; அரசியல் கட்சிகளுக்கும் குடிமக்களுக்கும் மிக முக்கிய படிப்பினையை தந்த ஜனநாயக நிகழ்வும் கூட. ஆம், நாம் பேசுவது இளம் தலைமுறையினரின் அரசியல் ஆர்வ எழுச்சி பற்றியே.

கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் சாரை சாரையாகப் வாக்களிக்க படையெடுத்தது ஒருபக்கம் என்றால், ‘நீங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும்’ என்று சிறுவர்கள் தங்களது பெற்றோரை ‘இன்ஃப்ளூயன்ஸ்’ செய்தது மறுபக்கம் கவனிக்க வைத்தது.

இந்தப் பின்னணியில்தான் ‘தமிழக இளம் தலைமுறையினர் இன்னும் அரசியல்மயப்படுத்தப்பட வேண்டும். கல்விக் கூடங்களில் கட்சி சார்பின்றி ஆக்கப்பூர்வமான அரசியல் விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். மாணவர்களின் அரசியல் புரிதல் என்பது ஆக்கபூர்வமாக இருந்தால் சமூகத்துக்கு நிச்சயம் நன்மை பயக்கும்.

இளைஞர்களின் இந்த ஆர்வம், அரசியல்வாதிகளை இன்னும் பொறுப்புணர்வுடன் செயல்பட வைக்கும் என்பதில் ஐயமில்லை. தற்போது காணப்படும் அரசியல் ஆர்வம் வெறும் தேர்தல் கால உற்சாகத்தோடு நின்றுவிடக் கூடாது. அது ஒரு தெளிவான அரசியல் முதிர்ச்சியாக உருவெடுக்க வேண்டும்” என்கின்றனர் அரசியல் அறிவியல் துறை பேராசிரியர்கள்.

கோவை அரசு கல்லூரியின் அரசியல் அறிவியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் சிவராஜன் கூறும்போது, “அரசியல் தலைவர்களின் உணர்ச்சிகரமான பேச்சுகள் இளைஞர்களை வாக்குச் சாவடிக்குக் கொண்டு வந்திருக்கலாம். ஆனால், அவர்களுக்குத் தேவையான 'அரசியல் கல்வி' இன்னும் சென்றடையவில்லை என்றே தோன்றுகிறது.

தமிழக இளைஞர்கள் இன்னும் 'அரசியல்மயப்படுத்தப்பட' வேண்டும். இந்திரா காந்தி யார் என்று கேட்டால், 'அவர் காந்தியின் பேத்தி' என்று சொல்லும் அளவுக்குத்தான் இப்போதைய பல இளைஞர்களின் அரசியல் விழிப்புணர்வு இருக்கிறது. அனைத்து இளைஞர்களும் அப்படி கிடையாது; ஒரு சிலர் இப்படியும் இருக்கிறார்கள்.

கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் இளைஞர்கள் வாக்களிக்க அதிக ஆர்வம் காட்டுவதை இணையத்தில் காண முடிகிறது. சினிமா பிம்பங்களை அரசியலோடு குழப்பிக் கொள்ளும் போக்கு தமிழகத்தில் நீடிப்பதாக தோன்றுகிறது. அரசியலை ஒரு பொழுதுபோக்காக பார்க்காமல், அடுத்த தலைமுறையின் விடியலாக பார்க்க வேண்டும்.

தமிழக இளைஞர்களுடன் ஒப்பிடுகையில், கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் இளம் தலைமுறை அரசியல் அறிவு மற்றும் கொள்கை கோட்பாடுகளில் சற்று ஒரு படி தெளிவு மிக்கவர்களாக அறியப்படுகிறார்கள். கேரளா மட்டுமல்லாமல், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் மாணவர் பருவத்திலேயே சித்தாந்தங்கள் (Ideologies) விவாதிக்கப்படுகின்றன.

செய்தித்தாளைத் தொடுவதைக் கூடத் தவிர்த்துவிட்டு, சமூக வலைதளங்களில் வரும் உறுதிப்படுத்தப்படாத செய்திகளை நம்பி, தலைவர்களைத் தீர்மானிக்கும் போக்கு தீங்கானது.

