

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டத்தின் வெற்றியால் ஈர்க்கப்பட்டு, சமூக வலைதளங்களில் புதிதாக ‘இ20 ஜனதா கட்சி’ உதயமாகியுள்ளது.
‘நுகர்வோர்கள் உரிமைக்கான இயக்கம்’ என்ற பெயரில், எந்த அரசியல் கட்சியிலும் சாராதவர்கள் எனக் கூறிக்கொண்டு ‘பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலந்து விற்பனை செய்வதற்கு எதிராக இந்த இ20 ஜனதா கட்சி தொடங்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு முறைகேடுகளைக் களைய வேண்டும், மத்திய கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் எனக் கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாதமாகப் போராட்டம் நடத்தி வெற்றியும் கண்டனர்.
மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதான் பதவி விலகிய அடுத்த சில மணி நேரங்களில் சமூக வலைதளங்களில் ‘இ20 ஜனதா கட்சி’ (E20 Janta Party) என்ற பெயர் பிரபலப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, அதனின் சமூக வலைதளப் பக்கங்களை லட்சக்கணக்கில் பின்தொடர தொடங்கினர்.
‘இ20 ஜனதா கட்சி’ என்றால் என்ன?
‘இ20 ஜனதா கட்சி’ என்பது தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படாத கட்சி. எக்ஸ், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் முதலான சமூக ஊடகங்களில் உருவாக்கப்பட்டு, திடீரென பிரபலமடைந்தது. ‘இந்திய வாகன ஓட்டிகளின் குரலாக இருப்போம்’ என்று மட்டும் சமூக ஊடக பயோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சமூக வலைத்தளப் பக்கங்களில் இ20 கலந்த பெட்ரோலுக்கு எதிராக பல்வேறு கருத்துகள் தொடர்ச்சியாகத் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, “எங்கள் வாகனங்கள் எல்லாம் பரிசோதனை எந்திரங்கள் அல்ல. நாங்கள் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தில் வாகனங்களை வாங்கி இருக்கிறோம். நாங்கள் ஏற்கெனவே வரியும் செலுத்திவிட்டோம்” என மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பப்பட்டுள்ளது.
மற்றொரு பதிவில், “இந்தியா என்பது நடுத்தர வர்க்கத்துக்கான தேசம். லட்சக்கணக்கான மக்கள் கார் வைத்திருப்பது அவர்களின் பொழுதுபோக்குக்கு அல்ல. அது அவர்களின் வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு. இப்படிப்பட்ட சூழலில் எரிபொருள் சிக்கனம், இன்ஜின் செயல்பாடு என்பது நேரடியாக நடுத்தர குடும்பத்தின் பாக்கெட்டை பதம் பார்க்கும்.
அப்படியானால், வாகன உற்பத்தியாளர்கள் பரிந்துரைக்கும் எரிபொருளுக்குப் பதிலாக, சாதாரண மக்களின் வாகனங்களின் இன்ஜின்களில் ஏன் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோரிக்கைகள் என்னென்ன?
எக்ஸ் தளத்தில் ‘இ20 ஜனதா கட்சி’ பதிவு செய்துள்ள கருத்தில் “எங்களின் தேவையில் தெளிவாக இருக்கிறோம். இ20 ஜனதா கட்சி என்பது மக்கள் சக்தியால் இயங்கும் இயக்கம். இ20 பெட்ரோலில் என்னென்ன கலவைகள் சேர்க்கப்படுகின்றன என்பதில் வெளிப்படைத்தன்மை வேண்டும். எரிபொருள் கலவைகளின் செலவுகள், நன்மைகள், நம்பகத்தன்மை, எத்தனால் 20% கலந்த பெட்ரோல் எவ்வாறு வாகனங்களை பாதிக்கும், வாகனங்களின் மைலேஜ் குறையுமா, நீண்ட கால வாகனப் பராமரிப்பு ஆகியவற்றை அறிந்துகொள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் உரிமை இருக்கிறது.
பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலப்பது என்பது மத்திய அரசின் முடிவாக இருந்தால், அதில் தவறில்லை. அதேசமயம் 100 சதவீதம் தூய பெட்ரோலை வாங்கும் உரிமை மக்களுக்கும், நுகர்வோர்களுக்கும் இருக்கிறது. அதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். நாங்கள் மானியங்களை ரத்து செய்யக் கோரவில்லை. இலவச எரிபொருளையோ அல்லது இ20 பெட்ரோல் பயன்பாட்டை நிறுத்துவதையோ கேட்கவில்லை. மாறாக, வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களுக்கு மிகவும் பொருத்தமான எரிபொருளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை, வசதியை உருவாக்க வேண்டும் என்றுதான் கேட்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருக்கும் நிதின் கட்கரி ராஜினாமா செய்ய வேண்டும் என்று ‘இ20 ஜனதா கட்சி’யினர் வலியுறுத்தி வருகின்றனர்.
