Published : 16 Sep 2017 10:43 AM
Last Updated : 16 Sep 2017 10:43 AM

நேரடி மானியத் திட்டத்தின் மூலம் மத்திய அரசு ரூ.57,000 கோடி சேமிப்பு: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்

நேரடி மானியத் திட்டத்தின் (டிபிடி) மூலம் மத்திய அரசு ரூ.57,000 கோடியை சேமித்துள்ளது என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு செயல்படுத்தும் 84 மானியத் திட்டத்தின் மூலம் 33 கோடி பேர் பயனடைந்ததாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஹரியாணாவில் நடந்த டிஜிட்டல் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ரவி சங்கர் பிரசாத் மேலும் கூறியதாவது: பல்வேறு அரசு திட்டங்களை நேரடி மானியத்திட்டத்தின் மூலம் வழங்கியதால் மத்திய அரசு ரூ.57,000 கோடியை சேமித்துள்ளது. நேரடி மானியத் திட்டம் அறிமுகப்படுத்துவதற்கு முன்னால் இடைத்தரகர்கள் இந்த பணத்தை தங்களது பைகளுக்குள் போட்டு வந்தனர். தற்போது அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதித் திட்டம் நேரடி மானியத் திட்டத்தோடு இணைக்கப்பட்டது. இதனால் பயனாளிகளின் வங்கி கணக்குக்கு பணம் சென்றது. ஆதார் எண்ணை டிரை விங் லைசென்ஸோடு இணைப்பதற்கு மொழியப்பட்டுள்ளது. இதன்மூலம் பல லைசென்ஸ்கள் விநியோகிப்பதையும் பயன்படுத்துவதையும் தடுக்க முடியும்.

ஆதார் கார்டு மிக பாதுகாப்பானது. அதில் கண்ணின் கருவிழி மற்றும் கைரேகைகள் பதியப்பட்டுள்ளன. என்னுடைய ஆதார் கார்டை நீங்கள் பார்த்தால், என் பெயர், என் பாலினம் ஆகியவை முன்பகுதியில் இருக்கும். பின்பக்கம் பார்த்தால் என்னுடைய நிரந்தர முகவரி இருக்கும். என்னுடைய மதம், என்னுடைய பெற்றோர், கல்வி தகுதி, வருமானம் ஆகியவை இருக்காது. உங்களின் வேறு எந்த தகவலும் ஆதார் கார்டில் இருக்காது.

70 லட்சம் வேலை வாய்ப்புகள்

இந்தியாவில் வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தால் 2020-ம் ஆண்டுக்குள் 50 முதல் 70 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாகும். மத்திய அரசு நாட்டை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்வதில் உறுதியாக இருக்கிறது. அதே நேரத்தில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் மத்திய அரசு கவனமாக இருந்து வருகிறது. அனைத்து வாய்ப்புகளும் எல்லோருக்கும் போய் சேரவேண்டும் என்பதில் மத்திய அரசு தெளிவாக இருக்கிறது. ஹரியாணாவில் முதன் முதலாக சைபர் பாதுகாப்பு கொள்கையை கொண்டுவந்ததற்கு நான் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். எலெக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி மையமாக ஹரியாணா மாநிலம் உருவாவதற்கு அனைத்து ஆற்றல்களும் உள்ளன. ஹரியாணாவில் உள்ள கிராமங்களை டிஜிட்டல் கிராமங்களாக அரசுடன் சேர்ந்து மாற்றுவதற்கு தொழில்முனைவோர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x