நமது இளைஞர்களைச் சரியான பாதையில் கொண்டு செல்லும் பெரும் பொறுப்பு குடும்பங்களுக்கும், ஆசிரியர்களுக்கும், அரசுக்கும் உண்டு. கல்வி என்பது வெறும் வேலை வாய்ப்புக்கானது மட்டுமே என மாறிவிட்டதால், தங்களைச் சுற்றி நடக்கும் சமூக மாற்றங்களை மாணவர்கள் கவனிப்பதில்லை.

குடும்பம் என எடுத்துக் கொண்டால் தாய், தந்தையர் தங்கள் சித்தாந்தங்களைக் குழந்தைகள் மீது திணிக்காமல், அரசியல் விழிப்புணர்வை மட்டும் ஊட்ட வேண்டும். ரீல்ஸ் கலாச்சாரத்தால், அரசியலின் ஆழமான வரலாற்றைக் கற்க இளைஞர்களுக்குப் பொறுமை இல்லை. தலைவரின் கொள்கையை விட, அவரைப் பற்றி வரும் மீம்ஸ்களை வைத்தே அவர் மீதான பிம்பத்தை இளைஞர்கள் கட்டமைக்கிறார்கள். இது தவறான புரிதலுக்கு கொண்டு செல்கிறது.

பள்ளி ,கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு மாதிரி சட்டமன்றம், நாடாளுமன்றம் நடத்தப்பட வேண்டும். கல்விக் கூடங்களில் கட்சி சார்பின்றி ஆக்கப்பூர்வமான அரசியல் விவாதங்கள் நடத்தப்பட வேண்டும். இதை மாணவர்களின் அரசியல் விழிப்புணர்வுக்கு வழிவகுக்கும். இந்த 85% வாக்குப் பதிவு என்பது தமிழகத்தின் உண்மையான வளர்ச்சிக்கான சக்தியாக மாறும். இளைஞர்களின் அரசியல் ஆர்வத்தை மே 4-ம் தேதி தான் முழுமையாக கணிக்க முடியும். அவர்களின் அரசியல் புரிதல் ஆக்கபூர்வமாக இருந்தால் சமூகத்துக்கு நன்மை பயக்கும்” என்றார் முனைவர். சிவராஜன்.

சென்னைப் பல்கலைக்கழக அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறை உதவி பேராசிரியர் முனைவர் எஸ்.பார்த்திபன் கூறும்போது, “நடந்து முடிந்த தேர்தலில் இளைஞர்களின் அதீதப் பங்களிப்பு, ஆர்வம் பல விவாதங்களை எழுப்பியுள்ளது உண்மைதான். இளைஞர்களிடம் தற்போது காணப்படும் அரசியல் ஆர்வம் வெறும் தேர்தல் கால உற்சாகத்தோடு நின்றுவிடக்கூடாது. அது ஒரு தெளிவான அரசியல் முதிர்ச்சியாக (Political Maturity) உருவெடுக்க வேண்டும்.

தமிழக அரசியலுக்கும் சினிமாவுக்கும் எப்போதும் பிரிக்க முடியாத பிணைப்பு உண்டு. திரையில் ஒரு மீட்பராக (Savior) காட்டப்படும் நடிகர், நிஜ வாழ்விலும் மாற்றத்தைக் கொண்டு வருவார் என்ற உளவியல் தாக்கம் இளைஞர்களிடம் இருப்பதை மறுக்க முடியாது.

‘தவறு செய்யாத ஹீரோ’ என்ற பிம்பம், ஏற்கெனவே இருக்கும் அரசியல் கட்சிகள் மீதான அதிருப்தியோடு சேரும்போது, அது ஒரு வலுவான வாக்குகளாக மாறுவதாக தோன்றுகிறது. ஆனால், இந்த மாற்றம் வெறும் திரைப் பிம்பத்தை மட்டும் நம்பியதா அல்லது கொள்கை மாற்றத்துக்கானதா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.

