

கோவை: கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, புதுடெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், சார்ஜா, அபுதாபி, துபாய் ஆகிய நாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.
கோவையில் இருந்து நாள்தோறும் 28 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் கடந்த 1-ம் தேதி முதல் கோவை- மும்பை இடையே தினந்தோறும் 2 சேவையை தொடங்கியது.
இந்நிறுவனம் தற்போது கோவை - பெங்களூரு இடையே தினமும் 2 முறை விமானச் சேவைகளை அறிமுகப்படுத்த உள்ளது. இதன்படி, கோவையில் காலை 9.10 மணிக்கு புறப்படும் விமானம் காலை 10.05 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.
அதேபோன்று இரவு 9.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் மற்றொரு விமானம் இரவு 10.45 மணிக்கு பெங்களூரு விமான நிலையத்தை அடையும். பெங்களூருவில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்படும் விமானம் காலை 8.25 மணிக்கு கோவை வந்தடையும்.
இரவு 7.10 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்படும் மற்றொரு விமானம் இரவு 8.15 மணிக்கு கோவையை வந்தடையும்.
இந்த சேவை முதல்கட்டமாக அக்டோபர் 25-ம் தேதி முதல் தொடங்கும் என்றும், அதன்பின்னர் நவம்பர் 1-ம் தேதி முதல் முழுமையாக விமானம் இயக்கப்படும் என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கோவை தொழில்துறையினர் கூறும்போது, “இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இயக்கும் கோவை- பெங்களூரு விமான சேவைகளின் எண்ணிக்கை தினமும் 5 ஆக உயரும்.
இச்சேவை தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் துறை வல்லுநர்கள், வணிக பயணிகள் மற்றும் சர்வதேச பயணிகளுக்கு பெரிதும் பயன் தரும்.
பெங்களூரு வழியாக லண்டன் மற்றும் பிற உலக நாடுகளுக்கு செல்ல வசதியான இணைப்பு வசதிகளை ஏற்படுத்தும். கோவையின் பொருளாதார வளர்ச்சிக்கும் உறுதுணையாக அமையும்” என்றனர்.