

பெரியகுளம்: எரிவாயு சிலிண்டர்கள் பற்றாக்குறை காரணமாக, ஹோட்டல்கள் அதிகளவில் விறகுகளை கொள்முதல் செய்ய தொடங்கியுள்ளன. இதனால், விறகு விலை உயர்ந்து செங்கல் சூளை தொழிலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள், ஈரான் மீது போர் தொடுத்து வருவதால், உலகம் முழுவதும் காஸ் தட்டுப்பாடு நிலவுகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வணிக எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், பெரிய வணிகர்கள் முதல் சாலையோர சிறு வணிகர்கள் வரை அனைவரும் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இந்நிலையில், பல ஹோட்டல்கள் விறகு அடுப்பை பயன் படுத்தத் தொடங்கியுள்ளன. தேவை அதிகரி்ப்பால் விறகின் விலையும் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக, விறகை பெரிதும் சார்ந்துள்ள செங்கல் சூளைகள் சிக்கலை எதிர்நோக்கி உள்ளன.
தற்போது, ஹோட்டல்கள் விறகுக்காக போட்டி போட்டு கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளதால், செங்கல் சூளைகளுக்கு நெருக் கடி ஏற்பட்டுள்ளது.
செங்கல் சூளைகளில் குறைந்து வரும் விறகு இருப்பு. (உள்படம் ) வீரணன்.
இதுகுறித்து செங்கல் உற்பத்தியாளர் வீரணன் கூறுகையில், ‘மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. ஒவ்வொரு சூளையும் குறைந்தது 30 ஆயிரம் செங்கல்களை தயாரிக்கும் அளவுக்கு வடிவமைக் கப்பட்டுள்ளது.
சூளைக்கான விறகுகள் ராமநாதபுரம் மற்றும் பெரியகுளம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் வருகிறது. இதுவரை டன் ரூ.4 ஆயிரத்துக்கு விற் கப்பட்ட விறகு திடீரென ரூ.7 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதனால், செங்கல் தயாரிப்பு பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.