நகர்ப்புற இளைஞர்கள் பெரும்பாலும் ஒட்டுமொத்த நிர்வாகத் திறன் (Governance), சர்வதேச / தேசிய அளவிலான மாற்றங்களைக் கணக்கில் கொள்கிறார்கள். மறுபுறம், கிராமப்புற இளைஞர்கள் நேரடிப் பயனளிக்கும் நலத்திட்டங்கள் மற்றும் தங்கள் பகுதிக்குச் செய்யப்பட்ட அடிப்படை வசதிகளை வைத்து அரசியல்வாதிகளை மதிப்பிடுகிறார்கள்.

வாட்ஸ்அப், யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் மூலம் அரசியல் தகவல்கள் மிக வேகமாக இளைஞர்களைச் சென்றடைகின்றன. பெற்றோர்களுக்குத் தெரியாத அரசியல் நுணுக்கங்களைத் தங்களது பிள்ளைகள் விளக்கிச் சொல்லும் போக்கு, குடும்பங்களுக்குள் ஓர் அரசியல் உரையாடலை உருவாக்கியுள்ளது.

<div class="paragraphs"><p>உதவி பேராசிரியர்கள் சிவராஜன், எஸ்.பார்த்திபன், பச்சமுத்து</p></div>

உதவி பேராசிரியர்கள் சிவராஜன், எஸ்.பார்த்திபன், பச்சமுத்து

ஆனால், அது ஆரோக்கியமானதாக மாற வேண்டும். தற்போதைய அரசியல்வாதிகளே தங்களது கொள்கைகள் சித்தாந்தங்களை பின்பற்றி நடப்பதாக தெரியவில்லை. அப்படி இருக்கும்போது தற்போது வாக்குரிமை பெற்றிருக்கும் இளம் வாக்காளர்களை நாம் 'தற்குறிகள்' என விமர்சிப்பது ஏற்புடையதாக இல்லை.

பெரிய தலைவர்களைப் பார்ப்பதற்கு முன்பு தங்கள் வார்டு உறுப்பினர் யார், ஊராட்சி மன்றத் தலைவர் யார் என்பன போன்ற அடிப்படை அரசியலில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும். ஆனால், அந்தச் சூழல் தற்போது இல்லை.

இனி வரும் காலங்களில் இளைஞர்கள் இன்னும் அரசியல்படுத்தப்பட வேண்டும். இன்று ஓட்டு செலுத்துவது ஜனநாயக கடமை என உணர்ந்த இளைஞர்கள் இனி அது குறித்து தேட ஆரம்பித்து ஒரு புரிதலை ஏற்படுத்திக் கொள்வார்கள்.

கல்லூரிகளில் அரசியல் விவாதங்கள் குறைந்து வருவது அல்லது அதற்கான களம் இல்லாமல் இருப்பது ஒரு வருத்தமான விஷயம். ஆசிரியர்கள் - மாணவர்களிடையே விமர்சன ரீதியான சிந்தனையை (Critical Thinking) தூண்டாதபோது, இளைஞர்கள் வெறும் உணர்ச்சிவசப்பட்ட அரசியலை நோக்கித் தள்ளப்படும் அபாயம் உள்ளது. கல்லூரிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாததும் கவனிக்கபட வேண்டிய விஷயம்.

இளைஞர்களின் இந்த அதிகப்படியான ஆர்வம், அரசியல்வாதிகளை இன்னும் பொறுப்புணர்வுடன் செயல்பட வைக்கும் என்பதில் ஐயமில்லை. மாணவர்கள் பகுத்தறிவடன் கூடிய அரசியல் விவாதங்களில் ஈடுபட வேண்டும். அதற்கு கல்வி நிறுவனங்கள் சரியான வழிகாட்டுதலை வழங்க வேண்டும். அரசாங்கமும் அவர்களுக்கு துணைநிற்க வேண்டும்” என்கிறார் முனைவர் எஸ்.பார்த்திபன்.

