

படம்: மெட்டா ஏஐ
பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகள், தாங்கள் அளிக்கும் சேவைக்கு ஏற்றார்போல், வாடிக்கையாளர்களிடம் இருந்து கட்டணங்களை வசூலிக்கின்றன.
குறிப்பாக டெபிட் கார்டு பயன்பாட்டுக் கட்டணம், ஏடிஎம் வசதி, கணக்கு பராமரித்தல் ஆகியவற்றுக்கு தனித்தனி கட்டணங்கள் வசூலிக்கின்றன. சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பைப் பராமரித்தல், எஸ்எம்எஸ் அலர்ட் ஆகியவற்றுக்கான கட்டணங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
‘டெபிட் கார்டு’ கட்டணம்
பொதுத் துறை வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கும் பல்வேறு கட்டணங்கள் குறித்து மத்திய நிதி அமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவிக்கையில், ‘டெபிட் கார்டு கட்டணம் என்பது ஆண்டு முழுவதும் பாரமரிப்பதற்கான கட்டணம். இதன் மூலம், டெபிட் கார்டு சேவைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பு பராமரிப்பு செலவுகளை வங்கிகள் ஈடுகட்ட உதவும். கார்டுகள் வழங்குதல், நிர்வகித்தல், மாற்றித் தருதல், மென்பொருள் பராமரிப்பு மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றைச் சமாளிக்க உதவுகிறது.
பாதுகாப்பான டெபிட் கார்டு பரிவர்த்தனைகளை உறுதி செய்தல், மோசடிகளைக் கண்காணித்து தடுத்தல், டெபிட் கார்டுகள் மூலம் இணையவழிப் பரிமாற்றத்தை எளிதாக்குதல், விற்பனை முனையங்கள் மற்றும் காலாவதியான கார்டுகளைப் புதுப்பித்தல் ஆகிய மேலாண்மைச் செலவுகளை ஈடுகட்ட இந்தக் கட்டணங்கள் உதவுகின்றன.
12 பொதுத்துறை வங்கிகள் சேர்ந்து 2021-22-ம் ஆண்டில், டெபிட் கார்டு கட்டணமாக வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.3,905.50 கோடி வசூலித்துள்ளன. இது 20225-26-ம் ஆண்டில் 93.7% அதிகரித்து ரூ.7,563.80 கோடியாக உயர்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2021-22-ம் ஆண்டில் நபர் ஒருவருக்கு டெபிட் கார்டு கட்டணமாக ரூ.61 வசூலித்த நிலையில், 2025-26-ம் ஆண்டில் 88.8% சதவீதம் அதிகரித்து, கார்டு ஒன்றுக்கு ரூ.115.10 வசூலிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளின் இதர கட்டணங்கள்
மாநிலங்களவையில் மத்திய நிதிஅமைச்சகம் அளித்த பதிலில், ‘வங்கிகள், வாடிக்கையாளர்களிடம் இருந்து ஏடிஎம் கட்டணம் மற்றும் கணக்கு பராமரிப்புக் கட்டணங்களை வசூலிக்கின்றன’ எனத் தெரிவித்தது.
ஏடிஎம் கட்டணம் என்பது ஏடிஎம் மூலம் பணம் எடுத்தால், பணம் எடுத்தலுக்கான கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலிக்கும் வங்கியின் வருமானம். மற்ற வங்கிகளிடம் இருந்தும் பெறும் பரிமாற்றக் கட்டணமும் இதில் அடங்கும்.
பரிமாற்றக் கட்டணம் என்பது ஒரு குறிப்பிட்ட வங்கியின் ஏடிஎம் கார்டு வைத்திருக்கும் ஒருவர் அதே வங்கி ஏடிஎம்மில் பணம் எடுக்காமல் வேறு வங்கி ஏடிஎம்மில் பணம் எடுத்தால், வங்கிகளுக்கு இடையே வழங்கப்படும் கட்டணம்.
ஏடிஎம் கட்டணங்கள் மூலம் ஒரு வங்கி ஆண்டுதோறும் ஈட்டும் நிகரத் தொகையானது, வாடிக்கையாளர்கள் மற்றும் பிற வங்கிகளிடமிருந்து பெறும் வருவாயிலிருந்து, பிற வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய தொகையைக் கழித்த பின் எஞ்சியிருக்கும் தொகையாகும். எஸ்பிஐ வங்கி தவிர பெரும்பாலான பொதுத் துறை வங்கிகளுக்கு நிகரத் தொகை மைனசில்தான் இருக்கிறது.
