

கோவை: கோவையில் இருந்து மும்பைக்கு தினமும் 2 விமான சேவை, வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதற்கு கோவை தொழில் துறையினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூரு, புதுடெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், சார்ஜா, அபுதாபி, துபாய்க்கும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. கோவையில் இருந்து நாளொன்றுக்கு மொத்தம் 28 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் கோவையில் இருந்து மும்பைக்கு தினமும் 2 விமானங்களை இயக்க உள்ளது. கோவையில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்படும் விமானம், மும்பைக்கு 10 மணிக்கு சென்றடையும்.
இரவு 10.20 மணிக்கு புறப்படும் மற்றொரு விமானம் நள்ளிரவு 12.40 மணிக்கு மும்பையை அடையும்.
இதேபோல் அதிகாலை 5.25 மணிக்கு மும்பையில் இருந்து புறப்படும் விமானம், காலை 7.20 மணிக்கு வரும். இரவு 7.55 மணிக்கு புறப்படும் மற்றொரு விமானம் இரவு 9.50 மணிக்கு கோவையை வந்தடையும்.
இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, “கோவையில் இருந்து மும்பை வழியாக வெளிநாடுகளுக்கு செல்லும் பயணி களுக்கு இந்த புதிய விமான சேவை பயனுள்ளதாக இருக்கும்.
பயணிகள் தங்களது உடைமைகளை இறுதியாக செல்லும் இடம் வரை பதிவு செய்து கொள்ள முடியும். ஒரே பயணச்சீட்டில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய முடியும்.
இதில் மும்பையில் விமானம் மாறும்போது எளிதான இணைப்பு வசதி கிடைப்பதால், காலதாமதம் தவிர்க்கப்படும். குறிப்பாக மூத்த குடிமக்கள் மற்றும் குடும்பத்தினருடன் பயணம் செய்வோருக்கு பயணம் எளிதாகும்” என்றனர்.
தொழில் துறையினர் தரப்பில் கூறுகையில், “கோவையில் இருந்து நீண்ட தூர சர்வதேச நகரங்களுக்கு நேரடி விமான சேவை குறைவாக உள்ள நிலையில், காலை, இரவு நேரங்களில் மும்பை விமான சேவை முக்கியத்துவம் வாய்ந்தது.
கோவையில் இருந்து மும்பை வழியாக பல்வேறு நாடுகளுக்கு ஒரே விமான மாற்றத்தில் பயணம் மேற்கொள்ள முடியும். சர்வதேச விமான இணைப்புகள் அதிகரிப்பதன் மூலம் கோவையின் வர்த்தகம், சுற்றுலா மற்றும் முதலீட்டு வாய்ப்பு அதிகரிக்கும். இதன் மூலம் மேற்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார வளர்ச்சி மேம்படும்.
கோவை–மும்பை இடையேயான விமான இணைப்பை வலுப்படுத்தியுள்ள ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது” என்றனர்.