Published : 20 Apr 2023 07:01 AM
Last Updated : 20 Apr 2023 07:01 AM

இந்தியாவின் எதிர்கால கனவு மற்றும் வளர்ச்சி திட்டங்களில் முதலீடு: பிரதமர் மோடியிடம் ஆப்பிள் தலைமை நிர்வாகி டிம் குக் உறுதி

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசிய ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக்.

புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, அவர் இந்தியாவில் அதிக முதலீடுகளை செய்ய உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்.

டிம் குக், ஏழு ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை மும்பையில் அமைக்கப்பட்டுள்ள ஆப்பிளின் முதல் சில்லறை விற்பனையகத்தை அவர் தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து டெல்லியில் ஆப்பிளின் மற்றொரு விற்பனையகத்தை அவர் இன்று திறந்து வைக்கவுள்ளார்.

இந்த நிலையில், டெல்லியில் பிரதமர் மோடியை டிம் குக் நேற்று சந்தித்துப் பேசினார். இதுதொடர்பாக டிம் குக் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “பிரதமரின் அன்பான வரவேற்பிற்கு நன்றி. தொழில்நுட்பம், கல்வி, டெவலப்பர், உற்பத்தி, சுற்றுச்சூழல் உள்ளிட்ட இந்தியாவின் எதிர்கால கனவு மற்றும் வளர்ச்சித்திட்டங்களில் முதலீடு செய்ய உறுதிபூண்டுள்ளோம்’’ என்று தெரிவித்துள்ளார். அத்துடன் பிரதமர் மோடியுடன் கைகுலுக்கும் புகைப்படத்தையும் ட்விட்டரில் டிம் குக் பகிர்ந்துள்ளார்.

உள்நாட்டில் அதிகரிப்பு

டிம் குக் இறுதியாக கடந்த 2016-ல் இந்தியாவுக்கு வருகை தந்தார். அப்போது முதற்கொண்டு, ஆப்பிள் நிறுவனம் தனது செயல்பாட்டை இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியது.

ஆன்லைன் ஸ்டோர்

ஆப்பிள் நிறுவனம் 2020-ல் இந்தியாவில் தனது ஆன்லைன் ஸ்டோரை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு, நேரடி சில்லறை விற்பனையகங்களை திறக்க தீவிரமாக முயற்சி மேற்கொண்டது. ஆனால்,கரோனா தொற்று காரணமாக அந்த நிறுவனம் திட்டமிட்டபடி 2021-ல் விற்பனையகங்களை இந்தியாவில் அமைக்க முடியவில்லை.

ஆனால், தற்போது அந்நிறுவனம் மும்பை, டெல்லி ஆகிய முக்கிய இரு நகரங்களில் சொந்த விற்பனையகங்களை பல கோடி செலவில் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x