முட்டை விலை உயர்வுக்கும், எத்தனால் பெட்ரோல் உற்பத்திக்கும் என்ன தொடர்பு?

முட்டை விலை உயர்வுக்கும், எத்தனால் பெட்ரோல் உற்பத்திக்கும் என்ன தொடர்பு?
Updated on
3 min read

ஒரு நடுத்தர குடும்பத்தின் காலை உணவில் இடம்பெறும் முட்டைக்கும், வாகன எரிபொருளான எத்தனால் பெட்ரோலுக்கும் (E20) இடையில் என்ன தொடர்பு இருக்க முடியும்?

மேலோட்டமாகப் பார்த்தால் இரண்டுமே வேறு வேறாகத்தான் தோன்றும். ஆனால், இந்தியப் பொருளாதாரத்தின் பின்னால் இயங்கும்  ‘உணவா? எரிபொருளா?’ என்ற தீவிரப் போராட்டத்தை சற்று உற்று நோக்கினால், வாகன எரிபொருள் எப்படி முட்டையின் விலையை தீர்மானிப்பதில் பங்கு வகிக்கிறது என்பது தெளிவாகும்.

வெங்காயம் வரவைத்த கண்ணீரும், சர்க்கரையின் கசப்பான விலை ஏற்றமும் சாமானிய மக்களின் பாக்கெட்டை ஏற்கெனவே பதம் பார்த்துவிட்டன. இப்போது முட்டை விலையும் தொடர்ந்து அதிகரித்து அதனுடன் கூட்டு சேர்கிறது.

 கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் முட்டையின் விலை 40 சதவீதம் உயர்ந்து, சாமானியர்களின் உணவுப் பட்டியலில் இருந்து மெல்ல விலகி வருகிறது. நாமக்கலில் பண்ணைகளின் மொத்த விலையாக முட்டை ரூ.5.20 முதல் ரூ. 6.00 வரை விற்கப்பட்டாலும்,  வடமாநிலங்களில் ரூ.7-ஆகவும், சில்லறை விற்பனையில் மாநிலங்களுக்கு ஏற்ப ரூ.9 முதல் ரூ.14 வரை விற்கப்படுகிறது.

அடுத்து குளிர்காலம் வரவுள்ள நிலையில், முட்டைக்கான தேவை அதிகரிக்கும் பட்சத்தில் ஒரு முட்டையின் விலை ரூ.20 முதல் ரூ.25 வரை உயரலாம் என வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

முட்டை விலை உயரக் காரணம் என்ன?

மத்திய அரசு கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும், அந்நியச் செலாவணியைச் சேமிக்கவும் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் E20 திட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. ஆரம்பத்தில் கரும்புச் சக்கைகளில் இருந்து எத்தனால் தயாரிக்கப்பட்ட நிலையில், தட்டுப்பாட்டைச் சமாளிக்க மக்காச்சோளத்தில் இருந்து எத்தனால் தயாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இங்குதான் சிக்கல் தொடங்குகிறது. கோழிப் பண்ணைகளில் முட்டை கோழிகளுக்கு வழங்கப்படும் தீவனத்தில் 60 சதவீதம் முதல் 65 சதவீதம் வரை மக்காச்சோளமே முதன்மைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.

முட்டை விலை திடீரென உயர்ந்ததற்கு கோழித் தீவனத்தின் விலை உயர்வும், குறிப்பாக மக்காச்சோளத்தின் விலை அதிகரிப்பும், எத்தனால் உற்பத்தியுமே காரணம் என்று சந்தை வல்லுநர்கள் கூறுகின்றனர். மக்காச் சோளத்தின் விலையில் ஏற்பட்டுள்ள அதிரடி உயர்வு, கோழி முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

3 ஆண்டுகளுக்கு முன் ஒரு டன் மக்காச் சோளத்தின் விலை ரூ. 14,000 ஆக இருந்தது. ஆனால், இப்போது ரூ.26,500 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 5 மாதங்களில் மட்டும் சோளத்தின் விலை 20 சதவீதம் வரை உயர்ந்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

எத்தனாலுக்கும் சோளத்துக்கும் என்ன தொடர்பு?

மத்திய அரசின் எத்தனால் பெட்ரோல் திட்டத்தின் கீழ், விற்பனை செய்யப்படும் பெட்ரோலுடன் 20 சதவீதம் எத்தனால் கலக்கப்படுகிறது. எத்தனால் பயன்பாடு அதிகரித்துள்ளதால், அதற்கான பயிர்களின் தேவையும் அதிகரித்துள்ளது. எத்தனால் தயாரிப்பில் கரும்புக்கு அடுத்தபடியாக மக்காச்சோளம் தான் முக்கிய மூலப்பொருள்.

