

அகமதாபாத்: சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்தநாளில் குஜராத்தின் ஏக்தா நகரில் ரூ.426 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
குஜராத் மாநிலத்தின் ஏக்தா நகரில், இரும்பு மனிதர் என போற்றப்படும் இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரரும், முதல் துணைப் பிரதமருமான சர்தார் வல்லபபாய் படேலின் 597 அடி உயர சிலை உள்ளது. ஒற்றுமை சிலை என்று அழைக்கப்படும் இது உலகிலேயே மிக உயரமான சிலையாகும். இதனால் இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் அதிகம் பேர் பார்வையிடும் சுற்றுலா தலங்களில் ஒன்றாக இது உள்ளது.
இந்நிலையில், சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி நேற்று குஜராத்தின் ஏக்தா நகரில் சுமார் ரூ.426 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். சுற்றுலாவை மேம்படுத்துவதையும், ஒற்றுமைச் சிலையைச் சுற்றியுள்ள உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இத்திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன. மொத்த முதலீட்டில், ரூ.307.83 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள நிறைவடைந்த திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டன, அதே வேளையில் ரூ.118.88 கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
நிறைவடைந்த திட்டங்களில் ரூ.50 கோடி செலவில் கட்டப்பட்ட ஐ.ஆர்.சி.டி.சி. ஹோட்டல், ரூ.16 கோடி மதிப்பிலான ஏக்தா கப்பல், ரூ.14.30 கோடி செலவில் உருவாக்கப்பட்ட மழைக்காடு, 220 மீட்டர் நீளமுள்ள பிரம்மாண்ட கண்ணாடி பாலம் ஆகியவை அடங்கும். ரூ.45.53 கோடி மதிப்பிலான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ரூ.21.40 கோடி மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களும் திறந்து வைக்கப்பட்டன. ரூ.23.81 கோடி செலவில் உருவாக்கப்பட்ட விழா அணிவகுப்பு பாதை மற்றும் அது தொடர்பான வசதிகளும் பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டன. பார்வையாளர்களின் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் ரூ.28.22 கோடி மதிப்பில் ஒரு நகரும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
உலகத்தரம் வாய்ந்த..
இத்திட்டங்கள் அனைத்தும் ஒற்றுமைச் சிலையை காண வரும் சுற்றுலாப் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதோடு, ஏக்தா நகரை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.