இரண்டாவதாக கணக்கு பராமரிப்புக் கட்டணம். பெரும்பாலான பொதுத் துறை வங்கிகள் இந்தக் கட்டணத்தை நிறுத்திவிட்டன என்று கூறினாலும் புள்ளிவிவரங்களில் அவ்வாறு இல்லை. எஸ்பிஐ வங்கி மட்டும் நடப்புக் கணக்கு உள்ளிட்ட சில கணக்கை பராமரிக்க மட்டும் கட்டணம் வசூலிப்பதாக தெரிவிக்கிறது.
மினிமம் பேலன்ஸ் அபராதம் ஏன்?
ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் வாடிக்கையாளர் தன்னுடைய சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச தொகையை பராமரிக்க தவறும்பட்சத்தில் வங்கிகள் விதிக்கும் அபராதமாகும். சேமிப்பு கணக்கில் இருப்புத் தொகை குறைந்தபட்ச வரம்புக்குக் கீழே ஒருமுறை மட்டும் சரிந்து, பின்னர் விரைவில் மீண்டும் உயர்ந்த நிலையை அடைந்தால், கட்டணம் இல்லை.
செயலாக்கச் செலவு, கடன் வழங்கும் செயல்பாடுகள், பணம் பராமரித்தல் ஆகியவற்றை சமாளிக்க இந்த வகைக் கட்டணங்கள் வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்து பயன்படுத்தப்படுகின்றன.
ரிசர்வ் வங்கி விடுத்த அறிவிப்பில், ‘குறைந்தபட்ச தொகையை ஒரு வாடிக்கையாளர் பராமரிக்காவிட்டால், அதற்கான கட்டணம் விதித்தல் என்பது வங்கியின் நிர்வாக ரீதியான கொள்கைகளுக்கு உட்பட்டது. அந்தக் கட்டணம் நியாயமாகவும், வெளிப்படையாகவும், சேவைகளுக்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சகம் அளித்த பதிலில், ‘12 பொதுத் துறை வங்கிகளில் 10 வங்கிகள் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு பராமரிக்காததற்கு வாடிக்கையாளர்களிடம் அபராதம் வசூலிப்பதில்லை. 2 வங்கிகள் மட்டுமே வசூலிக்கின்றன’ எனத் தெரிவித்துள்ளது.
ஆனால், 2025-26-ம் நிதி ஆண்டில் 12 வங்கிகளுமே இந்தக் கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 11 வங்கிகள் குறைவாகவும், எஸ்பிஐ வங்கி மட்டும் அதிகமாக வசூலித்துள்ளது. எஸ்பிஐ வங்கி கடந்த 2021-22 முதல் 2025-26 வரை ரூ.1,598 கோடி அபராதமாக திரட்டியுள்ளது.
கடந்த 4 நிதியாண்டுகளில் 12 பொதுத் துறை வங்கிகள், வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச தொகையை பராமரிக்கவில்லை என்பதற்காக ரூ.10,230.75 கோடி அபராதமாக வசூலித்துள்ளன.
21 தனியார் வங்கிகள் சேர்ந்து 4 நிதியாண்டுகளில் ரூ.15,939.62 கோடி வசூலித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதில் எச்டிஎஃப்சி வங்கி மட்டும் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.5,668 கோடி வசூலித்துள்ளது. அதைத் தொடர்ந்து, ஆக்சிஸ் வங்கி ரூ.3,786 கோடியை வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூலித்துள்ளன.
ஏடிஎம் கட்டணங்கள் எவ்வளவு?
ரிசர்வ் வங்கி விடுத்த அறிவிப்பில், 2025 மே 1-ம் தேதியில் இருந்து மாதத்துக்கு குறிப்பிட்ட இலவச எண்ணிக்கைக்கு மேலாக ஏடிஎம் மூலம் பணம் எடுத்தால் அதற்கு வாடிக்கையாளர் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஒவ்வொரு வங்கியும் தனது வாடிக்கையாளருக்கு மாதத்துக்கு 5 முறை கட்டணமில்லாமல் தங்கள் ஏடிஎம்களில் பணம் எடுக்க, பேலன்ஸ் பார்க்க அனுமதிக்கின்றன. அதற்கு மேல் ஏடிஎம்களை பயன்படுத்தி பணம் எடுத்தாலோ, பேலன்ஸ் பார்த்தாலோ ஒவ்வொரு பரிமாற்றத்துக்கும் ரூ.23 கட்டணமாக வசூலிக்கப்படும்.
‘எஸ்எம்எஸ் அலர்ட்’
ரிசர்வ் வங்கி உத்தரவின்படி, வாடிக்கையாளர்களிடம் இருந்து எஸ்எம்எஸ் அலர்ட்டுக்கு வங்கிகள் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு கடந்த மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கு முன் காலாண்டுக்கு ஒருமுறை வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.15 முதல் ரூ.18 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது விதிக்கப்பட்டுள்ள தடையால் வங்கிகளுக்கு ரூ.300 கோடி வரை இழப்பு ஏற்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.