புவனேஸ்வர்: அசாதாரண வளர்ச்சியை சாத்தியமாக்க முடியும் என்பதை இந்தியா நிரூபித்துள்ளது என்று உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா தெரிவித்துள்ளார்.
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய அஜய் பங்கா, ‘‘அசாதாரணமான வளர்ச்சியை சாத்தியமாக்க முடியும் என்பதை இந்தியா நிரூபித்துள்ளது. வளர்ச்சி சதவீதம் குறித்த எண் முக்கியமல்ல. 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியாவை அடைய விரும்பினால், அதற்கான வசதிகள், திறன் மேம்பாட்டு முயற்சிகள், மக்களின் அர்ப்பணிப்பு ஆகியவை மிகவும் முக்கியம். இது குறித்து இந்தியர்கள் சிந்திக்க வேண்டும்.
இந்தியாவில் திறன் மேம்பாடு மிகவும் முக்கியம். ஒவ்வொரு ஆண்டும் 1.2 கோடி இளைஞர்கள் வேலைக்குத் தயாராகிறார்கள். அவர்களின் திறனை சரியான முறையில் மேம்படுத்தினால், அவர்களுக்கு ஒரு கிராமத்தில், ஒரு நகரத்தில், ஒரு மாநிலத்தில், வெளிநாடுகளில் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பை உறுதிப்படுத்த முடியும்.
இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையேயான ஒப்பந்தம் முக்கியமானது. அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களுமே முக்கியமானவை. கடந்த சில ஆண்டுகளில், உலக வர்த்தகம் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. வளர்ந்து வரும் சந்தைகளின் பங்கு 20%-ல் இருந்து 40% ஆக, அதாவது இரு மடங்காக அதிகரித்துள்ளது. இந்தியாவைப் போன்ற வளர்ந்து வரும் சந்தைகள், இப்போது உலக வர்த்தகத்தின் ஒரு முக்கிய அங்கமாக உள்ளன.
கடந்த 20 ஆண்டுகளில், 100 பிராந்திய மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. ஆனால், அது இப்போது இரட்டிப்பாகி உள்ளது. இந்தியா - ஐரோப்பிய யூனியன் ஒப்பந்தம் அதற்கு ஓர் எடுத்துக்காட்டு. இரு தரப்பிலும் சுங்க வரிகளை குறைப்பது அல்லது இல்லாமல் செய்வது என்பது இரு தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும். இது ஒரு நல்ல விஷயம்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் உள்கட்டமைப்புகளில் செய்யப்பட்டுள்ள முதலீட்டின் அளவு உண்மையில் மிகவும் பாராட்டத்தக்கது. இன்று நீங்கள் புவனேஸ்வரில் தரையிறங்கும்போது ஒரு நவீன விமான நிலையத்தைக் காண்கிறீர்கள். 280 விமான நிலையங்கள், ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான சாலைகள் என உள்கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் மூன்று விஷயங்கள் நடக்க வேண்டும். ஒன்று, உள்கட்டமைப்பு வலுவாக இருக்க வேண்டும். விமான நிலையங்கள், சாலைகள், பாலங்கள் போன்ற வெளியே தெரியும் உள்கட்டமைப்பு மட்டுமல்ல, மனித வளம், திறன் மேம்பாடு, சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி ஆகியவற்றிலும் உள்கட்டமைப்பு வலுவாக வேண்டும்.
இரண்டாவது, சரியான வணிகத்துக்கு உகந்த கொள்கைகள் இருக்க வேண்டும். இதில், இந்தியாவில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நிலம் மற்றும் தொழிலாளர் சட்டங்களில் புதிய மாற்றங்களை பிரதமர் மோடி முன்னெடுத்து வருகிறார். இவை, இந்தியாவின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கும், வணிகம் செய்வதை எளிதாக்குவதற்கும் மிகவும் முக்கியமானவை.
மூன்றாவது, ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பும் அதை வழங்குவதும்தான். இதிலும், இந்தியா பல முன்னேற்றங்கள அடைந்துள்ளது. ஆனால், உயர்தர ஆரம்ப சுகாதாரப் பராமரிப்பை வழங்க இன்னும் அதிக வாய்ப்புகள் உள்ளன. இது, மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்தவப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்றோருக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும்.
நான்காவதாக, சுற்றுலாத் துறையைப் பற்றி இந்தியா அதிகம் சிந்திக்க வேண்டும். சுற்றுலாத் துறையில் இந்தயா ஓரளவுக்கு சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஆனால், சுற்றுலாத் துறையில் நிறைய வாய்ப்புகள் உள்ளன.
இந்தியாவுக்கு எதிராக விதிக்கப்படும் வரிகள் குறித்து குறைவாகவும், வாய்ப்புகளைப் பற்றி அதிகமாகவும் சிந்திக்க வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தை அணுகியதைப் போல அணுக வேண்டும். எனெனில், இந்த உரையாடல் வரிகளைப் பற்றியது அல்ல; மாறாக வாய்ப்புகளைப் பற்றியது.
இந்திய பொருளாதாரத்தில் ஏற்றுமதி ஒரு சிறிய சதவீதமாகவே உள்ளது. அதே நேரத்தில், உள்நாட்டு நுகர்வு, மூலதன உருவாக்கம் ஆகியவை முக்கிய பலங்களாக உள்ளன. மற்ற நாடுகளில், ஏற்றுமதி மிக அதிக சதவீதமாக உள்ளது. எனவே, வரிகள் மீது குறைவாகவும், வாய்ப்புகள் மீது அதிகமாகவும் இந்தியா கவனம் செலுத்த வேண்டும். அதுதான் சிந்திப்பதற்கான சரியான வழி’’ என்று தெரிவித்துள்ளார்.