சோளத்தின் மூலம் தயாரிக்கப்படும் எத்தனால் உற்பத்தி, 2022-ம் ஆண்டில் சுமார் 1 மில்லியன் டன்னாக இருந்தது. இது 2024-ம் ஆண்டில் 6 மில்லியன் டன்னைக் கடந்து தற்போது சுமார் 17 மில்லியன் டன்னை எட்டியுள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் இது 25 மில்லியன் டன்னாக உயரக்கூடும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

மக்களவையில் மத்திய நுகர்வோர் நலத்துறை இணை அமைச்சர் நிமுபென் ஜெயந்திபாய் கூறுகையில், “2024-25 ஆம் ஆண்டில் எத்தனால் தயாரிக்க மட்டும் 125.75 லட்சம் மெட்ரிக் டன் சோளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. சோளம் மூலம் தயாரிக்கப்பட்ட எத்தனால் 477.9 கோடி லிட்டர்கள் சப்ளை செய்யப்பட்டுள்ளன. 2022-ம் ஆண்டில் இருந்து எத்தனால் உற்பத்தி 8.3 லட்சம் டன்னிலிருந்து 125.75 லட்சம் டன்னாக 15 மடங்கு உயர்ந்துள்ளது” என்றார்.

ஆக, மக்காச்சோளம் உற்பத்தியின் பெரும்பகுதி எத்தனால் தயாரிப்புக்குத் திருப்பி விடப்படும்போது, கோழிப் பண்ணைகளில் தீவனத்துக்குப் பிரதான மூலப்பொருளாக இருக்கும் மக்காச்சோளம் போதிய அளவில் கிடைக்காமல், அதிக விலை கொடுத்து வாங்கும் நிலைக்குப் பண்ணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC) அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஆண்டுக்கு 43.4 மில்லியன் டன் சோளத்தை இந்தியா உற்பத்தி செய்கிறது. இதில் 17 மில்லியன் டன் வரை எத்தனால் தயாரிப்புக்கு அனுப்பப்படுகிறது. அதாவது 37 சதவீத சோளம் எத்தனால் உற்பத்திக்கு செல்கிறது. இதனால் கோழித் தீவனத்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு, கடந்த ஓர் ஆண்டில் முட்டை விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

சோளம் இறக்குமதி அதிகரிப்பு

இந்தியாவின் முட்டை உற்பத்தி வளர்ச்சி வேகம் குறைந்துவிட்டது. 2020-21 வரை 6 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை இருந்த உற்பத்தி வளர்ச்சி, தற்போது 3.18 சதவீதம் முதல் 4.44 சதவீதமாக குறைந்துவிட்டது.

இந்தியா மக்காச்சோளத்தை ஏற்றுமதி செய்யும் நாடு என்ற நிலையில் இருந்து இறக்குமதி செய்யும் நாடாக மாறியது நாட்டின் வேளாண் மற்றும் எரிசக்தித் துறைக் கொள்கைகளில் ஏற்பட்ட ஒரு மிகப்பெரிய மாற்றமாகும்.

2022–23 நிதியாண்டில் 34.53 லட்சம் டன் மக்காச்சோளத்தை ஏற்றுமதி செய்த இந்தியா, 2024–25-ல் அது வெறும் 5.56 லட்சம் டன்னாக வீழ்ச்சியடைந்தது. அதேசமயம், இறக்குமதி 1.37 லட்சம் டன்னிலிருந்து 9.70 லட்சம் டன்னாக (600% உயர்வு) அதிகரித்து, இந்தியா நிகர இறக்குமதியாளராக மாறியுள்ளது.

தீர்வு என்ன?

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சுயதேவைக்கு எத்தனால் பெட்ரோல் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அது ஏழை எளிய மக்களின் உணவைப் பாதிக்கும் வகையில் இருக்கக் கூடாது.

வேளாண் கழிவு பயன்பாடு:

மக்காச்சோளம் போன்ற உணவுப் பயிர்களைச் சார்ந்திருக்காமல், வைக்கோல், சோளத் தட்டை போன்ற வேளாண் கழிவுகளிலிருந்து எத்தனால் தயாரிப்பதை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும்.

இறக்குமதிச் சலுகை:

கோழிப் பண்ணைத் தொழிலைப் பாதுகாக்க மக்காச்சோளம்  இறக்குமதி மீதான வரியைத் தற்காலிகமாகக் குறைத்து இறக்குமதியை அதிகரித்து, மக்காசோளம் மலிவாக கிடைக்க உதவ வேண்டும். எரிபொருள் தேவையும் உணவுப் பாதுகாப்பும் ஒன்றுக்கொன்று முரண்படாத ஒரு சீரான கொள்கையை வகுப்பதே இதற்கு நிலையான தீர்வாக அமையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

முட்டை விலை உயர்வுக்கும், எத்தனால் பெட்ரோல் உற்பத்திக்கும் என்ன தொடர்பு?
வெங்காயம் விலை கடுமையாக உயர்வு - காரணம் என்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in