Published : 31 May 2023 09:55 PM
Last Updated : 31 May 2023 09:55 PM

வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற எடுத்து வரும் நடவடிக்கைகள் என்னென்ன? - அரசு விளக்கம்

சென்னை: நடப்பு 2023-24ம் ஆண்டில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் 15 வகையான வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக அரசு ரூ.45 லட்சம் நிதியினை ஒப்பளித்து, அரசாணை வழங்கி, அதற்கான பணியை துவக்கி உள்ளது என்று தமிழக வேளாண் மற்றும் உழவர் நலன்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாகுபடி செலவினைக் குறைத்து, மகசூலை அதிகரித்து, விவசாயிகளின் வருமானம் உயர்வதற்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவித்து வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இந்த வகையில், நமது மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பாரம்பரியமாக சாகுபடி செய்யப்பட்டு வரும் பயிர்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு அரசு எடுத்துவரும் நடவடிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

புவிசார் குறியீடு என்றால் என்ன? குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே உற்பத்தியாகி, சுவை, மணம், ஊட்டச்சத்து போன்று பல்வேறு வகைகளில் சிறப்புத் தன்மையுடன் விளங்கும் பொருட்களுக்கு புவிசார் குறியீட்டுச் (பதிவு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 1999ன்படி, புவிசார் குறியீட்டிற்கான விபரங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதன் மூலம் அந்தந்தப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு சட்டரீதியாக ஒரு பாதுகாப்பு கிடைப்பதுடன் அப்பொருட்களின் மதிப்பு அகில உலக அளவில் உயர்கிறது.

வேளாண் விளைபொருளுக்கு புவிசார் குறியீடு கிடைத்தால் என்ன பயன்? கம்பம் பன்னீர் திராட்சை, ராமநாதபுரம் குண்டு மிளகாய், மதுரை மல்லிகை போன்ற சிறப்புத் தன்மை வாய்ந்த விளைபொருள்கள் அந்தந்த பகுதிகளில் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. இவ்விளைபொருட்கள் தனிச் சுவை, மணம், குணம், பாரம்பரியமிக்க தரத்துடன் சிறப்பு பெறுகின்றன.

எனவே, இதுபோன்ற வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைப்பதால், அப்பொருட்களின் தரம் அகில உலக அளவில் பறைசாற்றப்பட்டு, இப்பொருட்களுக்கு சட்டரீதியாக தனி அங்கீகாரம் கிடைக்கிறது. கலப்படமுள்ள பொருட்களை மக்கள் எளிதில் அறிந்து கொள்ள இயலும். இவ்விளைபொருட்களின் உற்பத்தி குறிப்பிட்ட பகுதிகளை மட்டுமே சார்ந்து இருப்பதால், இப்பகுதி விவசாயிகள் இப்பயிர் இரகங்களை அதிகளவில் சாகுபடி செய்ய முன்வருவார்கள். இதனால், உற்பத்தி அதிகரித்து, விற்பனை வாய்ப்புகளும் அதிகரிக்கும். இத்தகைய பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளிடையே ஒரு தன்னம்பிக்கை உருவாகி, அந்தப் பகுதிகளின் ஒட்டு மொத்த பொருளாதாரம் உயர்கிறது.

புவிசார் குறியீடு பெறுவதில் தமிழ்நாடு முன்னணி: வேளாண் விளைபொருள் மட்டுமல்லாது, 55 வகையான பொருட்களுக்கு புவிசார் குறியீட்டுப் பதிவினை மேற்கொண்டு, தமிழகம் அகில இந்திய அளவில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. இதில் விருப்பாச்சி மலை வாழை, மதுரை மல்லி, கொடைக்கானல் மலைப்பூண்டு, ஈரோடு மஞ்சள் போன்ற 17 பொருட்கள் வேளாண் விளைபொருட்களாக இருப்பது விவசாயிகளுக்கு ஊக்கம் அளிப்பதாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு வகையான விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு சீரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்: வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீட்டின் முக்கியத்துவத்தை உணர்ந்த தமிழக அரசு, கடந்த ஆண்டில் பண்ருட்டி பலா, பண்ருட்டி முந்திரி, விருதுநகர் சாத்தூர் சம்பா வத்தல், மதுரை சோழவந்தான் வெற்றிலை, பெரம்பலூர் செட்டிகுளம் சின்ன வெங்காயம், தூயமல்லி அரிசி, புளியங்குடி எலுமிச்சை, சேலம் கண்ணாடி கத்தரி, ராமநாதபுரம் சித்திரைக் கார் அரிசி, கவுந்தப்பாடி அச்சுவெல்லம் போன்ற 10 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக, ரூ.30 லட்சம் நிதியை ஒதுக்கியது. வரலாற்றுச் சிறப்புமிக்க விபரங்களையும், அறிவியல் சார்ந்த தகவல்களையும் சம்பந்தப்பட்ட பகுதி விவசாயிகளிடமிருந்தும், பல்வேறு நூல்களிலிருந்தும் சேகரித்து, சென்னை கிண்டியில் உள்ள அறிவுசார் சொத்துரிமைப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை, சோழவந்தான் வெற்றிலைக்கு மட்டும் புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது. இதர விளைபொருட்களுக்கும் புவிசார் குறியீடு பெற அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

தொடர்ந்து, நடப்பு 2023-24ம் ஆண்டில், கிருஷ்ணகிரி அரசம்பட்டி தென்னை, கிருஷ்ணகிரி பன்னீர் ரோஜா, தஞ்சாவூர் பேராவூரணி தென்னை, திருப்பூர் மூலனூர் குட்டை முருங்கை, சாத்தூர் வெள்ளரி, தஞ்சாவூர் வீரமாங்குடி அச்சு வெல்லம், தூத்துக்குடி விளாத்திகுளம் மிளகாய், கடலூர் கோட்டிமுளை கத்தரி, மதுரை செங்கரும்பு, சிவகங்கை கருப்புக்கவுனி அரிசி, ஜவ்வாது மலை சாமை, கரூர் சேங்கல் துவரை, திண்டிவனம் பனிப்பயறு, விருதுநகர் அதலைக்காய், கன்னியாகுமரி ஆண்டார்குளம் கத்தரி போன்ற 15 வகையான வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்காக அரசு ரூ.45 லட்சம் நிதியினை ஒப்பளித்து, அரசாணை வழங்கி, அதற்கான பணியை துவக்கி உள்ளது.

புவிசார் குறியீட்டிற்கான அரசு அறிவிப்பு வெளியான உடனேயே சம்பந்தப்பட்ட பகுதி விவசாயிகள் அதிக உற்சாகத்துடன், அரசின் நடவடிக்கைகளை பாராட்டியுள்ளதோடு, அதிக பரப்பளவில் சாகுபடி செய்வதற்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். புவிசார் குறியீடு பெற அரசு நடவடிக்கை எடுத்ததன் விளைவாக, இம்மாவட்ட விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களுக்கு உள்நாடு மட்டுமல்லாது அகில உலக அளவில் சட்டரீதியாக அங்கீகாரம் கிடைத்து, ஏற்றுமதிக்கான வாய்ப்பு அதிகரித்து, இம்மாவட்ட விவசாயிகளின் வருமானம் கணிசமாக உயரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x