‘இ20 ஜேபி’ வளர்ந்தது எப்படி?
இணையதளத்தில் உருவான கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு ‘இ20 ஜனதா கட்சி’யும் சமூக வலைதளங்களில் உருவானது. இ20 ஜனதா கட்சி தொடங்கியதும் இணையத்தில் ஏராளமானோர் ஆதரவு தெரிவித்து, நாளுக்கு நாள் ஃபாலோயர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
சமீபத்திய நிலவரப்படி, இ20 ஜனதா கட்சியின் எக்ஸ் தளத்தை 3 லட்சத்துக்கு மேற்பட்டோரும், இஸ்டாகிராம் பக்கத்தை 5 லட்சத்துக்கு மேற்பட்டோரும் பின்தொடர்ந்துள்ளனர். ஆனால், யார் இதை தொடங்கியது என்பது இதுவரைத் தெரியவில்லை.
நுகர்வோர்களின் உரிமை மறுக்கப்படக் கூடாது, அவர்களுக்கு 100% தூய பெட்ரோலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஒவ்வொரு பதிவிலும் இந்தக் கட்சி வலியுறுத்தி வருகிறது.
கரப்பான் பூச்சி கட்சியைத் தொடங்கும் முன், அபிஜித் தீப்கே வலைதளத்தில் கேட்ட “அனைத்து கரப்பான் பூச்சிகளும் ஒன்று சேர்ந்தால் என்னாகும்?” என்ற கேள்வி வைரலாகியது. அதை அடிப்படையாக வைத்து, “அனைத்து பைக் மற்றும் கார் உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்தால் என்னாகும்?” என்ற கேள்வியை இ20 ஜனதா கட்சி எழுப்பியிருக்கிறது. இ20 ஜனதா கட்சியின் பிரச்சாரத்தைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் 20 சதவீதம் எத்தனாலை பெட்ரோலில் கலப்பது விவாதப் பொருளாகியுள்ளது.
மத்திய அரசு என்ன சொல்கிறது?
மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில் “இ20 பெட்ரோல் என்பது பாதுகாப்பான, தூய்மையான மற்றும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட எரிபொருள். இது இன்ஜின்களைப் பாதிக்கும் என்பதை எந்த ஓர் ஆய்வும், நடைமுறைப் பயன்பாட்டிலும் நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும், இ10 பெட்ரோலுக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்ட வாகனங்களில் இ20 பெட்ரோலைப் பயன்படுத்தும்போது, மைலேஜில் சற்று குறைவு ஏற்படலாம்” என்றனர்.
“எத்தனாலுக்கு இயல்பாகவே அரிப்புத் தன்மை மற்றும் ஈரப்பதத்தை ஈர்க்கும் தன்மை அதிகம் உண்டு. ஆனால், இது எந்த வகை வாகனப் பயன்பாடு என்பதைப் பொறுத்துதான் அமையும். 2023 ஏப்ரலுக்குப் பிறகு இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்து புதிய கார்கள் மற்றும் டூ-வீலர்களும் இ20 எரிபொருளுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டுவிட்டன. எனவே, இவற்றின் எரிபொருள் குழாய்கள், பிளாஸ்டிக் பாகங்கள் மற்றும் இன்ஜின் வால்வுகள் எத்தனாலால் அரிக்கப்படாத வண்ணம் சிறப்பு ரப்பர் மற்றும் துருப்பிடிக்காத எஃகு கொண்டு செய்யப்பட்டுள்ளன. எனவே, புதிய வாகனங்களில் எத்தனால் கலந்த பெட்ரோலால் இன்ஜின் அரிப்பு பிரச்சனை ஏற்படாது.
ஆனால், 2023-க்கு முந்தைய பழைய வாகனங்களில் சாதாரண ரப்பர் மற்றும் அலுமினியப் பாகங்கள் இருக்கும். இவற்றில் நீண்ட நாட்களுக்கு அதிகளவு எத்தனால் கலந்த பெட்ரோல் தேங்கி நிற்கும்போது, எத்தனால் காற்றில் உள்ள ஈரப்பதத்தை இழுத்து, பாகங்களில் லேசான அரிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. குறிப்பாக கார்பரேட்டர் கொண்ட பழைய டூ-வீலர்களில் ஃபியூல் லைன்கள் மற்றும் ஜெட் துளைகளில் அடைப்பு அல்லது அரிப்பு ஏற்படலாம்” என்கின்றனர் துறை சார்ந்த வல்லுநர்கள்.