வேல்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியின் அரசியல் அறிவியல் துறையின் உதவி பேராசிரியர் பச்சமுத்து கூறும்போது, “தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் கட்சி தோன்றும்போது, சமூக வலைதளங்களில் அதற்கான ஆதரவு மிகுந்ததாக காட்டப்படுவது இயல்பான ஒன்று. ஆனால், இது புதிய நிகழ்வு அல்ல. இன்றைய இளைஞர்களின் அரசியல் ஈடுபாடு ஆழமான புரிதலுடன் இணைந்திருக்கிறதா என்பது சிந்திக்க வேண்டிய விஷயமாகும்.

மத்தியிலும் மாநிலத்திலும் யார் ஆட்சி செய்கிறார்கள், தமிழகத்தில் உள்ள முக்கிய அரசியல் கட்சிகள் எவை, அவற்றின் சின்னங்கள் என்னென்ன, ஓர் அரசு எப்படி செயல்படுகிறது போன்ற அடிப்படை விஷயங்களில்கூட சிலருக்கு தெளிவு இல்லாத நிலை காணப்படுகிறது. கல்லூரியில் மாணவர்களிடம் பேசும்போது எங்களுக்கு ‘மாற்றம் தேவை’ என சொல்கிறார்கள். அதைத் தாண்டி அவர்களால் வேறு எதுவும் பேச முடியவில்லை.

ஒரு பைக், கார் அல்லது மொபைல் வாங்குவதற்காக இளைஞர்கள் செலவிடும் நேரம் மற்றும் ஆர்வத்தை புத்தக வாசிப்பு, அரசியல் கொள்கைகள், கட்சிகள் மற்றும் தலைவர்களைப் பற்றி அறிந்து கொள்ளுவதிலும் செலவிட வேண்டும்.

தமிழகத்தின் அரசியல் வரலாறு, இடஒதுக்கீட்டு கொள்கை, இந்திய அரசியலமைப்பு, பல்வேறு கட்சிகளின் நோக்கங்கள் மற்றும் அவற்றின் தலைவர்களின் சிந்தனைகள் போன்றவை குறைந்தபட்சமாக இளைஞர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். இந்த அடிப்படை அறிவுதான் ஒரு பொறுப்பான வாக்காளரை உருவாக்கும். எஸ்.ஐ.ஆர் காரணமாகவே வாக்கு சதவீதம் அதிகரித்து இருப்பதாகவே தெரிகிறது.

இந்தத் தேர்தலில் இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் ஒரு வகையில் கட்டுப்பாட்டை மீறிய உற்சாகத்துக்குள் சென்றனர். சிலர் கட்சிகளின் ‘ஐடி வீரர்கள்’ ஆக மாறி, சமூக வலைதளங்களில் ஒருதலைப்பட்சமான பிரச்சாரங்களை முன்னெடுத்தனர். சினிமா மற்றும் அரசியல் இரண்டையும் ஒரே தராசில் போட்டு அளவிடும் பழக்கம் இன்று பெரும் பிரச்சினையாக உள்ளது. சினிமா, கிரிக்கெட்டில் உள்ள ஆர்வம் கூட அரசியலில் இல்லை என்றே எண்ண வைக்கிறது.

சமூக வலைத்தளங்களில் உருவாகும் இந்த பிம்பங்களைக் கொண்டு மட்டும் முடிவெடுப்பது தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கும்.

முடிவாக, இளைஞர்களின் அரசியல் பங்கேற்பு அதிகரிப்பது ஜனநாயகத்துக்கு நல்ல அறிகுறிதான். ஆனால் வன்முறையற்ற, ஆரோக்கியமான அரசியல் களத்தை உருவாக்க வேண்டிய பொறுப்பு இளைஞர்களுக்கு உண்டு. இந்த அடிப்படைப் புரிதல் இல்லாதபோதுதான், அரசியல் பஞ்ச் வசனங்களாக சுருங்கிப் போகிறது” என்றார் உதவிப் பேராசிரியர் பச்சமுத்து.

தமிழக மாணவர்களின் அரசியல் பேரார்வத்தை ‘அணுகுவது’ எப்படி? - ஒரு தெளிவுப் பார்வை
‘மதுரை சித்திரைத் திருவிழா’ ஓர் ஆன்மிக கொண்டாட்டம் மட்டுமே அல்ல... ஏன்?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in