பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 அதிகரிப்பு

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 அதிகரிப்பு
Updated on
1 min read

சென்னை: பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்துள்ளது. அதாவது, ரூ.100.80-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் இப்போது ரூ.103.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.11 உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது டீசல் விலை ரூ.95.50 ஆக உள்ளது.

அமெரிக்கா - இஸ்ரேல் படைகள் மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது. அதன் எதிரொலியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்கெனவே சில நாடுகளில் உயர்ந்துள்ளது. இந்தியாவில் சில தனியார் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தின. எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில்தான் பெட்ரோல், டீசல் விலையும் தற்போது அதிகரித்துள்ளது.

சமீபத்தில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி விடுத்த செய்தியில், “கரோனா பெருந்தொற்று காலத்தில் வீட்டில் இருந்து பணியாற்றுவது, ஆன்லைனில் ஆலோசனை கூட்டம் நடத்துவது போன்ற நடைமுறைக்கு நாம் பழகிக் கொண்டோம். தற்போது மீண்டும் அதை நாம் நம் தேசத்தின் நலன் கருதி பின்பற்ற வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. அது இன்றைய காலத்தின் கட்டாயமும் கூட. இதன் மூலம் எரிபொருள் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள முடியும்.

பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலை உலக அளவில் விலை உயர்ந்துள்ளது. இத்தகையச் சூழலில் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்குவதற்காக செலவிடப்படும் அந்நியச் செலாவணியை, பெட்ரோல் மற்றும் டீசலை சேமிப்பதன் மூலம் அதை மிச்சப்படுத்துவது நம் எல்லோரது பொறுப்பாகும். இதே நிலைதான் சமையல் எண்ணெய்க்கும் உள்ளது. அதன் பயன்பாட்டை நாம் குறைத்துக் கொள்ள வேண்டி உள்ளது. இது தேசபக்திக்கு சிறந்தவொரு பங்களிப்பாக இருக்கும்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சரக்கு போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்து, பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நாட்டின் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், இந்த விலை உயர்வு சாமானிய மக்களுக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் எனப் பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும், சிஎன்ஜி எரிவாயு விலையும் கிலோவுக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளதால் ஆட்டோ மற்றும் வாடகை கார் கட்டணங்களும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 அதிகரிப்பு
நாட்டின் மொத்த பணவீக்கம் 8.3 சதவீதமாக அதிகரிப்பு: மூன்றரை ஆண்டுகளில் முதல்முறை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in