‘‘பிரகாசமான ஒளியில் இந்தியா இருப்பதை பொருளாதார ஆய்வறிக்கை காட்டுகிறது’’ - ஆனந்த நாகேஸ்வரன்

‘‘பிரகாசமான ஒளியில் இந்தியா இருப்பதை பொருளாதார ஆய்வறிக்கை காட்டுகிறது’’ - ஆனந்த நாகேஸ்வரன்

Published on

புதுடெல்லி: 2025-26-ம் நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை, இருண்டு வரும் உலகில் இந்தியா பிரகாசமான ஒளியில் இருப்பதை காட்டுவதாக தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

2026-27-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில், அதற்கு முன்பாக, 2025-26 நிதி ஆண்டின் பொருளாதார நிலை குறித்த ஆய்வறிக்கையை அவர் மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.

இந்த பொருளாதார ஆய்வறிக்கை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன், ‘‘இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் வலுவடைந்துள்ளது. பணவீக்க அழுத்தம் அதிக அளவில் குறைந்துள்ளது.

வலுவான உள்நாட்டுத் தேவையும், விலைகளில் நீடித்த மிதமான போக்கும் உள்ளது. இது, நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கிய உந்து சக்தியாக இருக்கும். இருண்டு வரும் உலகில் இந்தியா பிரகாசமான ஒளியில் இருப்பதை 2025-26-ம் நிதி ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை காட்டுகிறது.

கரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய காலமான 2012 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி சராசரியாக 6.4 ஆக இருந்தது. அதன் பிறகு 2025-26 நிதி ஆண்டில்தான் அது 6.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, 2026-27ல் 7.4% ஆக அதிகரிக்கும். நுகர்வு அதிகரிப்பு மற்றும் முதலீடுகள் அதிகரிப்பு ஆகியவை மீட்சிக்கு துணைபுரிகின்றன.

பணவீக்கம் கணிசமாக குறைந்துள்ளது. ஒட்டுமொத்த நுகர்வோர் விலை குறியீட்டுப் பணவீக்கம் 2023 நிதி ஆண்டில் 6.7% ஆக இருந்தது. 2024 நிதி ஆண்டில் இது 5.4% ஆகவும், 2025 நிதி ஆண்டில் 4.7% ஆகவும் குறைந்து, டிசம்பர் வரை 1.7% சரிந்துள்ளது. தங்கம், வெள்ளி தவிர்த்த முக்கிய பணவீக்கம் 2023 நிதி ஆண்டில் 6.1% ஆக இருந்தது. இது, 2025 நிதி ஆண்டில் 3% ஆக குறைந்துள்ளது.

நிதிப் பற்றாக்குறையை குறைக்க அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 2021 நிதி ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.2% ஆக இருந்த நிதி பற்றாக்குறை, 2022 நிதி ஆண்டில் 6.7% ஆகவும், 2023ல் 6.5% ஆகவும், 2024ல் 5.5% ஆகவும் சரிந்துள்ளது. 2025 நிதி ஆண்டில் இது 4.8% ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, 2026ம் நிதி ஆண்டில் இது 4.4% ஆக இருக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வருவாய் வளர்ச்சி மேம்பட்டுள்ளது. 2022ல் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 6.9 கோடியாக இருந்த நிலையில், 2025 நிதி ஆண்டில் அது 9.2 கோடியாக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூலதனச் செலவினங்களின் பங்கு அதிகரித்துள்ளது. வளர்ச்சி சார்ந்த செலவினங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்படுவதை இது காட்டுகிறது’’ என தெரிவித்தார்.

‘‘பிரகாசமான ஒளியில் இந்தியா இருப்பதை பொருளாதார ஆய்வறிக்கை காட்டுகிறது’’ - ஆனந்த நாகேஸ்வரன்
‘‘அசாதாரண வளர்ச்சியை எட்ட முடியும் என்பதை இந்தியா நிரூபித்துள்ளது’’ - உலக வங்கி தலைவர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in