

திருப்பூர்: மூலப்பொருட்களின் விலை உயர்வால் திருப்பூர் உயர்வால் திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தித் தொழில் சிக்கலில் உள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
திருப்பூரில் எலாஸ்டிக் உற்பத்தியில் 200-க்கும் மேற்பட்ட சிறு, குறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுறைமாகவும் 10 ஆயிரம் பேர் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளாடைகள், விளையாட்டு ஆடைகள், மகளிருக்கான ஆடைகள் உற்பத்தியில் எலாஸ்டிக் பயன்பாடு மிகவும் இன்றியமையாத தாகும். எலாஸ்டிக் இல்லாவிட்டால், அந்த ஆடையை சரியாக அணிய இயலாது.
எலாஸ்டிக் உற்பத்திக்கு ரப்பர், பாலியெஸ்டர் நூல் ஆகியவை முக்கிய மூலப்பொருட்களாகும். ரப்பரானது இந்தியாவில் அஸ்ஸாம், கேரளம் ஆகிய மாநிலங்களில் இருந்தும், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி செய்யப்படுவதில் டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு சரிவு, சர்வதேச அளவில் நிலவும் போர் போன்ற சூழல்களால் மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.பி.கோவிந்தசாமி கூறியதாவது: திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தி தொழில் மூலப்பொருட்கள் தட்டுப்பாடு, விலை உயர்வு போன்றவற்றால் சிக்கலை சந்தித்து வருகிறது. ரப்பர் பாலுக்கான விலையும் கடந்த 6 மாதங்களில் கிலோவுக்கு ரூ.70 உயர்ந்துள்ளது. பாலியெஸ்டர் நூலை பொருத்தவரை குஜராத்தில் இருந்து மட்டுமே வாங்கி வருகிறோம்.
தென்னிந்தியாவில் பாலியெஸ்டர் நூல் உற்பத்திக்கான ஆலைகள் இல்லை. ஈரான்- இஸ்ரேல் போர், கச்சா எண்ணெய்யில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள் காரணமாக கடந்த 6 மாதங்களில் பாலியெஸ்டர் விலையும் கிலோவுக்கு ரூ.60 வரை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ எலாஸ்டிக் உற்பத்தி செய்ய வேண்டும் என்றால் ரப்பரின் பங்கு 35 முதல் 40 சதவீதமும், நூலின் பங்கு 65 முதல் 70 சதவீதமாகும். இந்த விலை உயர்வு காரணமாக மார்ச் மாதத்தில் எலாஸ்டிக் விலை 25 சதவீதமும், தற்போது 15 சதவீதமும் உயர்த்தியுள்ளோம்.
இத்தொழிலானது மற்ற ஜாப் ஒர்க், பிரிண்டிங், டையிங், டையிங் எம்பி ராய்டரிங் போல் அல்லாமல் சொந்தமாக நூல், ரப்பர் ரொக்கமாகக் கொள்முதல் செய்து வருகிறோம். எலாஸ்டிக் உற்பத்தியை ஜாப் ஒர்க் நிறுவனம் என்று நினைத்துக் கொண்டு வாங்குபவர்கள் தொகையை தாமதமாக வழங்கி வருகின்றனர். இதனால் தற்போது எலாஸ்டிக் உற்பத்தி சிக்கலில் உள்ளது. எனவே, எலாஸ்டிக் விற்பனைக்கான தொகையை குறித்த காலத்தில் வழங்குவது குறித்து திருப்பூரில் உள்ள பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுடன் பேசியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.