ஈரான் போர் தாக்கம்: தண்ணீர் பாட்டில் விலை அதிகரிப்பும், தட்டுப்பாடு அபாயமும்!

ஈரான் போர் தாக்கம்: தண்ணீர் பாட்டில் விலை அதிகரிப்பும், தட்டுப்பாடு அபாயமும்!
Updated on
2 min read

மேற்காசிய நாடுகளில் தீவிரமாகும் போர்ச் சூழல் காரணமாக தமிழகத்தில் தண்ணீர் பாட்டில்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் கோடைக்காலத்தில் தண்ணீர் பாட்டில் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 20 நாட்களுக்கு மேலாக அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரான் மீது போர் தாக்குதலை தொடர்கின்றன. ஈரானும் அமெரிக்க தளவாடங்களை குறிவைப்பதாக வளைகுடா நாடுகளின் மீது திடீர் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

போர் தொடங்கிய ஒரு சில நாட்களிலேயே இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது. குறிப்பாக, வணிக ரீதியான காஸ் சிலிண்டர்கள் கிடைப்பது குதிரைக்கொம்பாகிவிட்டது.

அடுத்ததாக, இதன் தாக்கம் பெட்ரோலிய பொருட்களின் மூலப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் நாற்காலிகள், வாகனங்களுக்கான டயர்கள், சிந்தடிக் சேலைகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், அழகு சாதன பொருட்கள் உள்ளிட்ட 6,000-க்கும் மேற்பட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை தாறுமாறாக உயர செய்துள்ளது.

குறிப்பாக, குடிநீர் அடைத்து விற்பனை செய்யப்படும் தண்ணீர் பாட்டில்கள் இதுவரை ஒரு லிட்டர் ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் ரூ.25 ஆக உயர்ந்துவிட்டது.

கோடைக்காலம் துவங்கிய நிலையில் ‘போர் தொடரும் பட்சத்தில் தண்ணீர் பாட்டில் விலையேற்றமும் தொடரும்’ என்று தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர் சங்கத்தினர் அதிர்ச்சியை கூட்டுகின்றனர்.

போரின் காரணமாக, பிளாஸ்டிக் பாட்டில், பிளாஸ்டிக் மூடி, பிளாஸ்டிக் பேப்பர் ஆகிவற்றின் விலை சுமார் 40% அதிகமாக உயர்ந்துள்ளது. இதில், கண்ணாடி போன்ற மினுமினுப்பு தன்மை கொண்ட ஒரு கிலோ பிளாஸ்டிக் பாட்டில் (RESIN - PETE bottles - Polyethylene Terephthalate) விலை ரூ.105-ல் இருந்து ரூ.165 ஆக உயர்ந்துவிட்டது.

பிளாஸ்டிக் பாட்டில் மூடியின் (HDPE: High-Density Polyethylene) விலை ஒரு கிலோ ரூ.123-ல் இருந்து ரூ.210 ஆக உயர்ந்துவிட்டது.

தனித்தனியாக உள்ள குடிநீர் பாட்டில்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் இணைத்து தனித்தனி பெட்டிகளாக கட்டுவதற்கான பேக்கிங் பிளாஸ்டிக் பேப்பரின் (Low - density polyethylene (LDPE) ஒரு கிலோ விலை ரூ.140-ல் இருந்து ரூ.240 ஆக உயர்ந்துவிட்டது.

இவற்றின் விலையேற்றம் காரணமாக, இதுவரை ரூ.8-க்கு விற்பனை செய்யப்பட்டுவந்த 200 மில்லி லிட்டர் குடிநீர் பாட்டில் விலை இப்போது ரூ.10-க்கும், ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டுவந்த 300 மி.லி. குடிநீர் பாட்டில் ரூ.12-க்கும், ரூ.12-க்கு விற்பனை செய்யப்பட்டுவந்த 500 மி.லி. குடிநீர் பாட்டில் ரூ.16-க்கும், ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டுவந்த ஒரு லிட்டர் குடிநீர் பாட்டில் ரூ.25-க்கும், ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த 2 லிட்டர் குடிநீர் பாட்டில் ரூ.35-க்கும், ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோ, 5 லிட்டர் குடிநீர் பாட்டில் ரூ.70-க்கும், மறுமுறை பயன்படுத்தப்படும் கேன்களில் அடைக்கப்பட்ட 20 லிட்டர் குடிநீர் ரூ.45-ல் இருந்து ரூ.55-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அரசுகள் கவனம்:

‘‘ஒருமுறை குடிநீர் பாட்டிலில் விலையை உயர்த்தினால் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அந்த விலையேற்றம் நிலையானதாக இருக்கும். ஆனால் தற்போதைய நிலையில், மூலப்பொருள்களின் தொடர் விலையேற்றத்தால் 4 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் பாட்டில்களின் விலையை உயர்த்த வேண்டியுள்ளது. குடிநீரை அடைத்து விற்பனை செய்யும் தொழிலை பாதுகாக்க பிளாஸ்டிக் பாட்டில்களை மத்திய, மாநில அரசுகள் கொள்முதல் செய்ய வேண்டும்.

நியாயமான நிலையான விலையில் பாட்டில் குடிநீர் பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கும் மேலாக பிளாஸ்டிக் பாட்டில்கள், மூடிகள் தயாரிப்பதற்கு உரிய மூலப்பொருட்களை தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்’’ என்று தமிழ்நாடு அடைக்கப்பட்ட குடிநீர் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஆண்டவர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

ஈரான் போர் தாக்கம்: தண்ணீர் பாட்டில் விலை அதிகரிப்பும், தட்டுப்பாடு அபாயமும்!
தமிழகத்தில் 3 நாட்களில் உரிய ஆவணங்கள் இல்​லாத ரூ.42.65 கோடிக்கு பணம், பொருட்கள் பறிமுதல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in